என் மலர்
கிரிக்கெட் (Cricket)
தோல்விக்கான காரணம் இதுதான்: இறுதிப் போட்டிக்கு பின் முதன்முறையாக வாய்திறந்த முகமது சமி
- இந்தியா 240 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
- ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது.
50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி 240 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, இலக்கை எட்டிய ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த தோல்வியால் இந்திய அணி வீரர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். கேப்டன் ரோகித் சர்மா, தோல்விக்குப்பின் வழக்கமான நடைமுறையின்படி பேட்டியளித்தார். மற்ற வீரர்கள் பேட்டியளிக்கவில்லை.
ஆஸ்திரேலியா தொடரில் இடம் பிடிக்காத வீரர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு சென்ற வண்ணம் உள்ளனர். முகமது சமி தனது சொந்த மாநிலமான உத்தர பிரதேசம் திரும்பியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் அம்ரோகா சென்றடைந்த அவரிடம், உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைய காரணம் என்ன? என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த முகமது சமி, "நாங்கள் போதுமான ரன்கள் எடுக்காததுதான் காரணம். நாங்கள் 300 ரன்கள் எடுத்திருந்திருந்தால், அந்த ரன்னுக்குள் ஆஸ்திரேலியாவை எளிதாக கட்டுப்படுத்தியிருப்போம்" என்றார்.
மேலும், அவருடைய சொந்த கிராமத்தில் மைதானம் கட்ட உத்தர பிரதேச மாநில அரசு முடிவு செய்துள்ளது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு "எனது கிராமத்தில் மைதானம் கட்ட நடவடிக்கை எடுத்த உ.பி. அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நாம் திறமையான ஏராளமான இளைஞர்கள் பெற்றுள்ளோம். நம்முடைய பகுதியில் சிறந்த மைதானம், அகாடமி உருவாவது, முக்கியமானது. இளைஞர்கள் விளையாட்டை பற்றி அதிக அளவில் கற்றுக்கொள்ள முடியும்" எனத் தெரிவித்தார்.
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அபாரமாக பந்து வீசிய முகமது சமி, 24 விக்கெட்டுகள் கைப்பற்றி இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்.