search icon
என் மலர்tooltip icon
    • விருதுநகர் மாவட்டத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சியில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் சான்றிதழ் வழங்கினார்.
    • பயிற்சியின்போது தினசரி சிற்றுண்டி வழங்கப்பட்டது.

    விருதுநகர்

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தி னால் ஆண்டு தோறும் நடத்தப்படும் மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் கடந்த 1-ந்தேதி தொடங்கி நேற்றுடன் முடிந்தது.

    இந்த பயிற்சி முகாமில் மாணவ-மாணவிகளின் உடல் திறன் மற்றும் விளை யாட்டு திறனை மேம்படுத் தும் பொருட்டு தடகளம், கூடைபந்து, கால்பந்து, வளைகோல்பந்து மற்றும் வாலிபால் போன்ற விளை யாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    பயிற்சியின் போது தினசரி சிற்றுண்டி வழங்கப் பட்டது. பயிற்சி முகாமில் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து மொத்தம் 245 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு, கலெக்டர் ஜெயசீலன் சீருடை மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் குமர மணிமாறன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜாஹிர் உசேன், ராம்கோ நிறுவன மக்கள் தொடர்பு அலுவலர் முருகேசன், பயிற்றுநர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகள் வெளிநாட்டில் உயர் தொழில்நுட்ப பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.
    • விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    வேளாண் அமைச்சர் 2023-24 நிதியாண்டின் நிதி நிலை அறிக்கை உரையில் உழவர்களுக்கு அயல்நாட்டில் உயர் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி தோட்டக்கலை, வேளாண் பயிர் சாகுபடியில் உயர் தொழில்நுட்பங்களை பெறும் வகையில் இஸ்ரேல், நெதர்லாந்து போன்ற அயல்நாடுகளுக்கு சென்று பயன்பெறுவதற்கு உழவர் பெரு மக்களுக்கு இது வரப்பிரசாதமாகும்.

    எனவே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் tnhorticulture.tn.gov.in/thnortinet/registration-new.php என்ற இணையதள முகவரியில் நேரடியாகவோ அல்லது அந்தந்த வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலர் மூலமாகவோ பதிவு செய்து பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    • உயர் கோபுர மின்விளக்கு அமைத்து விபத்தை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றனர்.

    பாலையம்பட்டி

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியில் இருந்து கட்டங்குடி, பொய்யாங் குளம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்பவா்கள் மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சா லையை கடந்து செல்கின்றனர்.

    இந்த சாலையை கடந்து தான் வட்டார போக்குவரத்து அலுவலகம், அரசு ஐ.டி.ஐ, ஆசிரியர் பயிற்சி கல்லூரிக்கு செல்ல வேண்டும். தினமும் ஆயிரக் கணக்கான பொதுமக்கள், விவசாயிகள், மாணவர்கள் இந்த சாலையை கடந்து செல்கின்றனர்.

    போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் விபத்தை தடுப்பதற்காக எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை.

    போதிய மின்விளக்கு வசதிகளும் இல்லை. இதனால் சில சமயங்களில் விபத்து ஏற்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பாலையம்பட்டியில் இருந்து கட்டங்குடி, பொய்யாங் குளம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்பவா்கள் மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றனர்.

    இந்த சாலை வழியாக தினமும் எண்ணற்ற வாகனங்கள் சென்று வருகின்றன.

    பொதுமக்களின் பாது காப்பு கருதி நான்கு வழிச்சாலை சந்திப்பில் உயர்கோபுர மின் விளக்குகள் பொருத்தி விபத்து ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

    • தேங்கி கிடக்கும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம்
    • சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பாலையம்பட்டி

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி முதல் நிலை ஊராட்சியில் மதுரை சாலையில் குடிநீர் குழாய் அருகே திறந்தவெளியில் குப்பைகள் கொட்டப்படு வதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் குழாய் அருகே கொட்டப்படும் குப்பைக ளால் கொசுக்கள், ஈக்கள் உற்பத்தியாகி பொது மக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

    மேலும் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளின் முகத்தில் விழுகிறது. எனவே உடனடியாக குப்பைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்வதோடு இதுபோன்று திறந்த வெளியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வாகனம் மோதி புள்ளிமான் இறந்தது.
    • புள்ளிமானை அந்த பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் அடக்கம் செய்தனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள காளையார் கரிசல்குளம் கண்மாய் பகுதியில் இருந்து 3 வயது மதிக்கத்தக்க புள்ளிமான் இரை தேடி வந்தது. அந்த கண்மாய் வழியாக வந்து சாலையை கடக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளிமான் காயமடைந்து பரிதாபமாக இறந்தது. இதனை கண்ட அந்த பகுதி மக்கள் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    வத்திராயிருப்பு வனச்சரக அலுவலர் பிரபாகரன் தலைமையில் வனக்காப்பாளர் ஆறுமுகம், வேட்டை தடுப்பு காவலர் ராஜேந்திர பிரபு ஆகியோர் காயமடைந்து இறந்து கிடந்த புள்ளிமானை மீட்டு ரெட்டியபட்டி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கால்நடை மருத்துவர் முத்துச்செல்வி முன்னிலையில் புள்ளிமான் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர் புள்ளிமானை அந்த பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் அடக்கம் செய்தனர்.

    • நாட்டுப்புற கலைகள் ஆராய்ச்சி மையம் திறப்பு நடந்தது.
    • ஏற்பாடுகளை கோடாங்கி கலைக்ககூட இயக்குனர் உமாராணி செய்திருந்தார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் கோடாங்கி கலை கூடத்தின் நாட்டுப்புற கலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய திறப்பு விழா நடந்தது. அனைத்து கலைஞர்கள் வாழ்வாதார கூட்டமைப்பு இயக்குனர் பேராசிரியர் காளீஸ்வரன் தலைமை தாங்கினார். பயிற்சி கூடம் மற்றும் ஆராய்ச்சி மையத்தை கலெக்டர் ஜெயசீலன் திறந்து வைத்தார். அவர் பேசுகையில், 'நம் நாட்டில் சங்க காலம் தொட்டு கலைகள் செழித்து வளர்ந்துள்ளது. திருத்தங்கலில் சங்க கால மக்கள் கலைகளை வளர்த்தது குறித்த சான்றுகள் உள்ளது. கலைஞர்கள் சிறப்பாக செயல்பட்டு, நம் பண்பாட்டை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்கின்றனர். விருதுநகர் மாவட்டத் திற்கு என்று தனித்துவமாக பல்வேறு கலைகள் உள்ளது,' என்றார்.

    இந்த கோடங்கி கலைக்கூடத்தில் தப்பாட்டம், ஒயிலாட்டம், சாட்டை குச்சி, 8 வகையான கரகம், மான் கொம்பு, சிலம்பம், பொய்க்கால் குதிரை, காவடி, தெருக்கூத்து நாடகம் உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புற கலைகள் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் கலை இலக்கிய மாணவர்களுடன் இணைந்து நாட்டுப்புற கலைகள் குறித்து ஆராய்ச்சி யும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோடாங்கி கலைக்ககூட இயக்குனர் உமாராணி செய்திருந்தார். 

    • தென்மாநில அளவிலான யானைகள் கணக்கெடுப்பு பணி நாளை முதல் 3 நாட்கள் நடக்கிறது.
    • விபரங்கள் முதுமலை காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தில் ஆண்டு தோறும் பொது வன விலங்குகள் கணக்கெடுப்பு நடத்தும் போது, யானைகளின் எண்ணிக்கையும் கணக்கெடுப்பு செய்யப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய தென் மாநிலங்களில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் மே 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் யானைகள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.

    கடந்த 2017-ம் ஆண்டு நடந்த தேசிய யானைகள் கணக்கெடுப்பில் கர்நாடகம் முதல் இடத்தையும், கேரளம் 3-ம் இடத்தையும், தமிழகம் 4-ம் இடத்தையும் பிடித்திருந்தது. தற்போது நடைபெற உள்ள கணக்கெடுப்பில் தென்மாநிலங்களில் யானைகளின் எண்ணிக்கை கனிசமான அளவு உயர்ந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த கணக்கெடுப்பு பணியில் வனத்துறையினர், தன்னார்வலர்கள் என 120 பேர் கலந்து கொள்கின்றனர். இவர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் ஸ்ரீவில்லிபுத்தூர் வன விரிவாக்க மையத்தில் நடந்தது. இந்த பயிற்சி முகாமை புலிகள் காப்பக துணை இயக்குநர் திலீப்குமார் தொடங்கி வைத்தார். அப்போது அவர், யானைகள் கணக்கெடுப்பில் ஜி.பி.எஸ். கருவி திசை காட்டும் கருவி, வாக்கி டாக்கி உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் துல்லியமாக யானைகள் குறித்த தகவல்களை அறிய முடியும். கணக்கெடுப்பு பணி முடிந்ததும், விபரங்கள் முதுமலை காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்படும், என்றார்.

    • பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பாண்டியன் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது20). தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்தார். இவரது தாத்தா சின்னபெருமாள் பராம ரிப்பில் இருந்து வந்தார். இரவு நேரத்தில் அடிக்கடி செல்போனில் பேசி கொண்டிருப்பாராம். இதனை அவரது பாட்டி கண்டித்துள்ளார்.

    இதனால் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்ற மாரிமுத்து பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் திருத்தங்கல் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் சின்னபெருமாள் அங்கு சென்று பார்த்தபோது அது மாரிமுத்து என தெரியவந்தது.

    போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சின்னபெருமாள் கொடுத்த புகாரின்பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி அருகே உள்ள அனுபன் குளத்தை சேர்ந்தவர் ரமேஷ்(34). பட்டாசு ஆலையில் வேலைக்கு ஆள் அனுப்பும் பணியை குத்ததைக்கு செய்து வந்தார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பவரது மகள் ஆனந்திக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணமானது.

    ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக ஆனந்தி கணவரை பிரிந்து வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து ரமேசும், அவரது மகன் முகுந்தனும் முத்துசாமியுடன் வசித்து வந்தனர். இந்த நிலையில் ரமேசுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதற்காக பல இடங்களில் கடன் வாங்கியும் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் மனமுடைந்த ரமேஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து முத்துசாமி கொடுத்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தெற்கு தேவதானம் பகுதியை சேர்ந்தர் இந்திரா(37). இவர் அதே பகுதியில் வசிக்கும் பரமேசுவரி என்பவருக்கு சுயஉதவிக்குழு மூலமாக ரூ.75 ஆயிரம் வாங்கி கொடுத்தார். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட பரமேசுவரி குடும்பத்துடன் மாயமானார். இதனால் கடன் தவணையை இந்திரா செலுத்தி வந்தார்.

    இந்த நிலையில் மகளிர் சுயஉதவிக்குழுவில் இருந்து கடனை முழுமையாக செலுத்தும்படி இந்திரா விடம் கேட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த இந்திரா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து இந்திராவின் கணவர் தளவாய்பாண்டியன் கொடுத்த புகாரின்பேரில் சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள வாய்பூட்டான்பட்டியை சேர்ந்தவர் ஜெயராம்(37). இவர் கோவில் திருவிழாவிற்காக விருதுநகரில் இருந்து சாத்தூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ஜெயராம் படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஜெயராமின் சகோதரர் மாரிசாமி கொடுத்த புகாரின்பேரில் சூளக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×