ஒபன்ஏஐ-இல் சாம் ஆல்ட்மேனின் ரீ-என்ட்ரி.. சத்ய நாதெல்லா என்ன சொன்னாரு தெரியுமா?
- ஒபன்ஏஐ நிறுவனத்தில் நிர்வாக ரீதியிலான மாற்றங்கள் அதிரடியாக மேற்கொள்ளப்படுகின்றன.
- முன்னதாக ஒபன்ஏஐ சி.இ.ஒ.-வாக ட்விட்ச் நிறுவனர் நியமிக்கப்பட்டு இருந்தார்.
ஒபன்ஏஐ நிறுவனத்தில் கடந்த வெள்ளிக் கிழமை முதல் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், வெளியாகும் அறிவிப்புகள் டெக் உலகில் தொடர்ந்து சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில், கடந்த ஐந்து நாட்களில் ஒபன்ஏஐ தலைமை செயல் அதிகாரியாக பணிநீக்கம் செய்யப்பட்ட சாம் ஆல்ட்மேன் இன்று (நவம்பர் 22) மீண்டும் அந்நிறுவனத்தின் சி.இ.ஒ.-வாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
மீண்டும் ஒபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்றது குறித்து அந்நிறுவனம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் சாம் ஆல்ட்மேனும் மீண்டும் தலைமை பொறுப்பை ஏற்பது குறித்து கருத்து பதிவிட்டு இருந்தார். முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லாவும் கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், சாம் ஆல்ட்மேன் மீண்டும் ஒபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருப்பது குறித்து சத்ய நாதெல்லா தனது எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில், "ஒபன்ஏஐ நிர்வாக குழுவில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் மாற்றங்களை வரவேற்கிறோம். நிலையான, நன்கு விவரம் அறிந்த மற்றும் சிறப்பான நிர்வாகத்திற்கு இது முதல்படி என்பதை நாங்கள் நம்புகிறோம். ஒபன்ஏஐ தலைமை பொறுப்பை ஏற்று, அதன் குறிக்கோளை அடைவதற்கு தலைமை பொறுப்பில் இருந்து முக்கிய பங்காற்றுவது குறித்து சாம், கிரெக் மற்றும் நானும் பேச்சுவார்த்தை நடத்தினோம்."
"உறுதியான கூட்டணியை உருவாக்கி, அடுத்த தலைமுறை ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மதிப்புகளை எங்களின் வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளிகளுக்கு வழங்க விரும்புகிறோம்," என்று குறிப்பிட்டு இருக்கிறார்.