search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    பக்தர்களின் பணப்பிரச்சினைகளை தீர்க்கும் மயிலம் முருகன் கோவில்
    X

    பக்தர்களின் பணப்பிரச்சினைகளை தீர்க்கும் மயிலம் முருகன் கோவில்

    • இந்த ஆலயத்தில் வள்ளி- தெய்வானையுடன் இணைந்து நின்ற கோலத்தில் காட்சி தருகிறார், முருகப்பெருமான்.
    • இவருக்கு பகலில் வெள்ளி காப்பும், மாலை பூஜைக்குப் பிறகு தங்கக் காப்பும் அணிவிக்கப்படுகிறது.

    விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம் பகுதியில் மலைக் குன்றின் மீது முருகப்பெருமான் கோவில் இருக்கிறது. இது சூரபத்மன் வழிபாடு செய்த திருத்தலமாகும். இங்கு மயில் வடிவ மலை உருவத்தில் சூரபத்மன் இருப்பதாக தல புராணம் சொல்கிறது.

    தேவர்களை சிறைப்பிடித்து துன்புறுத்தியதன் காரணமாக, முருகப்பெருமானுக்கும் சூரபத்மனுக்கும் போர் மூண்டது. இந்தப் போரில் முருகப்பெருமானால், சூரபத்மன் ஆட்கொள்ளப்பட்டான். அதன்பிறகு முருகப்பெருமான் மீது கொண்ட பற்று காரணமாக, இந்த தலத்திற்கு வந்து தவம் இருந்தான். அவனுக்கு காட்சியளித்தார், முருகப்பெருமான். அப்போது சூரபத்மன், "என்னை உங்கள் வாகனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று கேட்டான். அதன்படியே அவனை, தன்னுடைய மயில் வாகனமாக முருகன் ஏற்றுக்கொண்டார்.

    இதையடுத்து சூரபத்மன் மயிலாக மலை வடிவில் மாறினான். இந்த மலை பார்ப்பதற்கு மயில் ஒன்று தோகை விரித்தது போலவே காட்சி தருவது ஆச்சரியமளிக்கும் வகையில் உள்ளது. மயில் போல் காட்சி தருவதால் இம்மலைக்கு 'மயூராசலம்' என்று பெயர் வந்தது. அதுவே மருவி தற்போது, 'மயிலம்' என்று அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

    கோவில் அமைப்பு

    இந்த ஆலயத்தில் வள்ளி- தெய்வானையுடன் இணைந்து நின்ற கோலத்தில் காட்சி தருகிறார், முருகப்பெருமான். இவர் ஒரு கையில் வேல், மற்றொரு கையில் சேவல் கொடி தாங்கி காணப்படுகிறார். பெரும்பாலான கோவில்களிலும் முருகனின் வாகனமான மயில், தெற்கு நோக்கியோ, நேராகவோ இருக்கும். இங்கு மட்டும் வடக்கு திசையை நோக்கியபடி இருப்பது கோவிலின் சிறப்பு. தவத்துக்கு உரிய திசை, வடக்கு. சூரபத்மன் இங்கு வடக்கு நோக்கித் தவமிருந்து முருகனின் வாகனமாக மாறியதால், அதே திசையை நோக்கியபடி அமரும் பெருமை இங்குள்ள மயில் வாகனத்துக்கு கிடைத்திருக்கிறது.

    மயிலம் மலையில், நொச்சி மரங்கள் ஏராளமாக உள்ளன. தினமும் காலை பூஜையின்போது நொச்சி இலைகளை மாலையாகத் தொடுத்து மூலவருக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் அணிவிக்கிறார்கள். அதன் பிறகே மற்ற பூமாலைகளை அணிவிக்கிறார்கள். மூலவர் வீற்றிருக்கும் கருவறை மண்டபத்துக்கு வெளியில் பிரமாண்டமான வேலும், மயிலும் இருக்கின்றன. செவ்வாய்க்கிழமை தோறும் காலசந்தி பூஜையின் போது வேலாயுதத்துக்கு அர்ச்சனை செய்கிறார்கள். இப்படி அர்ச்சனை செய்யும் பக்தர்களுக்கு பணப்பிரச்சினைகள் அகலும் என்பது நம்பிக்கை.

    இதேபோல உற்சவமூர்த்தி முருகப்பெருமானின் அருகில் அவரின் படைத் தளபதியான வீரபாகுவும் உற்சவராக இருக்கிறார். செவ்வாய்க்கிழமை காலையில் இவருக்குப் பாலபிஷேகம் செய்து, அர்ச்சித்தால் விரைவில் திருமணம் நடக்கும். எனவே ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையிலும் ஏராளமான பெண்கள் இங்கு வருகிறார்கள்.

    எப்போதும் அமைதி நிலவும் இந்தத் தலத்துக்கு வந்து வழிபடுகிறவர்களுக்கு நிச்சயம் மன அமைதி கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.

    இந்தக் கோவில் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும். ஞாயிறு மற்றும் விழாக் காலங்களில் கோவில் முழுநேரம் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் இருக்கிறது, மயிலம். புதுவை, விழுப்புரம், திண்டிவனம் ஆகிய நகரங்களில் இருந்து அடிக்கடி பஸ்கள் உண்டு. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கூட்டேரிப்பட்டு என்ற நிறுத்தத்தில் இறங்கினால், அங்கிருந்து 3 கி.மீ. தூரத்தில் இருக்கிறது மயிலம்.

    மூன்று உற்சவர்கள்

    இந்த ஆலயத்தில் மூன்று உற்சவர் சிலைகள் உள்ளன. இதில் பிரதான உற்சவராக, வள்ளி- தெய்வானை உடனாய பாலசுப்பிரமணியர் இருக்கிறார். இவருக்கு பகலில் வெள்ளி காப்பும், மாலை பூஜைக்குப் பிறகு தங்கக் காப்பும் அணிவிக்கப்படுகிறது. இந்த உற்சவர் மாதாந்திர கார்த்திகை நட்சத்திரத்திலும், பங்குனி உத்திரப் பெருவிழாவிலும் வீதி உலா வருவார். மலையைச் சுற்றி உள்ள மூன்றாம் பிரகாரத்தில் வீதி உலா நடக்கிறது.

    வள்ளி- தெய்வானை உடனாய முத்துக்குமார சுவாமி, இரண்டாவது உற்சவராக உள்ளார். பரணி நட்சத்திரத்தின்போது வீதி உலா வருகிறார். இவர் சுற்றுப்பிரகாரத்தில் இருந்தபடி அருள்கிறார். மாசி மக தீர்த்தவாரியின் போது, இந்த உற்சவரை புதுவை கடற்கரைக்குத் தோளில் சுமந்து செல்கிறார்கள். 5 நாட்கள் அங்கு இருந்து விட்டு, 6-வது நாள் ஆலயம் திரும்புவார். ஆறு முகங்கள் கொண்ட சண்முகப்பெருமான், மூன்றாவது உற்சவராக அருள்கிறார். கந்த சஷ்டி உற்சவத்தின்போது ஆறு நாட்கள், இவர்தான் வீதி உலா வருவார்.

    Next Story
    ×