என் மலர்
TNLGanesh
About author
- முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டு தாது உப்புக்கள் வழங்கப்பட்டது.
- விவசாயிகள் பலர் தங்களது கால்நடைகளைக் கொண்டு வந்து அவைகளுக்கு தடுப்பூசி, மருந்துகள் பெற்று சென்றனர்.
கடையம்:
கடையம் யூனியனுக்குட்பட்ட ரவணசமுத்திரம் ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம் ஊராட்சி மன்ற தலைவர் முகம்மது உசேன் தலைமையில் நடைபெற்றது. முகாமில் கால்நடை உதவி மருத்துவர் கிருஷ்ணராஜ், உதவியாளர் அப்பாஸ் ஆகியோர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டு தாது உப்புக்கள் வழங்கினர். இதில் துணைத்தலைவர் ராமலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் விவசாயிகள் பலர் தங்களது கால்நடைகளைக் கொண்டு வந்து அவைகளுக்கு தடுப்பூசி போட்டு, மருந்துகள் பெற்று சென்றனர்.
- துறவி கொலையில் முகமது அலி, சுடலைக்குமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
- கலெக்டர் ரவிச்சந்திரன் உத்தரன்படி கொலையாளிகள் 2 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தென்காசி:
தென்காசியில் தென்பழனி ஆண்டவர் கோவில் பின்புறம் உள்ள படித்துறையில் துறவி ஒருவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பான விசாரணையில் முகமது அலி மற்றும் சுடலைக்குமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் அவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் உத்தரன்படி இன்ஸ்பெக்டர் பாலமுருகன், கொலையாளிகள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் பாளை மத்திய சிறையில் அடைத்தார்.
- பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
- குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் பழுதாகி குப்பைமேடாக காட்சியளித்து வருகிறது.
தென்காசி:
பாவூர்சத்திரத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் பஸ் நிலையத்திற்கு ஏராளமான கிராம பகுதிகளை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மட்டும் இன்றி பாவூர்சத்திரத்தில் இயங்கி வரும் மிகப்பெரிய காய்கறி சந்தைக்கு உள்ளூர், அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட பகுதியில் இருந்தும் அதிகளவில் வியாபாரிகள், விவசாயிகள் தினமும் வந்து செல்கின்றனர்.
சுத்திகரிப்பு எந்திரம்
இந்நிலையில் பஸ் நிலையத்தில் புதிய குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி என அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக பழுதாகி குப்பைமேடாக காட்சியளித்து வருகிறது. இலவச கழிப்பிட கட்டிடம் பழுது பார்க்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டு அதுவும் மூடப்பட்டு அருகில் இருக்கும் கட்டண கழிப்பிடம் செல்லும் நிலையில் அதுவும் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வருகிறது.
மழைக்காலங்களில் பஸ் நிலையத்தினுள் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளிப்பதோடு குப்பைகள் அகற்றப்படாமலும், மதுக்குடிப்போரின் கூடாரமாகவும் பஸ் நிலையம் காட்சியளிக்கிறது. இதனால் பயணிகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் எழுந்துள்ளது.
பயணிகள் கோரிக்கை
இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் மற்றும் அரசு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு தரப்பினரும் புகார் செய்தும், அதனை கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே சுகாதார சீர்கேட்டுடன் காணப்படும் பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தை சுத்தப்படுத்தி அங்கு குடிநீர், கழிப்பிட வசதிகளை ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- வள்ளியம்மாள் புரத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கு மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கினார்.
- விழாவில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்து பேசினார்.
கடையம்:
கடையம் யூனியன் மடத்தூர் ஊராட்சி க்கு உட்பட்ட வள்ளியம்மாள் புரத்தில் ஆலங்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கு மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கினார். அதன் திறப்பு விழா நடைபெற்றது. மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்து பேசினார்.
இதில் மடத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ் செல்வி ரஞ்சித், ஓ.பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலாளர் கணபதி, மாநில அமைப்பு செயலாளர் ராதா, மாநில போக்குவரத்து பிரிவு அண்ணா தொழிற்சங்க செயலாளர் சேர்மதுரை, ஐந்தாம் கட்டளை பஞ்சா யத்து தலைவர் முப்புடாதி பெரியசாமி, பொ ட்டல்புதூர் பஞ்சாயத்து தலைவர் கணேசன், மடத்தூர் பஞ்சா யத்து துணை தலைவர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பயணியர் விடுதி முன்பு தொடங்கிய ஊர்வலம் சங்கரன்கோவில் தேரடி திடலில் முடிவு பெற்றது.
- கூட்டத்தில் சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவி உமா மகேஸ்வரி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் அனைத்து கட்சி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் சங்கரய்யா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது. பயணியர் விடுதி முன்பு தொடங்கிய ஊர்வலம் சங்கரன்கோவில் தேரடி திடலில் முடிவு பெற்றது. இதனைத் தொடர்ந்து மவுன அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் அசோக்ராஜ் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் வக்கீல் கிருஷ்ணமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் இசக்கி துரை, தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, நகரச் செயலாளர் பிரகாஷ், ம.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் சுதா பாலசுப்பிரமணியன், நகரச் செயலாளர் ரத்தினவேல் குமார், பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட செயலாளர் தங்கபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் பீர் மைதீன், மனிதநேய மக்கள் கட்சி மருத்துவ அணி செயலாளர் திவான் மைதீன் உள்ளிட்ட பலர் அஞ்சலி உரையாற்றினர்.
கூட்டத்தில் சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவி உமா மகேஸ்வரி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன், ஆதிதிராவிட அணி அமைப்பாளர் கே.எஸ்.எஸ். மாரியப்பன், ம.தி.மு.க. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முகம்மது ஹக்கீம், ஒன்றிய செயலாளர் சசி முருகன், தே.மு.தி.க. தலைமை செயற்குழு உறுப்பினர் அயூப்கான், நாம் தமிழர் கட்சி தொகுதி செயலாளர் பீர் மைதீன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தைச் சேர்ந்த செல்வின், மதியழகன், செந்தில் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
- சூரசம்ஹாரம் நாளை (18-ந் தேதி) கோவில் கடற்கரை பகுதியில் நடைபெறுகிறது.
- கந்த சஷ்டி திருவிழாவில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த முருக பக்தர்கள் குடும்பத்துடன் வழிபாடு செய்வார்கள்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனை அவரது அலுவலகத்தில் பழனி நாடார் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை 18-ந் தேதி (சனிக்கிழமை) கோவில் கடற்கரை பகுதியில் நடைபெறுகிறது. இந்த கந்த சஷ்டி திருவிழாவில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த முருக பக்தர்கள் குடும்பத்துடன் வழிபாடு செய்வார்கள்.
நாளை தமிழகம் முழுவதும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் தென்காசி மாவட்ட முருக பக்தர்கள் வழி பாடு செய்யமுடியாத சூழ்நிலை யில் உள்ளனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி வருகிற 25-ந் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவித்து நாளை (சனிக்கிழமை) மாவட்டத்திற்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
நிகழ்ச்சியின் போது மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி, துணைத்தலைவர் உதய கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- அனைத்து கட்சியினர் சார்பில் சங்கராய்யா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- சிறப்பு அழைப்பாளர்களாக நெல்லை முன்னாள் எம்.பி. ராமசுப்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் போலீஸ் நிலையம் அருகே மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர் சங்கராய்யா உருவப்படத்திற்கு அனைத்து கட்சியினர் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆலங்குளம் இடைகமிட்டி செயலாளர் பாலு தலைமை தாங்கினார்.
இதில் நெல்லை முன்னாள் எம்.பி. ராமசுப்பு, தி.மு.க. நகர செயலாளர் நெல்சன், நகர காங்கிரஸ் தலைவர் வில்லியம் தாமஸ், ஆலங்குளம் பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் தங்கசெல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் வசந்தகுமார், திராவிடர் கழகம் நகர செயலாளர் பெரியார் குமார், ஆதி தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் பொதிகை ஆதவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சங்கரய்யா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா உறுப்பினர்கள் வெற்றிவேல், நல்லையா, பரமசிவன், கிளை செயலாளர்கள் சந்தனகுமார், பத்திரகாளி, ஆறுமுகம். ராசையா ஆதி விநாயகம், சாமுவேல் ராஜா, லிவிங்ஸ்டன் விமல், பி.எஸ்.என்.எல். ராஜேந்திரன், வேலாயுதம், ஏசுராஜா, பொன்னுத்துரை, குணசேகரன் பொன்னுசாமி. காமராஜர் மக்கள் முன்னேற்ற பேரவை நிறுவனர் தலைவர் ராஜா, மார்க்சிஸ்ட் ராமசாமி, பி.எஸ்.மாரியப்பன், வள்ளியம்மாள், வள்ளி மயில், வி.சி.க. அய்யனார்குளம் மாடசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அனைத்து கட்சியினர் சார்பாக சங்கரய்யா புகைப்படத்தை கையில் ஏந்தி முக்கிய ரத வீதிகள் வழியாக மவுன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது.
- வாசுதேவநல்லூர் பஸ் நிலையம் அருகே, சங்கரய்யா மறைவிற்கு சி.பி.எம். கட்சி சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
சிவகிரி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான சங்கரய்யா மறைந்ததை யொட்டி சிவகிரி காந்திஜி கலையரங்கம் முன்பாக அனைத்து கட்சியினர் சார்பாக சங்கரய்யா புகைப்படத்தை கையில் ஏந்தி முக்கிய ரத வீதிகள் வழியாக மவுன அஞ்சலி ஊர்வலம் புறப்பட்டு மீண்டும் கலையரங்கம் வந்து அடைந்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சிவசுப்பிர மணியன் தலைமை தாங்கினார். வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வாசு. வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான முத்தையா பாண்டியன், கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அமல்ராஜ், சுப்பிரமணியன், சுப்புலட்சுமி, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளர் மனோகரன், சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம், மற்றும் பலர் கலந்து கொண்டு இரங்கல் கூட்டத்தில் பேசினர். வாசுதேவநல்லூர் பஸ் நிலையம் அருகே, சங்கரய்யா மறைவிற்கு சி.பி.எம். கட்சி சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வாசுதேவநல்லூர் ஒன்றியச் செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார்.இதில் வாசுதேவநல்லூர் பேரூர் தி.மு.க. செயலாளர் பாலசுப்பிரமணியன், வட்டார காங்கிரஸ் தலைவர் மகேந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- செங்கோட்டை கேசி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உயர் கோபுர மின் விளக்குகளை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
- நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார்.
செங்கோட்டை:
செங்கோட்டை கேசி ரோடு, உலைத்திரடு, கேசி ரோடு முப்புடாதி அம்மன் கோவில் முன்பு, பம்ப் ஹவுஸ் ரோடு புதிய ரேசன்கடை அருகில், காந்தி ரோடு செல்வகணபதி பாத்திரக் கடை எதிர்புறம் ஆகிய பகுதிகளில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 10 மீட்டர் சிறிய உயர் கோபுர மின் விளக்குகளை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தனுஷ்குமார் எம்.பி. தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். செங்கோட்டை நகர செயலாளர் வக்கீல் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சண்முகராஜா வரவேற்று பேசினார். அதனைத் தொடா்ந்து தனுஷ்குமார் எம்.பி. உயர் கோபுர மின்விளக்கினை இயக்கி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகச்சாமி, தென்காசி கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம், தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் திவான்ஒலி, தென்காசி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா, இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள், பேரூர் செயலாளர், மணிகண்டன், நகர்மன்ற உறுப்பினர் இசக்கித்துரைபாண்டியன் மற்றும் நகர, வார்டு பிரதிநிதிகள், ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உட்பட பலா் கலந்து கொண்டனா். வார்டு பிரதிநிதி சங்கர்கணேஷ் நன்றி கூறினார்.
- குலசேகரநாத சுவாமி கோவிலில் சண்முகர் சன்னதியில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- விழா நாட்களில் தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடை பெறுகிறது.
செங்கோட்டை:
செங்கோட்டையில் உள்ள குலசேகரநாத சுவாமி கோவிலில் சண்முகர் சன்னதியில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கி வருகிற 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெற உள்ளது. இதனையொட்டி கொடியேற்ற நாளில் காலை கணபதி ஹோமத்துடன் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் செங்கோட்டை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். கொடியேற்றத்தை தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடை பெறுகிறது.
முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. அதனைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை ஆராட்டும், இரவு வள்ளி, தெய்வானையுடன் இரவு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
- பாலசுப்பிரமணிய சுவாமி, முத்துக்குமார சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
- நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிவகிரி:
சிவகிரி ஜமீனுக்கு பாத்தியப்பட்ட பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முதல் நாளான நேற்று காலையில் யாகசாலை பூஜையை தொடர்ந்து பாலசுப்பிரமணிய சுவாமிக்கும், முத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதனைத் தொடர்ந்து சோமாஸ்கந்தர் அலங்காரத்தில் சுவாமி நான்கு ரதவீதிகள் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடு களை சிவகிரி ஜமீன்தார் விக்னேஷ் ராஜா குடும்ப த்தினர் செய்து வருகின்றனர்.
- சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா 19-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
- சூரசம்ஹாரம் விழா வருகிற 18-ந்தேதி நடைபெறுகிறது.
தென்காசி:
பாவூர்சத்திரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வென்னிமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று தொடங்கி 19-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று காலை கணபதி ஹோமமும், கொடி யேற்றமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழா நாட்களில் தொடர்ந்து தினமும் காலை, மாலையில் பூஜைகள், தீபாராதனை நடை பெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் விழா வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி அன்று காலையில் கும்ப ஜெபம், மூலமந்திர ஹோமம், யாகசாலை பூஜை, சஷ்டி ஹோமம், விஷேச அபிஷேகம், தீபாராதனையும், மாலை சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு திருக்கல்யாணம் நடை பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.