என் மலர்
கிரிக்கெட் (Cricket)
டி20 உலகக்கோப்பையில் 23-ந் தேதி மோதல்: பாகிஸ்தான் அணியை மதிக்கிறோம்- தமிழக வீரர் அஸ்வின்
- பாகிஸ்தானுடன் நாங்கள் அதிகமாக கிரிக்கெட் விளையாடவில்லை.
- இந்தப் போட்டி இரு நாட்டு மக்களுக்கும் முக்கியமானதாகும்.
பெர்த்:
20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 16-ந் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. 16 நாடுகள் பங்கேற்கும் இந்தப் போட்டி நவம்பர் 13 வரை நடைபெறுகிறது.
ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி 'சூப்பர் 12' சுற்றில் நேரடியாக விளையாடுகிறது. தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் அக்டோபர் 23-ந் தேதி மோதுகிறது.
தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் மற்றும் முதல் சுற்றில் இருந்து நுழையும் 2 அணிகள் ஆகியவற்றுடன் இந்தியா விளையாடுகிறது.
20 ஓவர் உலகக்கோப்பைக்கு முன்பு இந்திய அணி ஆஸ்திரேலியா (17-ந் தேதி), நியூசிலாந்துடன் (19- ந் தேதி) பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.
இந்தநிலையில் ஆஸ்திரேலியா லெவனுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு தமிழக வீரர் ஆர்.அஸ்வின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பாகிஸ்தானுடனான போட்டி குறித்து கருத்து தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
பாகிஸ்தானுடன் நாங்கள் அதிகமாக கிரிக்கெட் விளையாடவில்லை. இந்தப் போட்டி இரு நாட்டு மக்களுக்கும் முக்கியமானதாகும். ஆட்டத்தின் வெற்றி, தோல்வி என்பது ஒரு பகுதியாகும்.
20 ஓவர் போட்டியை பொறுத்தவரை ஆட்டத்தின் முடிவு மிகவும் நெருக்கமானதாக இருக்கும்.
நாங்கள் பாகிஸ்தான் அணிக்கு மதிப்பு அளிக்கிறோம். அது போலத்தான் அவர்களும் மரியாதை கொடுக்கிறார்கள்.
ரமீஸ்ராஜா இது தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் எனக்கு தெரியாது.
இவ்வாறு அஸ்வின் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரமீஸ்ராஜா பாகிஸ்தானை இந்தியா மதிக்க தொடங்கி விட்டது என்ற கருத்துக்கு அஸ்வின் இந்த பதிலை அளித்துள்ளார்.