உலகம் (World)

துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் டிரம்ப் மீண்டும் பிரசாரம்.. உடன் வந்த எலான் மஸ்க் - பேசியது என்ன?

Published On 2024-10-06 11:10 GMT   |   Update On 2024-10-06 11:12 GMT
  • தலையை சற்று அசைத்ததால் அவரது காதில் குண்டு உரசி நூலிழையில் உயிர் தப்பினார்
  • "மிகவும் எளிமையான செய்தியை வழங்க இங்கு திரும்பி வந்துள்ளேன்

அதிபர் தேர்தல் 

உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட அமெரிக்காவுக்கான அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராகக் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.

 பென்சில்வேனியா துப்பாக்கிசூடு

தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுவரும் டிரம்ப் மீது கொலை முயற்சிகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. முதலாவதாக கடந்த ஜீலை 13 ஆம் தேதி பென்சில்வேனியா மாகாணத்தில் பட்லர் பகுதியில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த டிரம்ப் மீது தாமஸ் குரூக்ஸ் என்ற 20 வயது இளைஞன் துப்பாக்கிச்சூடு நடத்தினான். அப்போது தலையை சற்று அசைத்ததால் டிரம்ப் நூலிழையில் உயிர் தப்பினார். இருப்பினும் அவரது காதில் குண்டு உரசி காயம் ஏற்பட்டுள்ளது.

 

தாமஸ் குரூக்ஸ் அந்த இடத்திலே சுட்டுக் கொல்லப்பட்டான். இதைத்தொடர்ந்து புளோரிடா கோல்ப் மைதானத்தில் வைத்து கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி மற்றொரு கொலை முயற்சி நடந்தது. ஆனால் அதில் இருந்தும் அவர் உயிர்தப்பினார். இந்நிலையில் முதல் முதலில் பென்சில்வேனியா தன்மீது துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் டிரம்ப் தற்போது மீண்டும் பிரச்சாரம் செய்ய வந்திருக்கிறார்.

 

எலான் மஸ்க் விஜயம்

அவரோடு தொழிலதிபர் எலான் மஸ்கும் பிரச்சாரம் செய்ய வந்துள்ளார். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா மற்றும் எக்ஸ் தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் இந்த அதிபர் தேர்தலில் டிரம்பின் தீவிர ஆதரவாளராக மாறியுள்ளார். வெற்றி பெற்றால் மஸ்க்குக்கு அமைச்சரவையில் முக்கிய இடம் தருவேன் என்றும் டிரம்ப் உறுதியளித்துள்ளார். தனது உயிருக்கு ஆபத்து நேர்ந்த இடத்துக்கே மீண்டும் திரும்பியுள்ள டிரம்ப் அங்கு வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளார்.

 

செய்தி 

அங்கு திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பேசிய டிரம்ப், "மிகவும் எளிமையான செய்தியை வழங்க பட்லருக்கு (Butler) திரும்பி வந்துள்ளேன், நாம் அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்ற போகிறோம், நாம் தேர்தலில் வெற்றி பெற போகிறோம் என்பது தான் அந்த செய்தி.

இங்கு என்மீது துப்பாக்கி சூடு நடத்தியவர் என்னையும் , உருவாக இருக்கும் மிகப்பெரிய இயக்கத்தையும் தடுக்கும் நோக்கத்துடன் இருந்தார்" என்று பேசியுள்ளார்.

மேலும் இந்த கூட்டத்தில் பேசிய எலான் மஸ்க், ஜனநாயக கட்சியினர் அமெரிக்க மக்களிடம் இருந்து, பேச்சுரிமையையும், ஆயுதம் வைத்து இருப்பதற்கான உரிமையையும் பறிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

Tags:    

Similar News