கடலுக்குள் ஏவுகணைகளை சரமாரியாக ஏவிய வட கொரியா.. அமெரிக்கா - தென் கொரியா கூட்டு ராணுவ பயிற்சியால் கோபம்
- அவர்களின் பயிற்சி தொடங்கிய சில மணி நேரங்களுக்கு பிறகு வடகொரியா தனது ஏவுகணைகளை ஏவி கோபத்தை வெளிப்படுத்தி உள்ளது.
- போர் விமானங்கள் தவறுதலாக மக்கள் வசிக்கும் பகுதியில் குண்டுவீசி 30 பேர் காயமடைந்தனர்,
வட கொரியா கடலுக்குள் பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இன்று, தென் கொரிய மற்றும் அமெரிக்க வீரர்கள் வருடாந்திர கூட்டு ராணுவ பயிற்சியைத் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியின்போது, இரு நாடுகளின் படைகளும் தங்கள் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் போர் திறன்களை வெளிப்படுத்தும்.
இந்த இராணுவப் பயிற்சி இந்த இரு படைகளின் வருடாந்திர பயிற்சியின் ஒரு பகுதியாகும். இருப்பினும், இது தாக்குதலுக்கு முந்தைய ராணுவப் பயிற்சி என கூறி, வட கொரியா இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
எனவே அவர்களின் பயிற்சி தொடங்கிய சில மணி நேரங்களுக்கு பிறகு வடகொரியா தனது ஏவுகணைகளை ஏவி கோபத்தை வெளிப்படுத்தி உள்ளது.
இந்த ஏவுகணைகள் ஹ்வாகி மாகாணத்திலிருந்து ஏவப்பட்டன. வருடத்தில் ஐந்தாவது முறையாக வடகொரியா இதுபோன்ற ஏவுகணைகளை கடற்பகுதியில் ஏவியுள்ளது என்று தென் கொரியாவின் கூட்டு ராணுவத் தலைவர் தெரிவித்தார்.
தென் கொரியா - அமெரிக்கா ராணுவ கூட்டுப்பயிற்சியை எதிர்த்து தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு வெளியே போராட்டம் நடந்து வருகிறது. இந்த பயிற்சி நாட்டில் மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் என்பதால் அதை நிறுத்த போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர்.
கடந்த வாரம் ஒரு பயிற்சியின் போது, வட கொரிய எல்லையில் உள்ள போச்சான் பகுதியில் இரண்டு தென் கொரிய KF-16 போர் விமானங்கள் தவறுதலாக மக்கள் வசிக்கும் பகுதியில் குண்டுவீசின.
இந்த விபத்தில் 30 பேர் காயமடைந்தனர், அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்நிலையில் கூட்டு ராணுவ பயிற்சியும், கடலில் வடகொரியாவின் ஏவுகணை வீச்சும் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.