search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    வேண்டுதலை நிறைவேற்றும் நெல்லுக்கடை மாரியம்மன் கோவில்
    X

    வேண்டுதலை நிறைவேற்றும் நெல்லுக்கடை மாரியம்மன் கோவில்

    • பக்தர்கள் கேட்கும் வரம் அருளுபவளாக மாரியம்மன் கருவறையில் வீற்றிருக்கிறாள்.
    • வருடத்திற்கு ஒருமுறை இந்த அம்மனுக்கு தைலக்காப்பு சாத்தப்படுகிறது.

    நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்கார வேலர் திருக்கோவில், நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் ஆகியவை அமைந்துள்ளது. மும்மதத்தினரும் வழிபட்டு செல்லக்கூடிய ஆன்மிக சுற்றுலா தளமாக இந்த மாவட்டம் உள்ளது.

    இதனால் நாள்தோறும் மும்மதத்தையும் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து நாகை மாவட்டத்திற்கு வந்து செல்கின்றனர்.

    நாகை ரெயில் நிலையம் அருகில் அரை கிலோ மீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ளது பல்வேறு சிறப்புகள் பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் கோவில். கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோவில், ராஜகோபுரத்தையும், உள் திருச்சுற்றையும் கொண்டுள்ளது.

    இக்கோவிலில் உள்ள மூலவர் மாரியம்மன் நான்கு கரங்களை கொண்டு, கிழக்கு நோக்கி கருணை பொங்க காட்சி அளிக்கிறார். பக்தர்கள் கேட்கும் வரம் அருளுபவளாக மாரியம்மன் கருவறையில் வீற்றிருக்கிறாள்.

    வருடத்திற்கு ஒருமுறை இந்த அம்மனுக்கு தைலக்காப்பு சாத்தப்படுகிறது. பெரிய அம்மனுக்கு தைலக்காப்பும், உற்சவ அம்மனுக்கு தினந்தோறும் அபிஷேகங்கள், ஆராதனைகளும் செய்யப்பட்டு வருகிறது.

    அருகில் தனி சன்னதி கொண்டிருக்கும் எல்லை அம்மனும், மாரியம்மனை போலவே கைகளில் ஆயுதம் ஏந்தி, ஐந்து தலை நாகம் படம் எடுத்தபடி குடை பிடிக்க கம்பீரத்துடன் காட்சியளிக்கிறார். நெல்லுக்கடை மாரியம்மனிடம் நேர்ந்து கொள்ளும் பக்தர்களுக்கு விரைவில் நினைத்தது நடக்கும். கேட்டது கிடைக்கும். நித்தமும் வாழ்வில் துணை வருவாள் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

    இக்கோவிலில் நடராஜர், காத்தவராயன், பெரியாச்சி அம்மன், அய்யனார், செல்லப் பிள்ளையார், வள்ளி-தெய்வானையுடன் சுப்பிரமணியர், கப்பல் பிள்ளையார், துர்க்கை என தனிச்சன்னதிகள் உள்ளன.

    இக்கோவில் இங்கு அமைந்ததன் தல வரலாறு குறித்து பார்ப்போம்!

    நாகையில் நெல் வாணிபம் செய்யும் பெரியநாகத்தம்மாளை அந்த ஊரில் எல்லோருக்கும் தெரியும். தொழிலில் நேர்மையும், கருணையும் கொண்டு பழகும் அவரை அனைவருக்கும் பிடிக்கும். இந்தநிலையில் ஒருநாள் மஞ்சள் நிறச்சேலை அணிந்த பெண்ணொருத்தி எனக்கு நெல் வேண்டும், கொஞ்சம் அளந்து கொடுங்கள் என்று பெரியநாகத்தம்மாளிடம் கேட்டுள்ளார். தன்னைப்போலவே அந்த பெண்ணின் கனிவும், சிரிப்பும் பெரியநாகத்தம்மாளை வெகுவாக கவர்ந்தது.

    கடைக்குள் சென்று மூட்டையில் இருந்த நெல்லை அளந்து கூடையில் போட்டு எடுத்து வெளியே வந்து பார்த்தபோது அந்த பெண்ணை காணவில்லை. இவ்வளவு நேரம் இங்கே நின்றிருந்த அந்த பெண்ணை காணாததைக் கண்டு பெரிய நாகத்தம்மாள் அதிர்ச்சியடைந்தார். மீண்டும் அந்த பெண்ணை பார்க்க ஆசைப்பட்டார். அது நடக்காமல் போய்விட்டதே என்று பெரிய நாகத்தம்மாள் வருந்தினாள்.

    அன்று இரவு பெரிய நாயகத்தம்மாளின் கனவில் தோன்றிய அந்த பெண்மணியோ நான் மகமாயி, உன் வீட்டுக்கு அருகில் உள்ள வேம்பின் நிழலில் புற்றுக் கொண்டிருக்கிறேன். எனக்கு கோவில் கட்டினால் உங்கள் ஊரை காப்பது என் கடமை என்று சொல்லிவிட்டு அந்தப் பெண் மறைந்தாள். உடனே தூக்கத்தி்ல் இருந்து விழித்த பெரியநாகத்தம்மாள், கனவில் நிகழ்ந்தபடியே அருகில் உள்ள வேப்ப மரத்தடியில் இருந்த புற்றுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு வழிபட்டு வந்தாள். தொடர்ந்து ஊர் மக்கள் அனைவரும் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு சென்றனர். காலப்போக்கில் இந்த கோவிலுக்கு நெல்லுக்கடை மாரியம்மன் என்னும் திருநாமம் சூட்டி வழிபட்டு வந்தனர். தொடர்ந்து அதே இடத்தில் சிறிய கோவிலாக அமைக்கப்பட்டது. நெல்லுக்கடை மாரியம்மனிடம் வேண்டினால், வேண்டியது நிறைவேறும் என்பது வரலாறு.

    வழிபாட்டு நேரம்

    நாகை ரெயில் நிலையத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்துக்குள் இக்கோவில் அமைந்துள்ளது. பழைய பஸ் நிறுத்தத்தின் மிக அருகில் கோவில் உள்ளது. தினந்தோறும் காலை 7 மணியில் இருந்து நண்பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடை திறந்திருக்கும்.

    கோவிலில் நடைபெறும் திருவிழாக்கள்

    விநாயகர் சதுர்த்தி, கந்த சஷ்டி, ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி ஆகிய விழாக்கள் இந்த கோவிலில் வெகு விமரிசையாக நடைபெறும். குறிப்பாக சித்திரை மாதம் நடைபெறும் திருத்தேர் செடில் உற்சவம். விழா நாட்களில் மாவிளக்கு ஏற்றுதல், வேப்பிலைக்காவடி, சிலைகள் வாங்கி வைத்தல், இளநீர்க்காவடி எடுத்தல், பாடைக்காவடி, பால் காவடி, செடில் சுற்றுதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்துவர். தொடர்ந்து வார வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். உள்ளூர், வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் அம்மனின் அருளை அறிந்து ஆலயத்துக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.

    செடில் உற்சவத்தின் பலன்கள்

    நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தேரோட்டத்துடன் கூடிய செடில் உற்சவம் வெகு விமரிசையாக நடக்கும். அப்போது காத்தவராய சுவாமி கழுகு மரம் ஏறியதை நினைவு கூறும் விதமாக, கோவில் எதிரே செடில் மரம் நட்டு, பூசாரிக்கு காத்தவராயன் வேடமிட்டு உடுக்கை, பம்பை, மத்தளம், சிலம்பு ஒலிக்க செடில் ஏறிச்சுற்றும் உற்சவம் தொன்றுதொட்டு நடந்து வருகிறது. மகப்பேறு வேண்டி அம்மன் அருள் பெற்றோர், நேர்த்திக்கடனாக தங்கள் குழந்தைகளை செடில் உற்சவத்தில் பங்கேற்க செய்கிறார்கள்.

    ஏற்றம்போல் காட்சி தரும் செடிலில் குழந்தைகளை தாங்கிய படிப்பூசாரியால் சக்கரம்போல் சுழற்றப்படுவதுதான் நேர்த்திக்கடன் ஆகும். மெய்சிலிர்க்க வைக்கும் இந்த காட்சி மக்கள் அம்மன்பால் கொண்ட ஆழ்ந்த நம்பிக்கையின் பிரதிபலிப்பே ஆகும்.

    செடில் ஏறிய பூசாரியிடம் குழந்தைகளைக் கொடுத்து சுற்றச்செய்தால், குழந்தைகளை எந்த நோயும் அண்டாது என்ற திடமான நம்பிக்கை மக்களிடம் நிலவுகிறது. நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் நடக்கும் இந்த செடில் உற்சவத்தில் ஆண்டுதோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை கொண்டு செடில் சுற்றப்படும். அப்போது பல்வேறு பகுதிகளில் இருந்து சாதி, மத பேதமின்றி பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குழந்தைகளை செடில் ஏற்றி வைத்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர். இப்படி பங்கேற்ற குழந்தைகளின் எண்ணிக்கையோ லட்சக்கணக்கில் உள்ளதாம்.

    Next Story
    ×