search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க சன்னியாசிகள், மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் என 8,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • அழைப்பு விடுக்கப்பட்டுள்ள 8000 பேரில் 3500 பேர் சன்னியாசிகள், மற்றவர்கள் சிறப்பு அழைப்பாளர்கள் ஆவர்.

    உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜன.22-ல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது. அன்று நண்பகல் 12.45 மணி அளவில் கோவில் கருவறையில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது.

    ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் அறிவுரைப்படி, கும்பாபிஷேக விழாவில், நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    அதன்படி, அயோத்தி - ஶ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா சார்பில் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து, கும்பாபிஷேக நிகழ்வுக்கு கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஆர்எஸ்எஸ் தென்னிந்திய அமைப்பாளர் செந்தில்குமார், பாஜகவின் அர்ஜுன மூர்த்தி உள்ளிட்டோர் வருகை தந்து அழைப்பிதழ் வழங்கினர்.

    இந்நிலையில், வருகிற 22-ந்தேதி நடைபெறும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார்.


    அதற்காக வரும் 21-ந்தேதியே நடிகர் ரஜினிகாந்த் அயோத்திக்கு புறப்பட்டு செல்கிறார். அவருடன் மனைவி லதா, சகோதரர் சத்யநாராயணாவும் பங்கேற்கின்றனர்.

    ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க சன்னியாசிகள், மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் என 8,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அழைப்பு விடுக்கப்பட்டுள்ள 8000 பேரில் 3500 பேர் சன்னியாசிகள், மற்றவர்கள் சிறப்பு அழைப்பாளர்கள் ஆவர். 8000 பேருக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் உத்தரபிரதேச அரசு செய்து வருகிறது.

    ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முடித்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் வரும் 23-ந்தேதி சென்னை திரும்புகிறார்.

    • நான் கர்நாடக சங்கீதத்தில் எல்லாம் கரை கண்டு வந்தவன் இல்லை.
    • நான் என்னை அப்படி நினைத்துக்கொள்வதில்லை.

    சென்னை தியாகராயர் நகரில் நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் இளையராஜா பேசியதாவது, எனக்கு மொழி அறிவோ, இலக்கிய அறிவோ கிடையாது. நான் முதன் முதலில் ஒரு படத்திற்கு இசையமைக்கிறேன். அந்த படம் பிண்ணனி இசைக்காக என்னிடம் வருகிறது. முதல் ரீல் ஓடுது கதாநாயகி அறிமுக காட்சி. அதில் ஆண்டாள் நடனத்தை கதாநாயகி பார்க்கிறாள். அதற்கு இசையமைத்தேன். அதனால் முதல் படத்திலேயே ஆண்டாள் எனக்கு அருள் புரிந்துவிட்டாள் என நினைத்துக்கொண்டேன். நான் சிவபக்தன்; ஆனால் இதற்கெல்லாம் எதிரி இல்லை.


    நான் கர்நாடக சங்கீதத்தில் எல்லாம் கரை கண்டு வந்தவன் இல்லை. இசைஞானி என்ற பேருக்கு தகுதியானவனா என்று கேட்டால் என்னைப் பொறுத்த வரையில் கேள்விக்குறிதான். ஆனால் மக்கள் அப்படி அழைக்கிறார்கள். அதற்கு நன்றி. நான் என்னை அப்படி நினைத்துக்கொள்வதில்லை. அதனால் எனக்கு ஒரு கர்வமும் கிடையாது. அதை சின்ன வயதிலேயே தூக்கி எறிந்துவிட்டேன். சின்ன வயதில் அண்ணனுடன் கச்சேரி செல்கையில், நான் ஹார்மோனியம் வாசிப்பேன். ஜனங்கள் கைதட்டுவார்கள். அதை கேட்கும் போது பெருமையாக இருந்தது. தொடர்ந்து பயிற்சி பெற்று நிறைய வாசித்தேன். கைதட்டலும் ஜாஸ்தியாகி, கர்வமும் ஜாஸ்தியாகி கொண்டே சென்றது.


    ஒரு கட்டத்தில், இந்த கைதட்டல், பாட்டுக்கா, மியூசிக்கிற்கா, இல்லை நாம் வாசிக்கிற திறமைக்கா என மனசுக்குள் ஒரு கேள்வி. அப்புறம் டியூனுக்காகத்தான் கை தட்டல் வருகிறது என உணர்ந்தேன். பாட்டு விஸ்வநாதன் சார் போட்டது. அதனால் கைதட்டல் அவருக்கு போகுது. அதன் பிறகு என் தலையில் இருந்த பாரமெல்லாம் இறங்கிப்போய் விட்டது. நமக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று புரிந்து கொண்டேன். இந்த கர்வத்திலிருந்து எப்போதோ நான் விடுப்பட்டுவிட்டேன். அதனால் எந்த புகழ் மொழியும், எந்த பாராட்டுகளும் என்னை சிந்திக்க வைக்காது என்று பேசினார்.

    • விஜயகாந்தின் நினைவிடத்திற்கு தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
    • விஜயகாந்த் மறைவு ரசிகர்களை பெரிதும் பாதித்தது.

    நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் கடந்த 28-ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு தமிழகம் முழுவதும் உள்ள மக்களை பெரிதும் பாதித்தது. விஜயகாந்தின் உடல் இறுதி அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்தது.


    இவரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். மேலும் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் நேரிலும், சமூக வலைதளத்தின் மூலமாகவும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து விஜயகாந்தின் நினைவிடத்திற்கு தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


    இந்நிலையில், மறைந்த நடிகர் விஜயகாந்த் இல்லத்திற்கு இயக்குனர் சசிக்குமார் சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு அவரின் புகைப்படத்தை வணங்கி அஞ்சலி செலுத்தினார். மேலும், தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கும் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர் பேசிய அவர், நடிகர் சங்க கடனை அடைத்து மீட்டெடுத்த மிகப்பெரிய ஆளுமையான விஜயகாந்தின் பெயரை புதிய நடிகர் சங்க கட்டிடத்திற்கு சூட்ட வேண்டும் என்று  கோரிக்கை விடுத்துள்ளார்.

    • இயக்குனர் ஆர். அரவிந்தராஜ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'வீரமங்கை வேலுநாச்சியார்' .
    • இந்த படத்தை டிரண்ட்ஸ் சினிமாஸ் பேனரில் ஜெ.எம்.பஷீர் தயாரிக்கிறார்.

    இயக்குனர் ஆர். அரவிந்தராஜ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'வீரமங்கை வேலுநாச்சியார்' . இந்த படத்தில் வேலுநாச்சியாராக முதன்மை வேடத்தில் நடித்து திரையுலகில் அறிமுகம் ஆகிறார் ஆயிஷா. டிரண்ட்ஸ் சினிமாஸ் பேனரில் ஜெ.எம்.பஷீர் இந்த படத்தை தயாரிக்கிறார்.

    'வீரமங்கை வேலுநாச்சியார்' திரைப்படத்தில் முக்கிய பாத்திரமான பெரிய மருதாக இப்படத்தின் தயாரிப்பாளரும், 'தேசிய தலைவர்' திரைப்படத்தில் பசுகம்பொன் முத்துராமலிங்க தேவராக நடித்திருப்பவருமான ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார். இவரது மகள் தான் ஆயிஷா என்பது குறிப்பிடத்தக்கது.

    'வீரமங்கை வேலுநாச்சியார்' திரைப்படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. திரைப்படம் குறித்து பேசிய தயாரிப்பாளரும் நடிகருமான ஜெ.எம்.பஷீர், "வேலு நாச்சியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரையில் கொண்டு வருவதில் மிகவும் பெருமை அடைகிறோம். இதில் முதன்மை வேடத்தில் எனது மகள் ஆயிஷா நடிப்பது பெரும் மகிழ்ச்சி," என்றார்.


    ஆயிஷா

    மேலும், நமது நாட்டுக்காகவும், தேச விடுதலைக்காகவும் தன்னலம் இன்றி போராடிய மாபெரும் ஆளுமைகள் குறித்து இன்றைய இளைய சமுதாயம் அறிவது அவசியம் என்றும் இதன் காரணமாகவே 'தேசிய தலைவர்' மற்றும் 'வீரமங்கை வேலுநாச்சியார்' உள்ளிட்ட திரைப்படங்களை தான் தயாரித்து வருவதாகவும் பஷீர் தெரிவித்தார்.

    'தேசிய தலைவர்' திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ள நிலையில் அதை தொடர்ந்து 'வீர மங்கை வேலு நாச்சியார்' படப்பிடிப்பு தொடங்கும் என்று பஷீர் கூறினார். வரலாற்று ஆவணங்களை ஆய்வு செய்து இப்படத்தின் ஸ்கிரிப்ட் உருவாக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

    'வீர மங்கை வேலு நாச்சியார்' திரைப்படத்திற்கு ஜெ ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, சண்டைக் காட்சிகளை மிராக்கிள் மைக்கேல் வடிவமைக்கிறார். பிரபல நடிகர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக இணைய உள்ளனர். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தயாரிப்பாளர் ஜெ எம் பஷீர் கூறினார்.

    • விஜயகாந்த் மறைவு தமிழகம் முழுவதும் உள்ள மக்களை பெரிதும் பாதித்தது.
    • இவரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்.

    நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் கடந்த 28-ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு தமிழகம் முழுவதும் உள்ள மக்களை பெரிதும் பாதித்தது. விஜயகாந்தின் உடல் இறுதி அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்தது.


    இவரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். மேலும் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் நேரிலும், சமூக வலைதளத்தின் மூலமாகவும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து விஜகாந்தின் நினைவிடத்திற்கு தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகர் சூர்யா இன்று விஜயகாந்த் நினைவிடத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுது அஞ்சலி செலுத்தினார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், "அண்ணனின் இந்த பிரிவு ரொம்ப துயரமானது. ஆரம்பகாலக்கட்டத்தில் விஜயகாந்த் உடன் 'பெரியண்ணா'படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் தட்டில் இருந்து உரிமையாக எனக்கு சாப்பாடு எடுத்து வைத்தார். நீ நடிக்கிறார் உனக்கு சக்தி வேண்டும் என்று கூறினார்.


    நட்சத்திரம் என்றாலே விலகி இருப்பார்கள். ஆனால் விஜயகாந்த் எல்லோரையும் அருகில் வைத்திருப்பார். அவரை மறுபடியும் சந்தித்து உட்கார்ந்து பேச முடியவில்லை என்று வருத்தமாக இருக்கிறது. விஜயகாந்த் போன்று இன்னொருத்தர் இல்லை. இறுதி அஞ்சலியில் அவர் முகத்தை பார்க்க முடியவில்லை என்பது ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவரின் குடும்பத்தாருக்கும் சொந்தங்களுக்கும், தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

    • சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அயலான்’.
    • இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


    சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியாகவுள்ள திரைப்படம் 'அயலான்' தான் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. 'அயலான்' திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகவுள்ளது.


    அயலான் போஸ்டர்

    இந்நிலையில், 'அயலான்' படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த படம் குடும்பங்கள் பார்க்கும் வகையில் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    • பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
    • சிவராஜ்குமார் விஜய்-இன் அரசியல் வருகை குறித்து கருத்து.

    இந்திய திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஜய். தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய மாநிலங்களிலும் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் ஏராளம். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார்.

    சினிமா மட்டுமின்றி அரசியலிலும் கால்பதிக்கும் நோக்கில் நடிகர் விஜய் பல்வேறு நலத்திட்ட பணிகளை பொதுவெளியில் செய்ய துவங்கியுள்ளார். நடிகர் விஜய் அரசியலில் களமிறங்குவது பற்றி பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

     


    இது குறித்து பேசிய அவர், "எனது 100-வது படம் தொடர்பான விழாவில் நடிகர் விஜய் மற்றும் சூர்யா ஆகியோர் கலந்து கொண்டனர். விஜய்யின் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். விஜய்யிடம் வித்தியாசமான ஸ்டைல் இருக்கு. அவர் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார். அவர் ஒரே இரவில் ஸ்டார் ஆனவர் இல்லை. அவர் நிறைய கஷ்டப்பட்டிருக்கார்."

    "அவர் தனது தோற்றம், நடிக்கும் விதம், கதைகளை தேர்வு செய்யும் விதம் என அனைத்திலும் முழுமையாக தன்னை செதுக்கிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு முன்னேறுபவர்களை எங்களுக்கு மிகவும் பிடிக்கும். அவர் மாணவர்களுக்கு உதவி செய்து, அவர்களுடன் உரையாடும் வீடியோவை பார்த்தேன். அவரை பற்றி நல்ல விதமாக உணர்கிறேன்."

    "அரசியலுக்கு வருவதற்கான திறன் அவரிடம் இருக்கு. அவர் தன்னை மிகவும் நம்புகிறார். அந்த நம்பிக்கை மக்களுக்கும் பிடித்துள்ளது. நடிகர் அரசியலுக்கு வந்தால், ஏன் வரவேண்டும் என்பார்கள். மக்கள் அவரை ஏற்றுக் கொள்கிறார்கள். அவரிடம் அதற்கான ஆளுமை இருக்கிறது," என தெரிவித்தார். 

    • தனுஷ் அசைவம் சாப்பிடமாட்டார்.
    • நீங்கள் உலக அளவில் சிறந்த நடிகராக மாறியுள்ளீர்கள்.

    தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் 'கேப்டன் மில்லர்'. அருண் மாதேஸ்வரன் இயக்கி இருக்கும் இந்த படம் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.


    இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இதையடுத்து, 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், நடிகர் சிவராஜ் குமார் பேசியதாவது, கதை சொல்லலாம் இருந்தாலும் பரவாயில்லை. தனுஷ் படம் என்றால் நான் நடிக்கிறேன் என்றேன். தனுஷை அவரது முதல் படத்தில் இருந்தே எனக்கு பிடிக்கும். தனுஷிடம் நான் என்னை பார்க்கிறேன். தனுஷ் படத்தை பலமுறை பார்த்துள்ளேன். எனக்கு தனுஷ் பாடல் பாடியுள்ளார்.


    தனுஷ் அசைவம் சாப்பிடமாட்டார். அவருக்கு படப்பிடிப்பு தளத்தில் எனது மனைவி சாம்பார் செய்து கொடுப்பார்கள். அவரது மகன்கள் வருவார்கள் கிரிக்கெட் விளையாடுவார்கள். நீங்கள் உலக அளவில் சிறந்த நடிகராக மாறியுள்ளீர்கள். இதிலும் அப்படித்தான் நடித்துள்ளார். உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். ஜெயிலர் படத்துக்காக எனக்கு அன்பு கொடுத்ததற்கு நன்றி. அசுரன் படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்து நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை. இளம் வயது மற்றும் வயதான தோற்றம் என நடிப்பது மிகவும் கடினம். அதனை தனுஷ் நன்றாக செய்திருந்தார். 

    • இசையமைப்பாளர் மணிசர்மா பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
    • இவர் தமிழில் சுமார் 30-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

    சினிமா திரையுலகில் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்தவர் மணிசர்மா. இவர் விஜய்யின் 'ஷாஜஹான்', 'யூத்', 'போக்கிரி' போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்த படங்களின் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றது.


    இவர் தமிழில் சுமார் 30-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தெலுங்கில் பவன் கல்யாண், மகேஷ் பாபு ஆகியோரின் சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இப்படி பல படங்களுக்கு இசையமைத்த மணிசர்மாவிற்கு வாய்ப்புகள் வரவில்லை என்று கூறப்படுகிறது.

    இது தொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், "மகேஷ் பாபு, பவன் கல்யாண் ஆகியோர் வாய்ப்பு கொடுத்தால் சிறப்பாக இருக்கும். அவர்களின் எல்லா படத்திற்கும் நான் இசையமைக்க வேண்டும் என்று கேட்கவில்லை. ஒரு படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு வாய்ப்பு கொடுத்தல் ஒரு படத்திற்கு தமனுக்கும் ஒரு படத்திற்கு எனக்கும் தரலாம் அல்லது அவர்களுக்கு இரண்டு படங்களுக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டு எனக்கு ஒரு படம் தரலாம். இப்படி செய்தால் வழக்கமான உணர்வு இல்லாமல் மாறுபட்ட உணர்வு ரசிகர்களுக்கு கிடைக்கும்" என்று கூறினார்.


    பல முக்கிய படங்களுக்கு இசையமைத்துள்ள மணிசர்மா இப்படி நேரடியாக வாய்ப்பு கேட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    • நடிகர் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் 'கேப்டன் மில்லர்'. அருண் மாதேஸ்வரன் இயக்கி இருக்கும் இந்த படம் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

    இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    இந்நிலையில், 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர் தனுஷ் பேசியதாவது, நான் 2002-ல் சிறுக சிறுக சேர்த்த துளி என்னால் இன்று பெரு வெள்ளமாக வந்துள்ளது. இது நான்சேர்த்த சொத்து. கில்லர் கில்லர் கேப்டன் மில்லர். இப்படத்தை பற்றி யோசித்தால் என் மனதிற்கு முதலில் வருவது உழைப்பு. எல்லோரும் வேர்வை, ரத்தம் சிந்தி நிஜமாக உயிரை பணயம் வைத்து எடுத்த படம் இது. அருண் மாதேஸ்வரன் உண்மையில் டெவில். மிகவும் மிருகத்தனமாக உழைப்புக்கு சொந்தக்காரர். அவரது மற்றும் இந்த டீமின் உழைப்பில் 50 சதவீதம் கூட நான் பண்ணவில்லை.



    என்னை பூ போல பார்த்துக்கொண்டனர். நான் நிறைய புதுமுக இயக்குனர்களுடன் படம் பண்ணியுள்ளேன். சுப்பிரமணிய சிவா, பூபதி பாண்டியன், ஜவகர், பரத்பாலா ,வெற்றிமாறன். அருண் மாதேஸ்வரனை பார்த்த போது எனக்கு வெற்றிமாறன் ஞாபகம் வந்தது. தன்னம்பிக்கை, திறமை, அரகன்ஸ் எல்லாம் இவரிடமும் உள்ளது. கரோனா நேரத்தில் எனக்கு கதை சொன்னார். 15 நிமிடங்கள் இப்படத்தின் லைன் சொன்னார். நான் படம் பார்த்தேன் அப்படி இருக்கு. அப்படி பண்ணிட்டீங்க. நான் அவரை சந்திக்கும் போது ராக்கி வெளியாகவில்லை. என்னிடம் இந்த கதையும் சொல்லல. ஆனால் இது தெரிந்தது இது சம்பவம் பண்ற கை அப்படினு. நல்லவேளையாக நான் முதலில் பண்ணிட்டேன்.


    நேரம் நல்லா இருந்தா நீங்கள் மிகப் பெரிய இடத்துக்கு செல்வீர்கள். ஜிவி எப்போ எது கேட்டாலும் உடனே ஓடிவருவார். சிவராஜ் குமார் நீங்கள் பல மேடைகளில் எனது ரசிகன் என்று சொல்லியுள்ளீர்கள் அதற்கு நான் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. நீங்கள் சிரிக்கும் போது உங்கள் முகத்தில் உங்கள் அப்பா, தம்பி தெரிகிறார்கள் மூன்று பேரும் சிரிப்பது போலதான் உள்ளது. அப்பா பெயரை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று உங்களை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். கேப்டன் மில்லர் படத்துக்கு அருண் மாதேஸ்வரன் வைத்துள்ள டேக் லைன் மரியாதை தான் சுதந்திரம். இப்போ எதுக்கு இங்க மரியாதை இருக்கு யாருக்கு சுதந்திரம் இருக்கு. எது செய்தாலும் அதில் குறை சொல்ல ஒரு கூட்டம் குறை சொல்லிக்கொண்டே இருக்கிறது.


    சின்ன கூட்டம் தான் ஆனால் இருக்கிறது. அது உனக்கு இது எனக்கு என்பது எதற்கு ... அவன் (இறைவன்) முடிவு செய்யட்டும் அப்போது பாத்துக்கலாம். எது எதற்கோ ஓடுகிறோம் செய்கிறோம் ஆட்டம் எல்லாம் ஆடுகிறோம். நமது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் அந்த ஆட்டம் நின்றுவிடும் நமது முக்கியத்துவம் எது என்று தெரிந்துவிடும். இந்த படம் ரொம்ப புதுசாக இருக்கும் என்று நம்புகிறேன். முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக இருக்கும் என்று நம்புகிறேன். உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். வடசென்னை 2 வரும். கண்டிப்பா வரும். அதுக்கு என்று ஒரு நேரம் இருக்கு. இத்தனை உள்ளங்கள் வேண்டும் வேண்டும் என்று சொல்லும்போது வராமலா போய்டும் அது வரும் போது அது பத்தி பேசலாம். மாரி செல்வராஜ் மீது மரியாதை கூடிக்கொண்டே போகிறது. நம்ம படத்தை பத்தி நிறைய பேச வேண்டும். அதை பிறகு பேசலாம். எண்ணம் போல் வாழ்க்கை.. எண்ணம் போல்தான் வாழ்க்கை என்று பேசினார்.

    • இந்தி ரசிகர்கள் தென்னிந்திய படங்களையும் விரும்ப தொடங்கி உள்ளனர்
    • நாடு முழுவதும் உள்ள ரசிகர்களை ஈர்க்க இயக்குனர்கள் முயல்கின்றனர்

    தென்னிந்திய மாநிலங்களில் இருந்து நாடு முழுவதும் வெளியிடப்படும் திரைப்படங்கள் பெரும் வசூலை அள்ளி குவிக்கின்றன. புஷ்பா, கேஜிஎஃப்-2, காந்தாரா, ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட படங்கள் இதற்கு உதாரணங்கள்.

    தற்போதைய இயக்குனர்களும், முன்னணி தென்னிந்திய கதாநாயகர்களும் நாடு முழுவதும் உள்ள ரசிகர்களை ஈர்க்கும் வகையில் தங்கள் படங்கள் உருவாக வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர்.

    ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள முன்னணி நடிகரை தங்கள் திரைப்படங்களில் ஒரு வேடத்தில் இடம்பெற செய்து நாடு முழுவதும் உள்ள பல மாநில ரசிகர்களையும் ஈர்க்க தொடங்கி உள்ளனர்.

    இவ்வருடம் வெளியாகப் போகும் 7 தென்னிந்திய திரைப்படங்கள், பாலிவுட்டில் பெரும் வசூலை குவிக்கப் போவதாக திரைப்பட வர்த்தகர்கள் கணிக்கின்றனர்.

    அந்த திரைப்படங்கள் பின்வருமாறு:

    1. கல்கி 2898 ஏ.டி. - பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள படம். பிரபாஸ் மற்றும் தீபிகா ஆகியோருடன் கமல்ஹாசன் மற்றும் அமிதாப் பச்சன் நடிப்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.


    2. புஷ்பா 2, தி ரூல் - அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கும் இப்படம், முதல் பாகத்தை விட சிறப்பாக உருவாக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


    3. காந்தாரா, சேப்டர் 1 - காந்தாரா முதல் பாகத்தை விட பெரும் வெற்றி பெறும் முனைப்பில், ரிஷப் ஷெட்டி இப்படத்திற்காக உழைத்து வருகிறார்.


    4. தேவரா பாகம் 1 - ஆர்ஆர்ஆர் வெற்றிக்கு பிறகு ஜுனியர் என்டிஆர் ரசிகர்களுக்கு தரும் இவ்வருட பரிசு. இப்படத்தின் மூலம் ஜான்வி கபூர் தெலுங்கு திரையுலகில் நுழைகிறார்.


    5. கேம் சேஞ்சர் - முன்னணி தெலுங்கு ஹீரோவான ராம்சரணும், தமிழ் திரையுலகின் மூத்த இயக்குனர் ஷங்கரும் இணைந்துள்ள படம். அரசியல் நெடி அதிகம் உள்ள இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார்.


    6. இந்தியன் 2 - 1996ல் நாடு முழுவதும் சக்கைபோடு போட்ட கமல்ஹாசன்-ஷங்கர் கூட்டணியில் உருவான இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம். சேனாபதியாக மீண்டும் மிரட்ட வருகிறார் கமல்.


    7. கங்குவா - நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் ஹீரோ சூர்யா நாயகனாக நடிக்கும் படம். இதுவரை இல்லாத சாதனையாக 38 மொழிகளில் உருவாகிறது.


    இப்படங்கள் ரசிகர்களிடம் எவ்வளவு தூரம் வரவேற்பை பெறும் என்பது வரும் மாதங்களில் தெரிந்து விடும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த நடிகர் விஜய் சென்றிருந்தார்.
    • அஞ்சலி செலுத்திவிட்டு விஜய் புறப்படும் பொழுது மர்ம நபர் ஒருவர் செருப்பை வீசினார்.

    நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் கடந்த 28-ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு தமிழகம் முழுவதும் உள்ள மக்களை பெரிதும் பாதித்தது. விஜயகாந்தின் உடல் இறுதி அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்தது. இவரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். மேலும் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் நேரிலும், சமூக வலைதளத்தின் மூலமாகவும் அஞ்சலி செலுத்தினர்.


    இதைத்தொடர்ந்து விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த நடிகர் விஜய் சென்றிருந்தார். அப்போது கண்கலங்கியபடி விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு விஜய் புறப்படும் பொழுது மர்ம நபர் ஒருவர் செருப்பை வீசினார். அதுமட்டுமல்லாமல், விஜய்யை வெளியேறச் சொல்லி எதிர்ப்புகள் கிளம்பியதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

    இந்நிலையில், நடிகர் விஜய் மீது செருப்பை வீசிய சம்பவம் தொடர்பாக தென் சென்னை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், கடந்த 28/12/ 2023 அன்று நடிகர் திரு கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இறப்பிற்கு துக்கம் விசாரிப்பதற்காக இரவு சுமார் 10:30 மணி அளவில் தளபதி விஜய் அவர்கள், சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் திருமண மண்டபத்திற்கு வருகை தந்திருந்த தளபதி விஜய் அவர்களின் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காலணியை கழற்றி தளபதியை நோக்கி எரிந்துள்ளார்.


    இதனால் தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தளபதி விஜய் அவர்களின் ரசிகர்கள், அவர்களின் சொந்தங்கள், மற்றும் அவர் மீது பாசத்தை வைத்துள்ள ஒட்டுமொத்த மக்களின் மனதை புண்படுத்தும் வகையிலும் அருவருக்கத்தக்க இம்மாதிரியான செயலில் ஈடுபட்ட, அந்த நபரை கண்டுபிடித்து அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும் படியும் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×