search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    விக்கெட் போகும்போதெல்லாம் அந்த சத்தம்.. 2 சிக்சர் விளாசி ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய டோனி
    X

    விக்கெட் போகும்போதெல்லாம் 'அந்த சத்தம்'.. 2 சிக்சர் விளாசி ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய டோனி

    • ஒவ்வொரு விக்கெட் போன போதும் டோனி பெயரை ரசிகர்கள் உச்சரித்தனர்.
    • டோனி பேட்டிங் செய்ய களத்துக்குள் நுழைந்ததும் ரசிகர்கள் ஒட்டுமொத்த குரலில் அவரை வரவேற்றனர்.

    சென்னை:

    சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு விளையாடியதால் ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்தனர்.

    கேப்டன் டோனி மீதான வெறித்தனமான அன்பு அதிகமாக காணப்பட்டது. இதுதான் தனது கடைசி ஐ.பி.எல். என்று ஏற்கனவே டோனி அறிவித்து விட்டதால் அவர் மீதான ஈர்ப்பு கூடுதலாகவே இருந்தது.

    டாஸ் போடுவதற்கு களம் புகுந்ததும் முதல் கடைசி வரை மைதானத்தில் டோனி, டோனி, டோனி என்ற பெயர் ஒலித்துக் கொண்டே இருந்தது.

    சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. ருதுராஜ் கெய்க்வாட் கான்வேயின் தொடக்கம் அதிரடியாக இருந்தது. இருவரும் பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாய் விளாசினார்கள்.


    இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். ஆனால் அவர்களது எதிர் பார்ப்பு எல்லாம் டோனி மீதே இருந்தது.

    ருதுராஜ் முதல் விக்கெட்டாக 'அவுட்' ஆனது முதலே டோனி எப்போது ஆட வருவார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருந்தது.

    ஒவ்வொரு விக்கெட் போன போதும் டோனி பெயரை ரசிகர்கள் உச்சரித்தனர். ஆட்டம் கடைசி ஓவருக்கு சென்றது. இனி டோனி விளையாட வருவதற்கு வாய்ப்பு மிக குறைவாகவே காணப்பட்டது. கடைசி ஓவரின் முதல் பந்தில் ஜடேஜா 'அவுட்' ஆனார். இந்த அவுட்டால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். ஏனென்றால் அடுத்து வரபோவது டோனி தான் என்பது உறுதியானது.

    டோனி பேட்டிங் செய்ய களத்துக்குள் நுழைந்ததும் ரசிகர்கள் ஒட்டுமொத்த குரலில் அவரை வரவேற்றனர். செல்போன் லைட்டை ஆன் செய்து ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.


    ரசிகர்களின் ஆனந்தத்தையும், எதிர்பார்ப்பையும் டோனி பூர்த்தி செய்தார். தான் சந்தித்த முதல் 2 பந்துகளிலும் 2 சிக்சர்களை விளாசினார்.

    முதல் பந்தில் "தேர்டு மேன்" திசையில் முதல் சிக்சரை அடித்தார். 2-வது பந்தில் 'ஸ்குயர் லெக்' பகுதியில் 2-வது சிக்சரை அடித்தார்.

    அடுத்தடுத்த சிக்சர்களால் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் கரை புரண்டனர். ஸ்டேடியம் முழுவதும் உற்சாக குரல் கேட்டது. தான் சந்தித்த 3-வது பந்திலும் டோனி சிக்சருக்கு அடிக்க முயன்று 'அவுட்' ஆனார்.

    டோனி ஆடியதோ மொத்தம் 3 பந்துகள் தான். அதில் 2 சிக்சர்களை தெறிக்க விட்டார். டிக்கெட் வாங்கி வந்த ரசிகர்கள் அவரது இந்த ஆட்டத்தால் மிகவும் சந்தோஷம் அடைந்தனர். ரசிகர்களின் அனைத்து எதிர்பார்ப்பையும் டோனி நிறைவேற்றினார்.

    Next Story
    ×