என் மலர்
- மாணவி பலியான நிலையில் பாதுகாப்பு கருதி சுருளி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடைவிதித்தனர்.
- பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு நீர்வரத்து சீராக உள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
கூடலூர்:
தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள சுருளி அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மேகமலை, ஹைவேவிஸ் வனப்பகுதி யில் பெய்யும் மழைநீர் சுருளிஅருவிக்கு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சுருளி அருவிக்கு குளிக்க வந்த சென்னை மாணவி மீது மரக்கிளை முறிந்துவிழுந்து பலி யானார்.
இதனால் பாதுகாப்பு கருதி சுருளி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடைவிதித்தனர். தற்போது மரக்கிளைகள் அகற்றப்ப ட்டன. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். நீர்வரத்து சீராக உள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கினர். கோடைவெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணி கள் சுருளிஅருவியில் உற்சா கமாக குளித்து மகிழ்ந்தனர்.
முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 118.05 அடியாக உள்ளது. வருகிற 100கனஅடிநீர் அப்படியே திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 53.02 அடியாக உள்ளது. 33 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 42.05 அடியாக உள்ளது. 4 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 88.75 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 1.6, தேக்கடி 7.4, போடி 5.2, சோத்து ப்பாறை 1.5 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
- திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு பன்னீர் ரோஸ், செண்டுமல்லி, சம்பங்கி, மல்லிகை, கனகாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பூக்கள் விற்பனைக்கு வந்தது.
- 4 டன் சம்பங்கி பூக்கள் தேக்கமடைந்து ள்ளதால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பேரறிஞர் அண்ணா வணிக வளாகத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் சின்னாளபட்டி, செம்பட்டி, கன்னிவாடி, தாடிக்கொம்பு, வெள்ளோடு, சிலுவத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்படும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. பூக்கள் வரத்தைப் பொறுத்து விலைகள் நாள்தோறும் நிர்ணயிக்கப்படுவது வழக்கம்.
அதன்படி இன்று பூ மார்க்கெட்டிற்கு பன்னீர் ரோஸ், செண்டுமல்லி, சம்பங்கி, மல்லிகை, கனகாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பூக்கள் விற்பனைக்கு வந்தது. இதில் 5 டன் சம்பங்கி வந்தது. வரத்து அதிகரிப்பு மற்றும் விசேஷ தினங்கள் இல்லை, சென்ட் தொழிற்சாலைக்கு பூக்கள் கொள்முதல் செய்யாதது ஆகிய காரணத்தினால் கிலோ ரூ.5க்கு விலை போனது. இதனால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.
இன்று மட்டும் 4 டன் சம்பங்கி பூக்கள் தேக்கமடைந்து ள்ளதால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். கடந்த வாரத்தில் கிலோ ரூ.100க்கு விற்கப்பட்ட சம்பங்கி இன்று கிலோ ரூ.5க்கு கூட விலை போகவில்லை. அதேபோல் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வந்த பன்னீர் ரோஸ், விலைபோகாத காரணத்தால், செண்ட் தொழிற்சாலைக்கு அனுப்புவதற்காக சாலையில் உலர வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ராஜக்காபட்டியை சேர்ந்த விவசாயி அய்யம்பெருமாள் கூறுகையில்,
ஒரு ஏக்கரில் சம்பங்கி பயிரிட்டேன். அதில் 70 கிலோ இன்று வரத்து வந்தது. திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் போதிய விலை இல்லை. செண்ட் நிறுவனமும் பூக்களை கொள்முதல் செய்ய முன்வரவில்லை. இதனால் 70 கிலோ சம்பங்கி ரூ.200க்கு விலை போனது. ஏக்கருக்கு எடுப்பு கூலி மற்றும் பராமரிப்பு செலவு சேர்த்து ரூ.700 செலவு ஆன நிலையில், ரூ.200 விலை போனது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
- காந்திகிராம பல்கலைக்கழகத்தின் இளங்கலை முதுநிலை படிப்புகள் தவிர்த்த பிற வகுப்புகளுக்கான சேர்க்கை குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
- இணையதளம் மூலம் ஜூன் 9ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சின்னாளபட்டி:
காந்திகிராம பல்கலைக்கழகத்தின் இளங்கலை முதுநிலை படிப்புகள் தவிர்த்த பிற வகுப்புகளுக்கான சேர்க்கை குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அந்த அறிவிப்பில் பல்கலைக்கழகத்தின் இளங்கலை முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான 2023-24 ம் ஆண்டிற்கான சேர்க்கை கியூட் பொதுநுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெற உள்ளது.
பல்கலைக்கழகத்தின் மூலம் நடத்தப்படும் பிற படிப்புகளான முதுநிலை டிப்ளமோ, பி.வி.ஓ.சி., டி.வி.ஓ.சி. சான்றிதழ் நிலை படிப்புகளுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது. சேர விருப்பம் உள்ளவர்கள் பல்கலைக்கழக இணையதளம் மூலம் ஜூன் 9ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- போடி புதூரில் கர்னல்ஜான் பென்னிகுக் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை உள்ளது.
- சம்பவத்தன்று ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி புதூரில் கர்னல்ஜான் பென்னிகுக் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை உள்ளது. இங்கு சுமார் 10 ஆயிரம் மூடைகள் அரிசி, பருப்பு சாக்குகளும், புத்தக பாரங்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் வைக்கப்பட்டிருந்து.
சம்பவத்தன்று ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானது. இதுகுறித்து வங்கியின் செயலாளர் ராமகிருஷ்ணன் போடி டவுன் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கணவன்-மனைவி இடையே அடிக்கடி கருத்துவேறுபாடு ஏற்பட்டு வந்த நிலையில் வாலிபர் தனது வீட்டில் இறந்து கிடப்பதாக அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்தது.
- பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் ஆலமரத்தெருவை சேர்ந்த இருளப்பன் மகன் பிரபாகரன்(30). இவர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு மாற்று சமூகத்தை சேர்ந்த மீனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி கருத்துவேறுபாடு ஏற்பட்டு வந்ததால் மீனா கோவித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் பிரபாகரன் தனது வீட்டில் இறந்து கிடப்பதாக அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்தது.
அவர் அருகே பூச்சிமருந்து பாட்டிலும் இருந்துள்ளது. இதுகுறித்து பிரபாகரனின் தாய் போதுமணி சின்னமனூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதால் உரிய விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- ஆண்டிபட்டியில் உள்ள 30 கிராம ஊராட்சிகளில் தற்பொழுது 22 ஊராட்சி செயலாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 22 ஊராட்சி செயலாளர்கள் 2 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டியில் உள்ள 30 கிராம ஊராட்சிகளில் தற்பொழுது 22 ஊராட்சி செயலாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். 8 ஊராட்சிகளில் ஊராட்சி செயலாளர் பணி காலியாகவே உள்ளது. 8 ஊராட்சிகளுக்கும் அருகிலுள்ள கிராம ஊராட்சி செயலாளர்கள் கூடுதல் பணி கவனித்து வந்தனர்.
இந்நிலையில் பணி வரன்முறையை அரசு ஆணையாக வெளியிடுதல், வருடம் முழுவதும் ஊதியம் வழங்குதல் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆண்டிப்பட்டியில் உள்ள 22 ஊராட்சி செயலாளர்கள் 2 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கிராம ஊராட்சிகளில் பொது மக்கள் பணி பாதிப்படைந்துள்ளது என பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இதுகுறித்து டி.ராஜகோபாலன் பட்டி ஊராட்சி தலைவர் வேல்மணி பாண்டியன் கூறியதாவது, தற்போதைய நிலையில் ஊராட்சி செயலாளர்கள் வேலை நிறுத்தத்தால் ஊராட்சி பணிகளில் எவ்வித பாதிப்பும் இல்லை.
மக்கள் பணிகளை நேரடியாக நாங்களே சென்று அவர்கள் குறை கேட்டு தீர்த்து வைத்துக் கொண்டிருக்கிறோம். தற்போது வரை எவ்விதமான பாதிப்பும் ஊராட்சிகளில் இல்லை என்று அவர் தெரிவித்தார்.
- மேகமலை அருவியில் இருந்து 4 ஊராட்சிகளில் உள்ள 75 கிராமங்களுக்கும் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் எடுத்து செல்லப்படுகிறது.
- குடிநீர் குழாயில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் விரிசல் ஏற்பட்டு குடிநீர் தொடர்ந்து வீணாகி வருகிறது.
வருசநாடு:
கோம்பைத்தொழு அருகே மேகமலை அருவியில் இருந்து மேகமலை, சிங்கராஜபுரம், பொன்னன்படுகை, குமணன்தொழு உள்ளிட்ட 4 ஊராட்சிகளில் உள்ள 75 கிராமங்களுக்கும் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் எடுத்து செல்லப்படுகிறது. கடந்த சில மாதங்களாக கிராமங்களுக்கு அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இதனால் அருவியில் இருந்து கோம்பைதொழு வரை அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் விரிசல் ஏற்பட்டு குடிநீர் தொடர்ந்து வீணாகி வருகிறது. இதனை சீரமைக்க பொதுமக்கள் பலமுறை வலியுறுத்தியும் கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே நாளுக்கு நாள் குழாய்களில் சேதம் அதிகரித்து அதிக அளவிலான குடிநீர் வெளியேறி வருகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் அடுத்த சில வாரங்களுக்கு பிறகு கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. சம்பந்தப்பட்ட மாவட்ட கூட்டுக் குடிநீர் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேகமலை அருவியில் இருந்து கோம்பைத்தொழு வரையிலான குடிநீர் குழாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கிராம நிர்வாக அலுவலர் மகன் விபத்தில் பரிதாபமாக பலியானார்.
- போலீசார் விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர்.
செம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த, பழைய ஆயக்குடியைச் சேர்ந்தவர்கள் ராஜலிங்கம் -லீலாவதி தம்பதியினர். ராஜலிங்கம் ஏற்கனவே இறந்து விட்டார். லீலாவதி சிவகிரிபட்டி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு தமிழரசன் (25) குறளரசன் (23) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
மூத்த மகன் தமிழரசன் விவசாயம் செய்து வருகிறார். இளைய மகன் குறளரசன் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ்., அகாடமியில் டி.என்.பி.எஸ்.சி., படித்து வருகிறார். இந்நிலையில் செம்பட்டி வழியாக பழனி அடுத்த பழைய ஆயக்குடிக்கு குறளரசன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது செம்பட்டி பழனி சாலை, ராமநாதபுரம் அருகே சாலைப் பணிகள் நடைபெற்றுக் கொண்டி ருந்ததால், அனைத்து வாகனங்களும் ஒரு சாலையில் திருப்பி விடப்பட்டது. ஒரு வழி சாலையில் செல்லும்போது திருப்பூரில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் குறளரசன் மீது பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் குறளரசன் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலே பலியானார். தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற செம்பட்டி சப்-இன்ஸ்பெ க்டர் பாண்டியராஜன் மற்றும் போலீசார், குறள ரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் திருப்பூரிலிருந்து கார் ஓட்டி வந்த டிரைவர் சதீஷ்குமார் (44) என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த செம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஐ.ஏ.எஸ்., அகாடமியில் படித்த மாணவன் செம்பட்டி அருகே கார் மோதிய விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- அதிகளவு கழிவுநீர் கலந்து வருவதால் வெயில் காலங்களில் தண்ணீரில் உள்ள ஆக்சிஜன் குறைந்து மீன்கள் டன் கணக்கில் செத்து கரை ஒதுங்கி வருகிறது.
- கண்மாயை சுற்றிலும் மீன்கள் கரை ஒதுங்கி அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசி வருகிறது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அருகே மீனாட்சியம்மன் கண்மாய் 150 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கொட்டகுடி ஆறு, ராஜ வாய்க்கால் மூலம் இந்த குளத்திற்கு நீர் நிரப்பப்படு கிறது. இந்த குளத்திற்கு வரும் ராஜ வாய்க்காலில் போடி பகுதியில் உள்ள கழிவு நீர் கலந்து கண்மாய்க்கு வருவதால் இந்த நீரானது மாசடைந்து குடிநீருக்கு பயன்படுத்த முடியாத நிலையிலும் விவசாயத்திற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதிகளவு கழிவுநீர் கலந்து வருவதால் வெயில் காலங்களில் தண்ணீரில் உள்ள ஆக்சிஜன் குறைந்து மீன்கள் டன் கணக்கில் செத்து கரை ஒதுங்கி வருகிறது.
இறந்து கரை ஒதுங்கும் மீன்களால் துர்நாற்றம் வீசி தண்ணீர் மேலும் மாச டைந்து அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு ள்ளது. மேலும் பொது மக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் என்ற அச்சமும் நிலவி வருகிறது. கண்மாயை சுற்றிலும் மீன்கள் கரை ஒதுங்கி அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசி வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலை குரங்கணி வனப் பகுதிகளில் உற்பத்தியாகும் இந்த சுத்தமான நீரானது கழிவு நீராகவே இந்த கண்மாய்க்கு வருவதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையிலும், தற்போது மீன்கள் செத்து விவசாயத்திற்கும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் கண்மாயில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் எனவும் மாசடைந்த நீர் நிலையை சுத்திகரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.