என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
கோவில்கள்
![கல்யாண வரம் அருளும் காளிப்பட்டி முருகன் திருக்கோவில் கல்யாண வரம் அருளும் காளிப்பட்டி முருகன் திருக்கோவில்](https://media.maalaimalar.com/h-upload/2022/07/08/1725695-kalipatti-murugan-temple.jpg)
கல்யாண வரம் அருளும் காளிப்பட்டி முருகன் திருக்கோவில்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- காளிப்பட்டி கந்தசாமியை வணங்கினால் கவலையெல்லாம் பறந்தோடி விடும் என்பது ஐதீகம்.
- இந்த கோவிலில் பாலாபிஷேகம் செய்து வழிபடுவது விசேஷம்.
திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் புகழ் பெற்றது. இந்த ஆலயத்தில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் சேலம் - திருச்செங்கோடு சாலையில் காளிப்பட்டி முருகன் கோவில் உள்ளது.
முன்னொரு காலத்தில், இங்கு முருக பக்தர் ஒருவர் வசித்தார். ஆண்டு தோறும் தைப்பூசத் திருநாளை யொட்டி, கடும் விரதம் இருந்து, பாத யாத்திரையாக பழனிக்கு காவடி எடுத்துச் சென்று வழிபடுவது இவரது வழக்கம். ஒரு நாள் அவரின் கனவில் தோன்றிய முருகக் கடவுள், "இனி, என்னைத் தேடி பழனி வர வேண்டாம். உனது இடத்திலேயே குடியிருக்க விரும்புகிறேன். இங்கேயே கோவில் எழுப்பு!"என்று அருளி மறைந்தாராம், அதன்படி கட்டப்பட்டதே, காளிப்பட்டி கந்தசாமி திருக்கோயில்.
இந்தப் பகுதியில் எவரேனும் பாம்பு கடித்து மயங்கி விட்டால், உடனடியாக அவரை இந்தக் கோயில் மண்டபத்துக்கு கொண்டு வந்து கிடத்துகின்றனர். பூசாரி, முருகக் கடவுளின் அபிஷேகத் தீர்த்தத்தையும் விபூதியையும் தர, சிறிது நேரத்தில் விஷம் இறங்கி விடுமாம்.
இந்த கோவிலில் பாலாபிஷேகம் செய்து வழிபடுவது விசேஷம். வைகாசி விசாகம் போன்ற நாட்களில், பாலாபிஷேகம் செய்து கந்தசாமியைப் பிரார்த்திக்க கல்யாண வரமும் பிள்ளை பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
குடும்பத்தில் பிரச்சினை, வியாபாரத்தில் நஷ்டம், வீண் பயம் முதலானவற்றால் அவதிப்படுபவர்கள், இங்கு வந்து கந்தசாமியை மனமுருகிப் பிரார்த்தித்து, இடும்பன் சந்நிதியில் தரப்படும் "மை" பிரசாதத்தைப் பெற்று மூன்று நாட்கள் தினமும் நெற்றியில் வைத்துக் கொண்டால், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும், குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும், தேவையற்ற பயம் விலகும்.
வைகாசி விசாக நாளில், உற்சவர் வீதியுலா நடைபெறும் போது காளிப்பட்டி கந்தசாமியை வணங்கினால் கவலையெல்லாம் பறந்தோடி விடும் என்பது ஐதீகம்.