20 நிமிட இடைவெளியில் மரணத்திலுருந்து தப்பினோம்.. ஷேக் ஹசீனா பரபரப்பு தகவல்
- அவர் இருக்கும் இடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
- இல்லையென்றால் நான் இப்போது உயிரோடு இருந்திருக்க மாட்டேன்.
வங்கதேசத்தில் கடந்த வருடம் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் வெடித்தது. அந்நாட்டு சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டு வந்த 30 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்தும் ஷேக் ஹசீனாவை பதவி விலகக் கோரியும் மாணவர்கள் பல வாரங்களாக நடத்திய போராட்டங்கள் மற்றும் மோதல்களில் 600 பேர் கொல்லப்பட்டனர்.
இட ஒதுக்கீட்டை ரத்து செய்தபோதிலும் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று உறுதியாக இருந்த மாணவர்களை சமாதானப்படுத்தமுடியவில்லை. இறுதியில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவுக்குத் தப்பி வந்தார். பிரதமர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் அனைத்தையும் சூறையாடினர்.
தப்பிவந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்தார் ஷேக் ஹசீனா. அவர் இருக்கும் இடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அவரை திரும்ப அனுப்ப வங்கதேசத்தில் உருவாகியுள்ள முகமது யூனுஸ் தலைமையான இடைக்கால அரசு இந்தியாவை வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் ஆட்சியில் இருந்து நீக்கப்பட்ட தருணத்தில், தன்னையும், தனது தங்கையான ஷேக் ரெஹானாவையும் கொல்ல எதிர்கட்சியினரால் சதி நடந்ததாக 76 வயதாகும் ஷேக் ஹசீனா குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது மேற்கு வங்க அவாமி லீக் கட்சியின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் தளத்தில் ஷேக் ஹசீனா பேசும் ஆடியோ உரை ஒன்று நேற்று [வெள்ளிக்கிழமை] வெளியிடப்பட்டுள்ளது.
அந்த ஆடியோவில், "ரெஹானாவும் நானும் உயிர் பிழைத்தோம் - 20-25 நிமிட இடைவெளியில் நாங்கள் மரணத்திலிருந்து தப்பித்தோம்" என்று ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நடந்த கொலை முயற்சிகளில் இருந்து தப்பிப்பிழைத்தது கடவுளின் செயல் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
2004, ஆகஸ்ட் 21 நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல், கோட்டலிபாராவில் நடந்த வெடிகுண்டு தாக்குதல், இறுதியில் நடந்த கொலை முயற்சியில் தப்பித்தது கடவுளின் விருப்பம். இல்லையென்றால் நான் இப்போது உயிரோடு இருந்திருக்க மாட்டேன்.
அவர்கள் என்னை எப்படி கொல்ல திட்டமிட்டனர் என்பதை நீங்கள் பின்னர் பார்த்தீர்கள். நான் எனது நாடு இல்லாமல் இருக்கிறேன், எனது வீடு எரிக்கப்பட்டது, நான் கஷ்டப்பட்டாலும், என்னை கடவுள் உயிருடன் வைத்திருக்க ஒரு காரணம் இருக்கும் என்று நம்புகிறேன் என கண்ணீர் குரலில் ஷேக் ஹசீனா அந்த ஆடியோவில் பேசியுள்ளார்.
ஆகஸ்ட் 21, 2004 அன்று டாக்கா பங்கபந்து அவென்யூவில் அவாமி லீக் ஏற்பாடு செய்த பயங்கரவாத எதிர்ப்பு பேரணியில் கையெறி குண்டுத் தாக்குதல் நடந்தது.
அப்போது எதிர்க்கட்சித் தலைவராக ஷேக் ஹசீனா, 20,000 பேர் கொண்ட கூட்டத்தில் டிரக்கின் பின்புறத்தில் இருந்து உரையாற்றி முடித்த பிறகு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் ஹசீனாவுக்கும் சில காயங்கள் ஏற்பட்டன.
முன்னதாக கோட்டலிபாராவில் உள்ள கல்லூரியில் கடந்த 2000 ஆம் ஆண்டு ஜூலையில், ஷேக் ஹசீனா உரையாற்ற இருந்த பகுதியில் 40 கிலோ வெடிகுண்டு மீட்கப்பட்டது.
இறுதியாக ஷேக் ஹசீனா 2024 ஆகஸ்ட் 5 ஆம் தேதி புறப்படும் சமயத்தில் 20- 25 நிமிட இடைவெளியில் உயிர்தப்பியதாக கூறியுள்ளார். முந்தைய கொலை முயற்சிகளையும், கடைசியாக உயிர்தப்பிய நிகழ்வையும் ஷேக் ஹசீனா உருக்கமான முறையில் விவரித்த ஆடியோ அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.