என் மலர்
கிரிக்கெட் (Cricket)
ஒரே போட்டியில் ஷிகர் தவான் - ரிஸ்வான் சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்
- சூர்யகுமார் யாதவ் 6 ஆட்ட நாயகன் விருதுகளை வென்று உலகின் நம்பர் 2 பேட்ஸ்மேனாக முன்னேறியுள்ளார்.
- எஞ்சிய 3 மாதங்களும் இதே போல் விளையாடினால் உலக சாதனையும் படைக்க வாய்ப்புள்ளது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் டி20 கேரளாவின் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதை தொடர்ந்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 16.4 ஓவரில் 110 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் மற்றும் கேஎல் ராகுல் அரை சதம் அடித்து அசத்தினர்.
டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் அறிமுகமானதில் இருந்து மற்ற இந்திய வீரர்களைக் காட்டிலும் அதிகபட்சமாக 6 ஆட்ட நாயகன் விருதுகளை வென்று உலகின் நம்பர் 2 பேட்ஸ்மேனாக முன்னேறியுள்ளார்.
மேலும் நேற்றைய போட்டியில் எடுத்த 50 ரன்களையும் சேர்த்து இந்த வருடம் 732 ரன்களை எடுத்துள்ள அவர், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற ஷிகர் தவானின் சாதனை உடைத்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
1. சூர்யகுமார் யாதவ் : 732* (2022)
2. ஷிகர் தவான் : 689 (2018)
3. விராட் கோலி : 641 (2016)
4. ரோஹித் சர்மா : 590 (2018)
9 மாதங்களிலேயே இந்த உச்சத்தை எட்டி உலக அளவில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ள சூர்யகுமார் யாதவ் எஞ்சிய 3 மாதங்களும் இதே போல் விளையாடினால் உலக சாதனையும் படைக்க வாய்ப்புள்ளது.
அந்தப் பட்டியல்:
1. முகமத் ரிஸ்வான் : 1326 (2021)
2. பாபர் அசாம் : 939 (2021)
3. பால் ஸ்டிர்லிங் : 748 (2019)
4. சூர்யகுமார் யாதவ் : 732* (2022)
இதனைத்தொடர்ந்து சிக்ஸர் பறக்க விடும் திறமை பெற்றுள்ள சூர்யகுமார் யாதவ், நேற்றைய போட்டியில் அடித்த 3 சிக்ஸர்களையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக சிக்சர்கள் அடித்த பேட்ஸ்மன் என்ற பாகிஸ்தானின் முஹம்மது ரிஸ்வான் சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:
1. சூர்யகுமார் யாதவ் : 45* (2022)
2. முகமத் ரிஸ்வான் : 42 (2021)
3. மார்ட்டின் கப்தில் : 41 (2021)