search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்? கொல்கத்தாவுடன் நாளை மோதல்
    X

    ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்? கொல்கத்தாவுடன் நாளை மோதல்

    • சி.எஸ்.கே. முதல் 2 ஆட்டத்தில் சொந்த மண்ணில் வென்ற பிறகு அடுத்த 2 போட்டிகளில் வெளியூரில் தோற்றது.
    • கடந்த 2 போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங்கும், பந்துவீச்சும் மிகவும் மோசமாக இருந்தது.

    சென்னை:

    ஐ.பி.எல். போட்டியில் 7 லீக் ஆட்டம், குவாலிபையர்-2 மற்றும் இறுதிப்போட்டி ஆகிய 9 ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    ஐ.பி.எல். போட்டியின் தொடக்க விழாவே சேப்பாக்கத்தில் தான் நடைபெற்றது. கடந்த 22-ந் தேதி நடந்த முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது. 26-ந் தேதி நடைபெற்ற 2-வது போட்டியிலும் சி.எஸ்.கே. வெற்றி பெற்றது. குஜராத்தை 63 ரன்னில் தோற்கடித்தது.

    சேப்பாக்கம் மைதானத்தில் 3-வது ஐ.பி.எல். ஆட்டம் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த கோலாகலத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சி.எஸ்.கே. முதல் 2 ஆட்டத்தில் சொந்த மண்ணில் வென்ற பிறகு அடுத்த 2 போட்டிகளில் வெளியூரில் தோற்றது. விசாகப்பட்டினத்தில் கடந்த 31-ந் தேதி நடந்த போட்டியில் டெல்லியிடம் 20 ரன் வித்தியாசத்திலும், ஐதராபாத்தில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்திடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

    2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தாவை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. இதுவரை நடந்த 3 ஆட்டத்திலும் கொல்கத்தா தோல்வியை தழுவாமல் வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியை வீழ்த்துவது சவாலானது.

    கடந்த 2 போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங்கும், பந்துவீச்சும் மிகவும் மோசமாக இருந்தது. கொல்கத்தா போன்ற பலமான அணியுடன் விளையாடும் போது அதில் இருந்து மீள்வது அவசியமாகும். சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே. சிறப்பாக விளையாடும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் இந்த ஆட்டத்தை ஆவலுடன் கோலாகலத்துக்காக காத்திருக்கிறார்கள்.

    உள்ளூர் ரசிகர்கள் ஆதரவால் சேப்பாக்கத்தில் ஹாட்ரிக் வெற்றியை பெறும் வேட்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் இருக்கிறது. பேட்டிங்கில் ஷிவம் துபே தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த போட்டியில் விளையாடாத முஸ்டாபிசுர் ரகுமான் நாளைய ஆட்டத்தில் ஆடுவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    2 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இந்த சீசனில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. சுனில் நரேன், ஆந்த்ரே ரஸ்சல், பில்சால்ட், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், புதுமுக வீரர் ரகுவன்சி, வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் பேட்டிங்கிலும், ஹர்திக் ரானா, வருண் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் பந்து வீச்சிலும் நல்ல நிலையில் உள்ளனர்.

    இரு அணிகளும் 28 ஆட்டத்தில் மோதியுள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 18-ல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10-ல வெற்றி பெற்றுள்ளன.

    Next Story
    ×