என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஜடேஜா - ரிஷப்பண்ட்
சச்சின்-அசாருதீன் சாதனையை சமன் செய்த ரிஷப்பண்ட்-ஜடேஜா ஜோடி

- ரிஷப் பண்ட்-ஜடேஜா ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 222 ரன் குவித்து இங்கிலாந்து மண்ணில் சாதனை படைத்தது.
- 298 ரன்கள் எடுத்து அசாருதீன்-வெங்சர்க்கார் ஜோடி முதல் இடத்தில் உள்ளது.
எட்ஜ்பஸ்டன்:
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் ஆடிய இந்திய அணி 98 ரன் எடுப்பதற்குள் 5 விக்கெட்டை இழந்தது.
சுப்மன் கில் (17 ரன்), புஜாரா (13), ஸ்ரேயாஸ் அய்யர் (15) ஆகியோர் ஆண்டர்சன் பந்திலும் , விஹாரி (20), விராட் கோலி (11) ஆகியோர் மேத்யூ பாட்ஸ் பந்திலும் வெளியேறினார்கள். 6-வது விக்கெட்டான ரிஷப்பண்ட்-ரவீந்திர ஜடேஜா ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது.
குறிப்பாக ரிஷப் பண்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 89 பந்தில் சதம் அடித்து 5-வது செஞ்சூரியை பதிவு செய்தார். ரிஷப் பண்ட் 111 பந்தில் 146 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் 19 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும். அவரும், ஜடேஜாவும் 6-வது விக்கெட்டுக்கு 222 ரன் குவித்தது மிகவும் முக்கியமானதாகும்.
அடுத்து வந்த ஷர்துல் தாகூர் ஒரு ரன்னில் பென்ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் இருந்த ஜடேஜா தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 73 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 338 ரன் குவித்து வலுவான நிலையில் இருந்தது.
ஜடேஜா 83 ரன்னிலும் (10 பவுண்டரி) முகமது ஷமி ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.
ரிஷப் பண்ட்-ஜடேஜா ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 222 ரன் குவித்து இங்கிலாந்து மண்ணில் சாதனை படைத்தது. 1997-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுன் மைதானத்தில் அசாருதீன்-தெண்டுல்கர் ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 222 ரன் எடுத்தனர். இதனை ரிஷப் பண்ட்-ஜடேஜா ஜோடி சமன் செய்தது.
298 ரன்கள் எடுத்து அசாருதீன்-வெங்சர்க்கார் ஜோடி முதல் இடத்தில் உள்ளது. 272 ரன்கள் எடுத்து அசாருதீன் - கபில் தேவ் ஜோடி 2-வது இடத்திலும் டோனி-டிராவிட் ஜோடி 224 ரன்கள் எடுத்து 3-வது இடத்திலும் உள்ளது.