search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் மகளிர் கேப்டன் ஓய்வு
    X

    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் மகளிர் கேப்டன் ஓய்வு

    • இது ஒரு நம்பமுடியாத பயணம், சவால்கள், வெற்றிகள் மற்றும் மறக்க முடியாத நினைவுகள் நிறைந்தது.
    • பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஆதரவு விலைமதிப்பற்றது.

    பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பிஸ்மா மரூப், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 32 வயதான அவர் பாகிஸ்தான் அணிக்காக 136 ஒருநாள் போட்டி மற்றும் 140 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

    அவர் சர்வதேச கிரிக்கெட்டில் சதத்தைப் பதிவு செய்யத் தவறிய போதிலும், பாகிஸ்தானுக்காக இரண்டு வடிவங்களிலும் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 21 அரை சதங்களுடன் 3369 ரன்களும் டி20 போட்டிகளில் 12 அரை சதங்களுடன் 2893 எடுத்துள்ளார்.

    2006-ல் 15 வயதில் சர்வதேச அரங்கில் அறிமுகமான அவர், 2016-ல் டி20 மற்றும் ஒரு வருடத்திற்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். கேப்டனாக 34 ஒருநாள் போட்டி (16 வெற்றி), 62 (27 வெற்றி) டி20 போட்டிகளில் அணியை வழிநடத்தி உள்ளார். பாகிஸ்தான் பெண்கள் கேப்டன்களில் சிறந்த வெற்றி சதவீதத்தை இவர் படைத்துள்ளார்.

    பல காயங்களுடன் போராடிய போதிலும், பிஸ்மா மரூப் எட்டு உலகக் கோப்பைகளில் இடம்பெற்றார். மேலும் 2010 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்ற அணியில் ஒரு அங்கமாகவும் இருந்தார்.

    மரூப் தனது லெக்ஸ்பின் மூலம் 80 சர்வதேச விக்கெட்டுகளையும் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நான் மிகவும் விரும்பும் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். இது ஒரு நம்பமுடியாத பயணம், சவால்கள், வெற்றிகள் மற்றும் மறக்க முடியாத நினைவுகள் நிறைந்தது. ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை எனது கிரிக்கெட் பயணம் முழுவதும் எனக்கு உறுதுணையாக இருந்த எனது குடும்பத்தினருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    "என்னை நம்பி, எனது திறமையை வெளிப்படுத்தும் தளத்தை வழங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஆதரவு விலைமதிப்பற்றது.

    Next Story
    ×