2024 ரீவைண்ட்: 100 கிராம் எடையால் பறிபோன வினேஷ் போகத்தின் ஒலிம்பிக் பதக்கம்
- காலிறுதிக்கு முந்தைய போட்டியில் 82 போட்டிகளில் தோல்வியடையாத வீராங்கனையை வீழ்த்தினார்.
- இறுதிப் போட்டிக்கு முன்னதாக எடை கூடுதலாக இருக்கிறது என தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனையாக திகழ்ந்தவர் வினேஷ் போகத். மத்திய அமைச்சருக்கு எதிரான பாலியல் தொடர்பான குற்றச்சாட்டில் போராட்டம் நடத்திய முக்கிய வீராங்கனைகளில் ஒருவர் இவர். இதனால் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றார்.
50 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வினேஷ் போகத், ஜப்பானின் யூ சுசாகியை எதிர் கொண்டார். இதில் 3-2 என்ற புள்ளிக்கணக்கில் வினேஷ் போகத் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். யூ சுசாகி இந்த போட்டிக்கு முன் 82 சர்வதேச போட்டிகளில் தோல்வியடையாமல் வெற்றி வாகை சூடி வந்தார். அவர் முதன்முறையாக வீழ்த்தினார்.
அரையிறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபனை எதிர்கொண்டார். இதில் கியூபா வீராங்கனை குஸ்மானை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இதனால் இந்தியாவுக்கு வெள்ளி அல்லது தங்க பதக்கத்தை உறுதி செய்தார்.
அப்போதுதான் வினேஷ் போகத் வாழ்க்கையில் விதி விளையாடியது. இறுதி போட்டிக்கு முன்னதாக அவரது எடை சரிபார்க்கப்பட்டது. அப்போது 100 கிராமுக்கு சற்று கூடுதலாக எடை அதிகமாக இருந்தது. இரவு முழுவதும் கடுமையான முயற்சி மேற்கொண்டும் எடையை குறைக்க முடியவில்லை. 100 கிராம் எடை அதிகமாக உள்ளது. இதனால் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான தகுதியை இழந்தார். அத்துடன் இவருக்கு பதக்கம் வழங்கப்படாது என ஒலிம்பிக் நிர்வாகம் அறிவித்தது.
இந்திய ஒலிம்பிக் சங்கம் அதிகாரிகள் எவ்வளவு போராடியும் பலன் கிடைக்கவில்லை. விளையாட்டுக்கான தீர்ப்பாயத்தில் முறையிட்டும் பலன் கிடைக்கவில்லை. இறுதியாக பதக்கம் இல்லாமல் ஏமாற்றத்துடன் இந்தியா திரும்பினார்.
அவரது சொந்த ஊரில் பதக்கம் பெற்ற அளவிற்கு உற்சாக வரவேற்பு கிடைத்தது. அத்துடன் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரியானா மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சியில் இணைந்ததால் விமர்சனத்திற்கு உள்ளானார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவரை சந்தித்த இந்திய தடகள சங்கத் தலைவர் பி.டி. உஷா அவருக்கு ஆறுதல் கூறினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் அவர் வெளியிட்டார். மேலும், வினேஷ் போகத்திற்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனக் கூறியிருந்தார்.
அதற்கு தன்னுடைய அனுமதி இல்லாமல் பி.டி. உஷா படம் எடுத்து வெளியிட்டுள்ளார் என வினேஷ் போகத் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
பாரிஸ் நகரில் எனக்கு என்ன ஆதரவு கிடைத்தது என தெரியவில்லை. பி.டி. உஷா என்னை சந்தித்தார். அப்போது ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார். அரசியலில் பூட்டிய கதவுக்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதுபோல் பாரிஸிலும் அரசியல் நடந்தது. இதனால் எனது மனம் உடைந்தது. மல்யுத்தத்தை விட வேண்டாம் என பலர் கூறினர். ஆனால், எதற்காக நான் அதனை தொடர வேண்டும். அனைத்து இடங்களிலும் அரசியல் உள்ளது.
நான் மருத்துவமனையில் இருந்தபோது வெளியில் என்ன நடந்தது என தெரியவில்லை. வாழ்க்கையில் கடினமான கட்டத்தை கடந்து கொண்டு இருந்தேன். அப்போது, எனக்கு ஆதரவு தருவதுபோல் உலகத்திற்கு காட்டுவதற்காக, பி.டி. உஷா என்னிடம் அனுமதி கேட்காமல் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து, நான் உங்களுடன் இருக்கிறேன் எனக்கூறுகிறார். இப்படியா ஒருவர் ஆதரவு தருவார்கள். இது வெறும் நடிப்பு. சரியான நடவடிக்கை இல்லை.
இவ்வாறு வினேஷ் போகத் கூறினார்.