என் மலர்
கிரிக்கெட் (Cricket)
ஷபாலி வர்மா, ஸ்வேதா அரை சதமடித்து அசத்தல் - யு.ஏ.இ.யை வீழ்த்தியது இந்தியா
- முதலில் ஆடிய இந்திய மகளிர் அணி 3 விக்கெட்டுக்கு 219 ரன்கள் எடுத்தது.
- ஷபாலி வர்மா மற்றும் ஸ்வேதா செராவத் ஆகியோர் அரை சதமடித்து அசத்தினர்.
பெனோனி:
பெண்களுக்கான முதலாவது ஜூனியர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகளில் 'டி' பிரிவில் இந்தியா, தென்ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் அங்கம் வகிக்கும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
நேற்று இந்திய அணி தனது 2வது ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை பெனோனி நகரில் எதிர்கொண்டது. டாஸ் ஜெயித்த யு.ஏ.இ. அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 219 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஷபாலி வர்மா 78 ரன்கள் எடுத்தார். ஸ்வேதா செராவத் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அரை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரிச்சா கோஷ் 49 ரன்னில் அவுட்டானார்.
இதையடுத்து, 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐக்கிய அரபு அமீரகம் களமிறங்கியது. தொடக்கம் முதல் இந்திய மகளிர் அணி கட்டுக்கோப்பாக பந்து வீசியது.
இறுதியில், யு.ஏ.இ. அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு 97 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய மகளிர் அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியுடன் மோதுகிறது.