அறிந்து கொள்ளுங்கள்

ஐபோன் 14 சீரிஸ் விற்பனை - எதிர்பார்த்து ஏமாந்து போன ஆப்பிள்?

Published On 2022-09-29 12:38 IST   |   Update On 2022-09-29 12:38:00 IST
  • ஆப்பிள் நிறுவனம் இம்மாத துவக்கத்தில் தான் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது.
  • சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், ஐபோன் 14 விற்பனை குறித்த புது தகவல் வெளியாகி உள்ளது.

ஆப்பிள் நிறுவனம் சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை இம்மாத துவக்கத்தில் அறிமுகம் செய்தது. உலகின் பல்வேறு நாடுகளிலும் ஐபோன் 14 சீரிஸ் விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், புதிய ஐபோன் 14 சீரிஸ் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

உலக நாடுகளில் ஐபோன் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு நடைபெறவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து தனியார் நிறுவனம் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் ஐபோன் 14 சீரிஸ் உற்பத்தியை 60 லட்சம் யூனிட்களாக குறைத்துக் கொள்ள ஆப்பிள் தனது உற்பத்தியாளர்களிடம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

60 லட்சம் யூனிட்கள் குறைந்த எண்ணிக்கை இல்லை என்ற போதிலும், புதிய ஐபோன்கள் சந்தையில் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையாகவில்லை என்பதையே குறிக்கிறது. மேலும் ஐபோன் 14 ப்ரோ சீரிஸ் மாடல்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதை முன்பதிவு காலக்கட்டத்தில் உணர முடிந்தது. ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலுக்கான காத்திருப்பு காலம் 36.5 நாட்களாக இருந்தது. இது கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகம் ஆகும்.

ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்களுடன் ஒப்பிடும் போது ஐபோன் 14 ப்ரோ சீரிசுக்கு அதிக முன்பதிவுகள் கிடைத்துள்ளன. இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் 9 கோடி ஐபோன்களை விற்பனை செய்ய ஆப்பிள் நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News