தொழிலாளர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்
- மக்கள் பாதுகாப்பு பேரியக்கம் வலியுறுத்தல்
- எந்தெந்த காலக்கட்டங்களில் ஆய்வு செய்தனர் என்பது குறித்த விவரத்தையும் வெளியிட வேண்டும்.
புதுச்சேரி:
புதுச்சேரி மக்கள் பாதுகாப்பு பேரியக்க தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை காலாப்பட்டில் இயங்கி வரும் தனியார் மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில் 14 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே இந்த விபத்திற்கான காரணம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தி வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும். மக்கள் உயிருடன் விளையாடி கொண்டிருக்கும் அந்த தொழிற்சாலையை மூட வேண்டும்.
மேலும் அந்த தொழிற்சாலையை சுற்றுச்சூழல் துறையில் என்தெந்த அதிகாரிகள், எந்தெந்த காலக்கட்டங்களில் ஆய்வு செய்தனர் என்பது குறித்த விவரத்தையும் வெளியிட வேண்டும். அதன்படி அவர்கள் கடமையை செய்ய மறுத்திருந்தால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் கடமை செய்ய தவறிய அதிகாரிகளின் சம்பளத்திலும் , தொழிற்சாலை நிதியில் இருந்தும் பாதிக்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் தலா ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.