உலகம் முழுவதும் முடங்கிய எக்ஸ் தளம்.. சம்பவம் செய்த உக்ரைன் - சவடால் விட்ட எலான் மஸ்க் கதறல்
- தான் மட்டும் இந்த சேவையை நிறுத்தினால் உக்ரைன் நாடு முடங்கும் என எலான் மஸ்க் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கிக்கு மிரட்டல் விடுத்திருந்தார்.
- ரஷியா- உக்ரைன் போர் தொடர்பாக ஜெலன்ஸ்கிக்கும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
உலகம் முழுவதும் எக்ஸ் தளம் (ட்விட்டர்) நேற்று (மார்ச் 10) ஒரே நாளில் மூன்று முறை முடங்கியது.
சமூக வலைதளங்கள், இணையதளங்களின் முடக்கங்களைக் கண்காணிக்கும் Downdetector.com தரவுகளின் படி நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் முதல்முறையாக எக்ஸ் தளம் முடங்கியது. 20 நிமிடங்கள் கழித்து 3.45 மணிக்கு பிரச்சினை சரிசெய்யப்பட்ட நிலையில் மீண்டும் மாலை 7 மணிக்கு எக்ஸ் தளம் முடங்கியது.
அதன்பின் மீண்டும் சரிசெய்யப்பட்டபோதும் மூன்றாவது முறையாக 8.45 மணிக்கு மீண்டும் தளத்தின் செயல்பாடுகள் முடங்கின. பல மணி நேரம் இந்த முடக்கம் நீடித்தது.
இந்நிலையில் எக்ஸ் தளத்தின் மீது சைபர் தாக்குதல் நடந்துள்ளதாகவும், இதன் பின்னணியில் உக்ரைன் உள்ளதாகவும் எக்ஸ் தளத்தின் முதலாளி எலான் மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார்.
ஃபாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்துக்கு மஸ்க் அளித்தப் பேட்டியில், "எக்ஸ் தளத்தின் மீது மிகப்பெரிய சைபர் தாக்குதல் நடந்துள்ளது. அந்தத் தாக்குதல் உக்ரைன் பகுதியில் இருந்து நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கணினியின் ஐபி முகவரி உக்ரைன் நாட்டில் இருந்தே அது நிகழ்த்தப்பட்டுள்ளதாகக் காட்டுகிறது" என்று தெரிவித்தார்.
முன்னதாக தனது எக்ஸ் பதிவில் அவர், "எக்ஸ் தளத்தின் மீது அன்றாடம் தாக்குதல் நடத்தப்படுகிறது. ஆனால் இது மிகப்பெரிய சைபர் தாக்குதல். இதன் பின்னணியில் மிகப்பெரிய வலை அல்லது ஒரு நாட்டின் தலையீடு இருக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார். தற்போது உக்ரைன் தான் அந்த நாடு என மஸ்க் முடிவுகட்டியுள்ளார்.
உக்ரைன் நாட்டில் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவை வழங்கப்பட்டு வருகிறது. தான் மட்டும் இந்த சேவையை நிறுத்தினால் உக்ரைன் நாடு முடங்கும் என எலான் மஸ்க் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கிக்கு மிரட்டல் விடுத்திருந்தார்.
ரஷியா- உக்ரைன் போர் தொடர்பாக ஜெலன்ஸ்கிக்கும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதன் பின்னணியில் எலான் மஸ்க் இந்த மிரட்டலை விடுத்திருந்தார். எனவே எலான் மஸ்க்கின் சவடாலை அடுத்து அவரின் எக்ஸ் தளம் தாக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.