2024 ரீவைண்ட்: பிரியாணி முதல் தோசை வரை.. இந்தாண்டு ஸ்விக்கியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள்
- ஸ்விக்கியில் இந்திய அளவில் காலை உணவு ஆர்டர்களில் தென்னிந்திய உணவுகளே ஆதிக்கம் செலுத்தியுள்ளன.
- அதிகபட்சமாக காலை உணவுகளில் 85 லட்சம் தோசைகளும் 78 லட்சம் இட்லிகளும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன
இந்தியாவில் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமாக இருக்கும் ஸ்விக்கியில் இந்தாண்டு அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
2024 ஜனவரி 1 முதல் 2024 நவம்பர் 22 வரைக்கும் ஸ்விக்கியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலில் பிரியாணி தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது. இந்தாண்டில் மட்டும் 8.3 கோடி பிரியாணி ஆர்டர்கள் ஸ்விக்கியில் குவிந்துள்ளன. சொல்லப்போனால் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 158 பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக ஹைதராபாத்தில் 97 லட்சம், பெங்களூருவில் 77 லட்சம், சென்னையில் 46 லட்சம் பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக இந்தாண்டு ரம்ஜான் தினத்தன்று அதிகபட்சமாக 60 லட்சம் பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
2024ல் ஸ்விக்கியில் நள்ளிரவு 12 மணி முத்தம் 2 மணி வரை அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் பட்டியலில் பிரியாணி 2-ம் இடத்தை பிடித்துள்ளது. இப்பட்டியலில் பர்கர் முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்விக்கியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலில் 2.3 கோடி ஆர்டர்களுடன் தென்னிந்திய உணவான தோசை 2-ம் இடத்தை பிடித்துள்ளது னைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஸ்விக்கியில் இந்திய அளவில் காலை உணவு ஆர்டர்களில் தென்னிந்திய உணவுகளே ஆதிக்கம் செலுத்தியுள்ளன. அதிகபட்சமாக காலை உணவுகளில் 85 லட்சம் தோசைகளும் 78 லட்சம் இட்லிகளும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. பெங்களூரில் மட்டும் காலையில் அதிகபட்சமாக 25 லட்சம் தோசைகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.
மேலும் இந்தாண்டு அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட Snacks வகைகளில் 24.8 லட்சம் ஆர்டர்களுடன் சிக்கன் ரோல் முதலிடத்தை பிடித்துள்ளது. 16.3 லட்சம் ஆர்டர்களுடன் மோமோஸ் 2ம் இடத்தில் உள்ளது. 13 லட்சம் ஆர்டர்களுடன் பொடேடோ ப்ரைஸ் 3-ம் இடத்தில உள்ளது.
ஸ்விக்கியில் இந்தாண்டு மத்திய உணவை விட இரவு உணவை தான் அதிகம் பேர் ஆர்டர் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தாண்டு ஸ்விக்கி டெலிவரி பார்ட்னர்கள் 196 கோடி கிலோமீட்டர்கள் பயணம் செய்துள்ளனர். இது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 533,000 முறை பயணம் செய்வதற்கு சமம் ஆகும்.
மும்பையை சேர்ந்த கபில் குமார் பாண்டே என்ற ஆண் டெலிவரி பார்ட்னர் இந்த ஆண்டு அதிகபட்சமாக 10,703 உணவு ஆர்டர்களை எடுத்துள்ளார். அதேபோல் கோவையை சேர்ந்த காளீஸ்வரி என்ற பெண் டெலிவரி பார்ட்னர் அதிகபட்சமாக 6,658 உணவு ஆர்டர்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.