லாட்டரியில் ரூ.80 கோடி வென்ற வாலிபரின் வித்தியாசமான செயல்
- கொரோனா காலத்தில் படிப்பை கைவிட்டுவிட்டு பயிற்சி என்ஜினீயராக கியாஸ் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார்.
- தெருக்களில் வடிகால் பிரச்சனைகள் மற்றும் அதன் அடைப்புகளை பழுதுபார்ப்பது இவரது வேலையாகும்.
ஒரே நாளில் கோடீஸ்வரராவது சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்பார்கள். ஆனால் லாட்டரியில் அதிர்ஷ்டம் அடிப்பதன் மூலமும் ஒரு சிலர் திடீர் கோடீஸ்வரர்கள் ஆவார்கள். அவ்வாறு பணம் கிடைக்கும் போது அவர்களுக்கு தலைகால் புரியாமல் செலவு செய்வதையும் கேள்விபட்டிருப்போம். ஆனால் லாட்டரியில் ரூ.80 கோடி பரிசு வென்ற வாலிபர் மறுநாள் வழக்கம் போல் வடிகால் சுத்தம் செய்யும் வேலைக்கு சென்ற செயல் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி உள்ளது.
இங்கிலாந்தின் கார்லிஸ் பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ் கிளார்க்சன். 20 வயதான இவர் கொரோனா காலத்தில் படிப்பை கைவிட்டுவிட்டு பயிற்சி என்ஜினீயராக கியாஸ் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். தெருக்களில் வடிகால் பிரச்சனைகள் மற்றும் அதன் அடைப்புகளை பழுதுபார்ப்பது இவரது வேலையாகும். அவ்வப்போது லாட்டரி வாங்கும் பழக்கம் கொண்ட இவர் சமீபத்தில் வாங்கிய லாட்டரிக்கு 7.5 மில்லியன் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.80 கோடி) பரிசு விழுந்தது.
ஆனாலும் அவர் மறுநாள் தனது அன்றாட பணிக்கு சென்று வடிகால்களை சுத்தம் செய்துள்ளார். பரிசு தொகையை வைத்து பெற்றோரின் கடனை அடைத்தல், வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்லுதல், சொகுசு கார் வாங்குவது என பல்வேறு திட்டங்களை வைத்துள்ளதாக கூறும் ஜேம்ஸ் தொடர்ந்து வேலைக்கு செல்வதை நிறுத்தப்போவதில்லை என்கிறார்.