என் மலர்
கார்
கியா EV9 ஃபுல் சைஸ் எலெக்ட்ரிக் எஸ்யுவி அறிமுகம்
- கியா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட EV9 எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் லெவல் 3 ADAS அம்சங்களை கொண்டுள்ளது.
- புதிய கியா EV9 மாடல் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 541 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது.
கொரிய கார் உற்பத்தியாளரான கியா தனது இரண்டாவது பிரத்யேக எலெக்ட்ரிக் வாகனம், கியா EV9 மாடலை அறிமுகம் செய்தது. இது மூன்று அடுக்கு இருக்கைகள் கொண்ட ஃபுல் சைஸ் எஸ்யுவி மாடல் ஆகும். இந்த எலெக்ட்ரிக் வாகனமும் E-GMP பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது. சர்வதேச சந்தையில் இது கியா நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் மாடலாக இருக்கும்.
கியா EV9 மாடலில் யுனைடெட் டிசைன் மற்றும் கியாவின் பாரம்பரியம் மிக்க டைகர் நோஸ் கிரில் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பாடி நிறத்தின் பின் டிஜிட்டல் லைட் பேட்டன் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. இந்த எஸ்யுவி நீண்ட வீல்பேஸ், குறைந்த ஓவர்ஹேங்குகளை கொண்டுள்ளது. இவை காருக்கு ஸ்போர்ட் தோற்றத்தை வழங்குகின்றன. காரில் கூர்மையான லைன்கள் மற்றும் ஃபெண்டர் ஃபிளேர்கள் வெளிப்புற ஹைலைட்களில் ஒன்றாக உள்ளன.
உள்புறம் கட்டாயம் இருக்க வேண்டிய சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத பத்து பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த அம்சம் பெறும் முதல் கியா கார் என்ற பெருமையை கியா EV9 பெற்றுள்ளது. இத்துடன் டேஷ்போர்டு மினிமலிஸ்ட் டிசைன், கிடைமட்டமாக பொருத்தப்பட்ட டிஸ்ப்ளேவில் கிளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீன் உள்ளது. இதன் இரண்டாவது அடுக்கில் சீரான தரை மற்றும் சுழலும் வகையான இருக்கைகள் உள்ளன.
இதனால் பின்புற இருக்கையில் அமர்வோர் ஒவ்வொருத்தர் முகத்தை பார்த்த நிலையில் அமர்ந்து கொள்ள முடியும். இதுதவிர 14 ஸ்பீக்கர் மெரிடியன் சவுண்ட் சிஸ்டம், ஸ்டீரிங் வீலில் இலுமினேட் செய்யப்பட்ட லோகோ, ஆம்பியண்ட் லைட்டிங், ஸ்டீரிங் வீல் டேபிள், ரிலாக்சேஷன் இருக்கைகள், டிராயர் போன்று திறக்கக்கூடிய கன்சோல் உள்ளன. இத்துடன் லெவல் 3 ADAS தொழில்நுட்பம் கொண்ட முதல் கியா கார் EV9 ஆகும்.
இதில் உள்ள 99.8 கிலோவாட் ஹவர் பேட்டரி முழு சார்ஜ் செய்தால் 541 கிலோமீட்டர் வரை செல்லும். இத்துடன் 800 வோல்ட் சார்ஜர் மூலம் இந்த காரை 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 239 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம். இதன் ஆல் வீல் டிரைவ் லாங் ரேஞ்ச் மாடல் அதிகபட்சம் 283 கிலோவாட் மற்றும் 600 நியூட்டர் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த எஸ்யுவியில் மேம்பட்ட டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், ஆட்டோ டெரைன் மோட் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் கியா EV9 முன்பதிவு கொரியாவில் துவங்கவுள்ளது. பின் 2023 இறுதியில் ஐரோப்பா, அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் சில ஆசிய சந்தைகளில் கியா EV9 அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் கியா EV9 அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.