என் மலர்
கிரிக்கெட் (Cricket)
தொடர்ந்து 4-வது தோல்வி: ராஜஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப்
- பஞ்சாப் அணியில் சாம் கரன் 63 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- ராஜஸ்தான் தரப்பில் ஆவேஷ் கான், சாஹல் 2 விக்கெட்டும் டிரென் போல்ட் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை குவித்துள்ளது. பஞ்சாப் சார்பில் சிறப்பாக பந்துவீசிய சாம் கர்ரன், ஹர்ஷல் பட்டேல் மற்றும் ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லிஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதனையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக பேர்ஸ்டோ- பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். பிரப்சிம்ரன் சிங் 4 ரன்னில் வெளியேறினார். மிகவும் மோசமான விளையாட்டை வெளிப்படுத்திய பேர்ஸ்டோ 22 பந்தில் 14 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஷசாங் சிங் டக் அவுட் ஆனார். அடுத்து சிறிது நேரத்தில் ரிலீ ரோசோவ் 22 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் கேப்டன் சாம் கரன் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோர் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர். நிதானமாக விளையாடிய ஜித்தேஷ் 22 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம் கரன் அரை சதம் அடித்து அசத்தினார்.
இறுதியில் அசுதோஷ் சர்மா - சாம் கரன் இறுதி வரை சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதக்கு அழைத்து சென்றனர். இதனால் பஞ்சாப் அணி 18.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் ஆவேஷ் கான், சாஹல் 2 விக்கெட்டும் டிரென் போல்ட் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த தோல்வியின் மூலம் ராஜஸ்தான் அணி கடைசியாக விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது.