சீனா - ரஷியா உறவுகளை வலுப்படுத்த ஜி ஜின்பிங் மற்றும் புதின் ஆலோசனை
- அதிபராக பதவியேற்ற பின் உக்ரைன் போர் குறித்தும் ரஷியாவை கடுமையாக டிரம்ப் சாடியுள்ளார்.
- தைவான் விவகாரத்தில் சீனாவிற்கு ரஷியா ஆதரவு கொடுக்க வேண்டும் என்று சீன அதிபர் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் ஜனவரி 20 அன்று பதவியேற்றார்.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின் உக்ரைன் போர் குறித்தும் ரஷியாவை கடுமையாக டிரம்ப் சாடியுள்ளார்.
2022 பிப்ரவரி தொடங்கி உக்ரானில் ஏறக்குறைய சுமார் 3 ஆண்டுகளாக நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வரும் ஒப்பந்தத்துக்கு ரஷிய அதிபர் புதின் இணங்க வேண்டும் என்றும், இல்லையெனில் ரஷியாவுக்கு பெரிய சிக்கல் ஏற்படும் என்றும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்ள செய்யும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.
அந்த உத்தரவில், "அமெரிக்காவை விட 3 மடங்கு மக்கள்தொகை கொண்டுள்ள சீனா உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்காவை விட கிட்டத்தட்ட 90 சதவீதம் குறைவாகவே பங்களிக்கிறது" என்று அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபராக பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே ரஷியா, சீனாவை டிரம்ப் விமர்சித்துள்ளது உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், 2025 ஆம் ஆண்டு சீனா - ரஷியாவின் உறவுகளை பலப்படுத்தும் விதமாக சீன அதிபர் ஜி ஜின்பிங் காணொளி வாயிலாக ரஷிய அதிபர் புதின் உடன் நேற்று உரையாற்றியுள்ளார்.
அந்த உரையாடலில் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பை வலுப்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தைவான் விவகாரத்தில் சீனாவிற்கு ரஷியா ஆதரவு கொடுக்க வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.