என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டோனியின் இடத்தை கண்டிப்பாக நிரப்புவேன் - இஷான் கிஷன் நம்பிக்கை

- நான் வளரும் போது என்னுடைய ரோல் மாடல் எம்எஸ் டோனி ஆவார்.
- இரட்டை சதமடித்ததை விட டோனியிடம் ஆட்டோகிராப் வாங்கியதே தமக்கு மிகவும் பிடித்த தருணம் என்று கூறியுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி களமிறங்குகிறது. இத்தொடரில் ஹர்திக் பாண்டியா தலமையில் இந்தியா களமிறங்குகிறது.
இத்தொடரின் முதல் போட்டி இன்று ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறுகிறது. இந்திய அணியில் ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து இஷான் கிஷன் மட்டும் விளையாடுகிறார். இடது கை அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக விளையாடி வரும் அவர் சமீபத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டை சதமடித்த வீரராக உலக சாதனை படைத்தார்.
மேலும் தனது மாநிலத்தைச் சேர்ந்த டோனியை தனது குருவாக கொண்ட அவர் இரட்டை சதமடித்ததை விட 18 வயதில் தன்னுடைய பேட்டில் டோனியிடம் ஆட்டோகிராப் வாங்கியதே தமக்கு மிகவும் பிடித்த தருணம் என்று கூறியுள்ளார். அத்துடன் அவரது இடத்தை தம்மால் நிரப்ப முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து இஷான் கிஷன் பேசியதாவது:-
நான் முதலில் 23 நம்பரை என்னுடைய ஜெர்சியில் கேட்டேன். ஆனால் அது ஏற்கனவே குல்தீப் யாதவ் பயன்படுத்தி விட்டதால் வேறு நம்பரை கேட்குமாறு என்னிடம் கூறினார்கள். அப்போது எனது அம்மாவிடம் போன் செய்து உங்களுக்கு பிடித்த நம்பரை சொல்லுங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன 32 நம்பரை மறு வார்த்தை பேசாமல் எனது ஜெர்சியில் பயன்படுத்தி வருகிறேன். நான் எதற்காகவும் பயப்பட மாட்டேன். எனது வழியில் வரும் அனைத்து சவாலுக்கும் நான் தயாராக இருக்கிறேன்.
டோனி குறித்து பேசும் போது, 18 வயதில் டோனியை முதல் முறையாக சந்தித்தது ஆட்டோகிராப் வாங்கியது என்னால் எப்போதும் மறக்க முடியாது. அவருடைய கையெழுத்து என்னுடைய பேட்டில் இருப்பதற்கு மிகவும் பெருமைப்படுகிறேன்.
நான் வளரும் போது என்னுடைய ரோல் மாடல் எம்எஸ் டோனி ஆவார். ஏனெனில் அவர் எங்கள் ஊரிலிருந்து எங்களது ஜார்க்கண்ட் அணிக்காக விளையாடியுள்ளார். எனவே இந்திய அணியில் அவரது இடத்தை நான் நிரப்ப விரும்புகிறேன். அதனால் தான் நான் இங்கு இருக்கிறேன். அவரைப் போலவே எனது அணிக்காக நான் நிறைய போட்டிகளை வெற்றி பெற்று கொடுக்க விரும்புகிறேன்.
என்று அவர் கூறினார்.