என் மலர்
கிரிக்கெட் (Cricket)

5 விக்கெட் வீழ்த்திய பாட் கம்மின்ஸ்
2 நாளில் முடிவுக்கு வந்த பிரிஸ்பேன் டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவை எளிதில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா
- முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.
- இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் வரும் 26-ம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது.
பிரிஸ்பேன்:
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 48.2 ஓவர்களில் 152 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. விக்கெட் கீப்பர் கைல் வெரைன் 64 ரன்னும், பவுமா 38 ரன்னும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன் தலா 3 விக்கெட்டும், கம்மின்ஸ், ஸ்காட் போலன்ட் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணியும், தென்ஆப்பிரிக்க வீரர்களின் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆரம்பத்தில் தடுமாறியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 33.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 145 ரன்கள் சேர்த்திருந்தது.
இந்நிலையில், நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 50.3 ஓவரில் 218 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
66 ரன்கள் வித்தியாசத்தில் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸ் போலவே இதிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணி 37.4 ஓவரில் 99 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலியா அணிக்கு 34 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியா சார்பில் பாட் கம்மின்ஸ் 5 விக்கெட்டும், ஸ்டார்க், போலண்டு தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா முதலில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் உஸ்மான் கவாஜா 2 ரன்னிலும், டேவிட் வார்னர் 3 ரன்னிலும், ஸ்மித் 6 ரன்னிலும், ஹெட் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர்.
இறுதியில், ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. டிராவிஸ் ஹெட் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 26-ம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது.