search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    காய்ச்சல் போக்கும் காஞ்சி ஜூரஹரேஸ்வரர்
    X

    காய்ச்சல் போக்கும் காஞ்சி ஜூரஹரேஸ்வரர்

    • ஜூரஹரேஸ்வரர் கோவில் விமானத்தின் நான்கு புறமும் ஜன்னல்கள் அமைந்திருக்கின்றன.
    • விமானத்தைப் போலவே, மூலஸ்தானத்திலும் கருங்கல் ஜன்னல் உள்ளது.

    காஞ்சி சங்கர மடத்தின் அருகில் இருக்கும் மிக பழமையான ஆலயம், ஜூரஹரேஸ்வரர் கோவில். தற்போது தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம், திருவரங்கத்தைப் போல 'பிரணவாகார விமானம்' கொண்டு அமைக்கப்படுள்ளது. ஜூரஹரேஸ்வரர் கோவில் விமானத்தின் நான்கு புறமும் ஜன்னல்கள் அமைந்திருக்கின்றன. தாரகன் என்ற அசுரன், சிவனுடைய சக்தியால் மட்டுமே தனக்கு அழிவு வர வேண்டும் என்ற வரம் பெற்றிருந்தான்.

    இதன் காரணமாக தேவர்களைத் துன்புறுத்தினான். வருத்தமடைந்த தேவர்கள், சிவனிடம் முறையிட்டனர். அவர்களிடம் `கவலை வேண்டாம்' என சிவன் சொன்னாலும், அசுரனை அழிப்பதில் தாமதம் ஏற்பட்டது. ஏனெனில் சிவன் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். எனவே அவரை மன்மதன் மூலம் எழுப்பும் முயற்சியை தேவர்கள் மேற்கொண்டனர். இந்த முயற்சியில் மன்மதன் இறந்தானே தவிர பலன் கிடைக்கவில்லை.

    எனவே தேவர்கள், சிவனைப் பல நாமங்களைச் சொல்லி துதித்தனர். இதையடுத்து சிவனின் கருணைப் பார்வை கிடைத்தது. அவர் தன் நெற்றிக்கண்ணில் இருந்து சுடரை வெளிப்படுத்தி அதை அக்னியிடம் கொடுத்தார். அக்னியின் வயிற்றை அந்த நெருப்பு தாக்கியது. அப்போது, எல்லா தேவர்களுமே அதன் உக்கிரத்தை உணர்ந்தனர். கடும் காய்ச்சல் போல உடல் நெருப்பாய் சுட்டது. தலைவலி போய் திருகுவலி வந்த கதையாக தேவர்கள் துடித்தனர். ஆனாலும் மீண்டும் ஈசனையே அவர்கள் சரணடைந்தனர்.

    அவர்களிடம் சிவபெருமான், "பூலோகத்தில் காஞ்சி என்னும் திருத்தலத்தில் சுரன் என்ற அரக்கனை ஒழித்துவிட்டு, லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளேன். அங்கு ஜூரஹரேஸ்வரர் என்ற திருநாமம் கொண்டு அருளும் என்னை வழிபட்டால், உங்களுடைய வெப்பம் தணியும்" என்று அருளினார். இதையடுத்து தேவர்கள் அனைவரும் இங்கு வந்து வழிபட்டு, உடல் குளிர்ந்தனர்.

    உடலின் வெப்பத்தை (காய்ச்சல்) குறைத்து குணம் பெறச் செய்பவர் என்பதால், இத்தல இறைவனுக்கு 'ஜூரஹரேஸ்வரர்' என்று பெயர். காய்ச்சல் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடும் போது, விமானத்தின் மேல் உள்ள ஜன்னல்களின் வழியே வரும் காற்று, வெளிச்சம் ஆகியவை நோயைக் குணமாக்குவதாக சொல்லப்படுகிறது. விமானத்தைப் போலவே, மூலஸ்தானத்திலும் கருங்கல் ஜன்னல் உள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமான், வெப்பம் மிகுந்தவராகக் கருதப்படுவதால், அவரைக் குளிச்சிப்படுத்த இவ்வாறு ஜன்னல்கள் அமைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

    Next Story
    ×