2024 ரீவைண்ட்: டிரம்ப் vs கமலா - கொலை முயற்சி முதல் தேர்தல் வெற்றி வரை.. உலக வல்லரசில் அரசியல் கூத்து
- கடந்த ஜூன் 27 ஆம் தேதி டிரம்ப் - பைடன் இடையிலான விவாதத்தின்போது வெளிப்பட்டது
- 277 எல்க்டோரல் வாக்குகள் பெற்று அமெரிக்க அதிபர் பதவியை குடியரசு கட்சி வேட்பாளர் டொனல்டு டிரம்ப் வென்றெடுத்தார்.
உலக வல்லரசான அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடந்துமுடிந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் வெற்றி பெற்று ஜோ பைடன் அதிபர் பதவி வகித்து வருகிறார். துணை அதிபராக இந்திய - ஆபிரிக்க வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் இருந்து வருகிறார்.
இரு கட்சி ஆட்சி முறை கொண்ட அமெரிக்காவில் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கு இடையில் தான் போட்டி. அந்த வகையில் குடியரசு கட்சி சார்பில் இந்த வருடம் நடந்த அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வேட்பாளராக நின்றார்.
கடந்த 2016 முதல் 2020 வரை அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப் 2020 தேர்தலில் ஜோ பைடனிடம் தோற்ற நிலையில் இந்த தேர்தலில் மீண்டும் அவரை எதிர்த்து நின்றார். ஆனால் இந்த முறை அவரை எதிர்க்க ஜோ பைடன் திணறினர். 82 வயதாகும் ஜோ பைடன் வயது மூப்பு காரணமாக ஞாபக மராத்தி உள்ளிட்ட பிரச்சனைகளால் பொது வெளியில் பரவலாக விமர்சனங்களை ஏற்படுத்தினார்.
இது கடந்த ஜூன் 27 ஆம் தேதி டிரம்ப் - பைடன் இடையிலான விவாதத்தின்போது பெரிதும் வெளிப்பட்டது. சொந்த கட்சியினரே பைடன் அதிபர் வேட்பாளராக இருக்க வேண்டுமா என்று யோசித்தனர்.
இதற்கு மத்தியில் பைடன் ஜூலை 21 அன்று தான் அதிபர் ரேஸில் இருந்து விலகுவதாகவும், தனக்கு பதிலாக துணை அதிபர் கமலா ஹாரிஸை வேட்பாளராக முன்மொழிவதாகவும் அறிவித்தார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் டிரம்ப் உடனான விவாதங்களிலும், தனது பிரச்சாரங்களிலும் அழுத்தமான பேச்சுகளால் ஜனநாயக கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்ந்தார்.
ஆனால் இந்த முறை டிரம்ப் மீது நடந்த கொலை முயற்சிகள் அவருக்கு பெரும் அனுதாப அலையை சம்பாதித்து கொடுத்தன. கடந்த ஜூலை 13 ஆம் தேதி பென்சில்வேனியா மாகாணத்தில் டிரம்ப் பேரணியில் பேசிக்கொண்டிருந்தபோது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடந்தது.
தலையை லேசாக அசைத்ததால் துப்பாக்கி குண்டு அவரது வலது காதின் மேற்பகுதியை உரசிச் சென்றது. இதில் அவர் உயிர்தப்பிய நிலையில் அவரை சுட்ட மாத்தியூ க்ரூக்ஸ் என்ற 20 வயது இளைஞர் அந்த இடத்திலேயே பாதுகாப்பு அதிகரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
தொடர்ந்து கடந்த செப்டம்பர் 15 ஆம் தேடி தனக்கு சொந்தமான மைதானத்தில் கோல்ப் விளையாடிக்கொண்டுருந்த டிரம்ப் மீது இரண்டாவது கொலை முயற்சி நடந்தது. இதிலும் டிரம்ப் தப்பித்த நிலையில் தூரத்தில் வேலிக்கு அருகில் இருந்து குறிவைத்த 58 வயதான ரயான் வெஸ்லி ரூத் தப்பியோடும்போது கைது செய்யப்பட்டார்.
டிரம்பின் செல்வாக்கு இந்த கொலை முயற்சிகளுக்குப் பின் அதிகரிக்கத்தொடங்கிய நிலையில் உலகப் பணக்காரருக்கும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், உள்ளிட்டவற்றின் நிறுவனருமான எலான் மஸ்க் டிரம்புக்கு ஆதரவு தெரிவித்து சுமார் 270 மில்லியன் டாலர் வரை நன்கொடை வழங்கினார்.
வாக்குப்பதிவுக்கு சில வாரங்கள் முன்பிருந்தே நாள் ஒன்றுக்கு ஒரு அதிர்ஷ்டசாலிலுக்கு 1 மில்லியன் டாலர் என வெளிப்படையாக வாக்காளர்களுக்கு பணம் வழங்கினார்.
இருந்தபோதிலும் டிரம்புக்கு கடுமையான சவாலாக கமலா ஹாரிஸ் விளங்கினார். கமலா குறித்து தனிப்பட்ட முறையிலும் கடுமையாக டிரம்ப் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.
இருப்பினும் பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார் என்றே கணிக்கப்பட்டது. இறுதியாக தேர்தலும் வந்தது.
வாக்கு எண்ணிக்கையில் கமலா ஹாரிஸின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் தகர்ந்தன. கருத்துக்கணிப்புகளுக்கு மாறாக டிரம்ப் ஆரம்பத்திலிருந்தே முன்னிலை வகித்தார். 50 மாகாணகளில் மொத்தம் உள்ள 538 எலக்டோரல் வாக்குகளில் 270 க்கு மேல் பெறுபவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படும்.
அந்த வகையில் 277 எல்க்டோரல் வாக்குகள் பெற்று அமெரிக்க அதிபர் பதவியை குடியரசு கட்சி வேட்பாளர் டொனல்டு டிரம்ப் வென்றெடுத்தார்.
ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 224 எல்க்டோரல் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார். பராமரியமாக டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு வாக்களிக்கும் மாகாணங்கள் ரெட் ஸ்டேட்டஸ் என்றும் கமலாவின் ஜனநாயக கட்சிக்கு வாக்களிக்கும் மாகாணங்கள் புளு ஸ்டேட்டஸ் என்றும் அழைக்கப்படும்.
இரண்டு கட்சிக்கும் மாறி மாறி வாக்களித்து இழுபறி ஏற்படுத்தும் மாகாணங்கள் ஸ்விங் ஸ்டேட்ஸ் என்று அழைக்கப்படும். வட கரோலினா, பென்சில்வேனியா, அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, விஸ்கான்சின் ஆகியவை ஸ்விங் மாகாணங்கள்.
அந்த இழுபறி மாகாணங்களில் அனைத்திலும் டிரம்ப் வெற்றி பெற்றார். இதன்மூலம் 47வது அமெரிக்க அதிபராக அடுத்த மாதம் [ஜனவரி] 20 ஆம் தேதி வாக்கில் டிரம்ப் பதவியேற்க உள்ளார்.
பாலஸ்தீனம் - இஸ்ரேல் போர், உக்ரைன் - ரஷியா போர் ஆகியவற்றை முடிவுக்கு கொண்டுவருவேன் என்று கூறும் டிரம்ப் மற்ற நாடுகளுடன் வரி விதிப்பு விவகாரங்களில் தற்போதிருந்தே கறார் காட்டி வருகிறார்.