புதுச்சேரி

புதுச்சேரியில் பள்ளி கட்டிடத்துக்கு போராடிய மாணவியை பாராட்டிய கவர்னர்

Published On 2023-06-19 12:13 IST   |   Update On 2023-06-19 12:13:00 IST
  • வீரமாமுனிவர் ஆண்கள் பள்ளிக்கு பெண்கள் பள்ளியை மாற்றியது சவாலான சூழ்நிலைதான்.
  • அரசு பள்ளிகள், மருத்துவமனைகள் மிக சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே எனது எண்ணம்.

புதுச்சேரி:

புதுவை பழைய சட்டக்கல்லூரி வளாகத்தில் இயங்கி வந்த சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் பள்ளி கட்டடம் சிதிலமடைந்துள்ளது.

இதனால் பள்ளியை கடந்த ஆண்டு குருசுகுப்பம் என்.கே.சி. பள்ளியில் இணைத்தனர். அப்போது அங்கு படித்து வந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மாணவர்களை சமாதானப்படுத்தி பள்ளி கடந்த கல்வியாண்டில் அங்கேயே இயங்கியது. பாரதியார் பள்ளி கட்டடம் புதுப்பிக்கப்படவில்லை.

நடப்பு கல்வியாண்டில் சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் பள்ளியை கந்தப்ப முதலியார் வீதியில் உள்ள வீரமாமுனிவர் ஆண்கள் பள்ளிக்கு இடமாற்றம் செய்தனர். இதற்கு பள்ளி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து மாணவிகளை பள்ளிக்குள் விடமால் கேட்டை மூடி போராட்டம் நடத்தினர். வீரமாமுனிவர் ஆண்கள் பள்ளியை திரு.வி.க. பள்ளியில் இணைக்க சம்மதிக்கமாட்டோம், ஷிப்ட் முறையில் இயங்கவும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து சுப்பிரமணிய பாரதியார் பள்ளி மாணவிகள் மறைமலை அடிகள் சாலையில் அமர்ந்து மறியல் நடத்தினர். அமைச்சர் நமச்சிவாயம் மறியல் செய்த மாணவிகளை சமாதானப்படுத்தினார். தொடர்ந்து பெற்றோர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, தற்காலிகமாக ஓராண்டு மட்டும் பள்ளியை இடமாற்றம் செய்ய ஒப்புதல் பெற்றார்.

இதன்பிறகு இன்று முதல் வீராமுனிவர் ஆண்கள் பள்ளி கட்டடத்தில் சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் பள்ளி இயங்குகிறது. வீரமாமுனிவர் ஆண்கள் பள்ளி மாணவர்கள், திரு.வி.க. பள்ளியோடு இணைத்து ஒரே ஷிப்ட் முறையில் பாடம் படிக்கின்றனர்.

இந்த நிலையில் பள்ளி மாணவர்களின் போராட்டம், இடமாற்றம் குறித்து கேள்விப்பட்ட கவர்னர் தமிழிசை, இன்று வீரமாமுனிவர் பள்ளிக்கு சென்று சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் பள்ளி மாணவிகளை சந்தித்தார். பள்ளி துணை முதல்வர் கவுரி தலைமையில் ஆசிரியர்கள் வரவேற்றனர்.

அப்போது தங்கள் பள்ளி முழு நேரம் இயங்கவும், கட்டடத்தை இடமாற்றம் செய்ய உதவிய கல்வித்துறை அதிகாரிகளுக்கும், கவர்னருக்கும் மாணவிகள் நன்றி தெரிவித்தனர்.

தொடர்ந்து கவர்னர் தமிழிசை முதல்தளத்தில் உள்ள பிளஸ்-2, பிளஸ்-1 வகுப்பறைகளுக்கு சென்று பார்வையிட்டார். அங்கிருந்த மாணவிகளோடு அமர்ந்து பேசினார். பின்னர் பரிசோதனை கூடத்துக்கு சென்றார். அது பூட்டியிருந்ததால் ஜன்னல் வழியாக பார்வையிட்டு பின் கீழே வந்தார்.

பின்னர் கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

வீரமாமுனிவர் ஆண்கள் பள்ளிக்கு பெண்கள் பள்ளியை மாற்றியது சவாலான சூழ்நிலைதான். அரசு பள்ளிகள், மருத்துவமனைகள் மிக சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே எனது எண்ணம். குழந்தைகள் படிக்க வேண்டும் என போராடியதை பாராட்ட வந்தேன். பெண்கள் தங்களின் தேவையை உரக்க சொல்லியுள்ளனர். அதற்கான வழியை அரசும், சமுதாயமும் பெற்றுத் தந்துள்ளது.

அதற்காக அனைத்திற்கும் போராட வேண்டும் என்பது இல்லை.

பள்ளி கல்வித்துறையிடம் பரிசோதனைக்கூடம் அமைக்க அறிவுறுத்தியுள்ளேன். அரசு அனைத்து கல்வி நிலையங்களையும் போதிய வசதிகளோடு அமைத்துத்தர வேண்டும்.

சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் கொண்டு வந்துள்ளோம். டிஜிட்டல் வகுப்பறை ஏற்படுத்த போகிறோம். இவற்றை முன்பே இருந்த ஆட்சியாளர்கள் சரி செய்திருக்கவேண்டும்.

போதிய வசதிகள் இல்லாதது வருத்தம் தரக்கூடியதுதான். இருப்பினும் அரசு பள்ளிகளில் அனைத்து வசதிகளும் செய்துதர தனி கவனம் செலுத்தவுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து தமிழக கவர்னர் குறித்து தி.மு.க.வின் முரசொலியில் வெளியான கருத்து, நடிகர் விஜய் மாணவர்களுக்கு பரிசு வழங்கியது தொடர்பான கேள்விகளுக்கு கவர்னர் தமிழிசை பதிலளிக்க மறுப்பு தெரிவித்துவிட்டு கிளம்பிச் சென்றார்.

இதன்பின் சுப்பிரமணிய பாரதியார் பள்ளியையும் கவர்னர் தமிழிசை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தங்கள் பள்ளிக்கு நிரந்தர கட்டடம் கேட்டு சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் பள்ளி மாணவிகள் மறைமலை அடிகள் சாலையில் தரையில் அமர்ந்து மறியல் செய்தனர்.

இந்த மறியல் போராட்டத்தின்போது பிளஸ்-2 மாணவி சகானா கடுமையாக கோஷம் எழுப்பினார். அமைச்சர் நமச்சிவாயத்திடமும், 2 ஆண்டாக அலைக்கழிக்கப்படுவதை எடுத்துக்கூறி ஆவேசமாக பேசினார். இன்று கவர்னர் தமிழிசை மாணவிகளை சந்தித்தபோது, பிளஸ்-2 வகுப்பறையில் இருந்த மாணவி சகானாவை அடையாளம் காட்டினர். அவரை கவர்னர் அழைத்தார்.

அவரை அழைத்து, உங்கள் உரிமைக்காக போராட்டம் நடத்தியது நியாயமானது, விரைவில் நிரந்தர கட்டிடம் கிடைக்கும் என அவரின் தோளில் தட்டி பாராட்டினார்.

அப்போது சக மாணவிகளும் கை தட்டி வரவேற்றனர்.

Tags:    

Similar News