search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வேளாங்கண்ணி பேராலயம்
    X
    வேளாங்கண்ணி பேராலயம்

    வேளாங்கண்ணி பேராலய திருவிழாவுக்கு பக்தர்கள் வருகைக்கு தடை

    கொரோனா வைரஸ் வேகமாக பரவும் இந்த சூழலில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், வேளாங்கண்ணி பேராலய திருவிழாவில் பொதுமக்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. மாதாவின் பிறந்த நாள் செப்டம்பர் 8-ந் தேதி ஆகும். இதையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் மாதாவின் பிறந்த நாள் 10 நாட்கள் திருவிழாவாக வெகு விமரிசையாய் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த நாட்களில் வேளாங்கண்ணி முழுவதும் விழாக்கோலம் பூண்டிருக்கும். இதில் கலந்து கொள்வதற்காக வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் நாகை மாவட்டத்துக்கு வருகை தருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

    கொரோனா வைரஸ் வேகமாக பரவும் இந்த சூழலில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், விழாவில் பொதுமக்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. இதுகுறித்து நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆண்டு பெருவிழா வருகிற 29-ந் தேதி(சனிக்கிழமை) அன்று தொடங்க உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த தருவாயில் மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு நடைமுறையில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் பக்தர்கள் திருவிழாவுக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் வேளாங்கண்ணி பேராலயத்திற்கு வருகை புரிய தடை செய்யப்படுகிறது.

    மேலும் வேளாங்கண்ணி பேராலயத்தில் புனித ஆரோக்கிய அன்னையின் ஆண்டு பெருவிழாவினை பொதுமக்கள் கண்டு களித்திடும் வகையில் மாற்று ஏற்பாடாக ஆலய ஆராதனையை தொலைக்காட்சி மற்றும் இணையதளம் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்திட வேளாங்கண்ணி பேரலாயத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளதாலும், கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுத்திடவும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×