உலகம்

கடும் குளிர்: கேப்பிட்டல் உள் அரங்கத்தில் பதவி ஏற்கும் டொனால்டு டிரம்ப்

Published On 2025-01-18 09:48 IST   |   Update On 2025-01-18 10:59:00 IST
  • திங்கட்கிழமை கடும் குளிர் நிலவும் என அறிவிறுத்தல்.
  • இதனால் டொனால்டு டிரம்ப் பதவி ஏற்பு விழா உள்அரங்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் நாளை மறுதினம் (ஜனவரி 20-ந்தேதி) அதிபராக பதவியேற்க உள்ளார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக நடந்து வருகிறது. இந்திய அரசு சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த விழாவில் பங்கேற்க உள்ளார். பல்வேறு நாட்டு தலைவர்கள் இந்த பதவி ஏற்பு விழாவில் கலந்த கொள்ள இருக்கிறார்கள்.

இந்நிலையில் பதவியேற்பு விழா குறித்து டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் "ஜனவரி 20-ந்தேி கடுமையான குளிர் நிலவும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வானிலை முன்னறிவிப்பை கருத்தில் கொண்டு பதவியேற்பு விழா வரும் ஜனவரி 20-ந்தேதி மதியம் 3 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) உள்அரங்கத்தில் (Capitol Rotunda) நடக்கிறது.

எந்த வகையிலும் மக்கள் காயப்படுவதை நான் பார்க்க விரும்பவில்லை. பல்லாயிரக்கணக்கான பாதுகாப்பு வீரர்கள், பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்படும் குதிரைகள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் ஜனவரி 20-ந்தேதி பல மணி நேரம் வெளியில் இருப்பது ஆபத்தான நிலைமையாகும். எந்தவொரு நிகழ்விலும் நீங்கள் வர முடிவு செய்தால், பாதுகாப்பு ஆடைகளை அணியுங்கள்.

மிகவும் குளிரான காலநிலை காரணமாக பதவியேற்பு உரையை உள் அரங்கத்தில் நடத்த உத்தரவிட்டு உள்ளேன். பல்வேறு உயரதிகாரிகள் மற்றும் விருந்தினர்கள் அரங்கிற்கு அழைத்து வரப்படுவார்கள். இது அனைவருக்கும் மிகவும் அழகான அனுபவமாக இருக்கும்.

இவ்வாறு டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

40 வருடங்களுக்கு பிறகு அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் உள்அரங்கில் பதவி ஏற்க உள்ளார். வழக்கமாக கேபிட்டலில் வெளிப்புறத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் அதிபர் பதவி ஏற்பு விழா நடைபெறும். தற்போது கடும் குளிர் காரணமாக மாற்றப்பட்டுள்ளது.

Tags:    

Similar News