என் மலர்
கிரிக்கெட் (Cricket)

தென்ஆப்பிரிக்காவின் வெற்றி நீடிக்குமா?: நியூசிலாந்துடன் நாளை பலப்பரீட்சை

- நியூசிலாந்தை வீழ்த்தி 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் தென்ஆப்பிரிக்கா உள்ளது.
- நியூசிலாந்து அணி 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 32-வது லீக் ஆட்டம் புனேயில் நாளை (புதன்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது. இதில் பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்கா- டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
தென்ஆப்பிரிக்கா அணி 5 வெற்றி, 1 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.
அந்த அணி இலங்கை (102 ரன்), ஆஸ்திரேலியா (134 ரன்), இங்கிலாந்து (229 ரன்), வங்காளதேசம் (149 ரன்), பாகிஸ்தான் (1விக்கெட்) ஆகியவற்றை வீழ்த்தி இருந்தது. நெதர்லாந்திடம் 38 ரன்னில் அதிர்ச்சிகரமாக தோற்றது.
நியூசிலாந்தை வீழ்த்தி 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் தென்ஆப்பிரிக்கா உள்ளது. அந்த அணி தொடர்ச்சியாக 3 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. நாளையும் இந்த வெற்றி நீடிக்குமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. தென் ஆப்பிரிக்கா சேஸ் செய்வதில் திணறுகிறது. பாகிஸ்தானுக்கும் எதிராக இதை காண முடிந்தது. முதலில் ஆடினால் மட்டுமே அந்த அணி மிகப்பெரிய ஸ்கோரை குவிக்கிறது.
நியூசிலாந்து அணி 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.
அந்த அணி தொடர்ச்சியாக 4 ஆட்டத்தில் (இங்கிலாந்து, நெதர்லாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான்) வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து இந்தியா (4 விக்கெட்), ஆஸ்திரேலியா (5 ரன்) அணிகளிடம் தோற்றது. ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து 5-வது வெற்றியை பெறும் வேட்கையில் நியூசிலாந்து இருக்கிறது.
இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை. இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.
இரு அணிகளும் 71 முறை மோதியுள்ளன. இதில் தென் ஆப்பிரிக்கா 41-ல், நியூசிலாந்து 25-ல் வெற்றி பெற்றுள்ளன. 5 ஆட்டம் முடிவு இல்லை.