search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆடி குண்டம் திருவிழா: வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதிப்பு
    X

    ஆடி குண்டம் திருவிழா: வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதிப்பு

    வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடி குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதிப்பு
    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவிலில் ஆண்டுத் தோறும் ஆடிக்குண்டம் விழா விமரிசையாக நடை பெறுவது வழக்கம்.

    இந்தாண்டுக்கான 25-வது ஆடிக்குண்டம் திருவிழா கடந்த 19-ந்தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை, தீபாராதனை, லட்சார்ச்சனை, கிராம சாந்தி, முனியப்பன் பகாசூரன் வழிபாடு, கொடியேற்றம், பொங்கல் வைத்து குண்டம் திறத்தல் நிகழ்ச்சி நடந்தது.

    குண்டம் விழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் மின்விளக்குகளால் அலங் கரிக்கப்பட்டு திருவிழாக் கோலம் பூண்டி ருந்தது.

    குண்டம் விழாவில் கலந்து கொள்வதற்காக கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் மாலை முதலே சாரை, சாரையாக வந்த வண்ணம் இருந்தனர்.

    பவானி ஆற்றில் நீராடி கையில் வேப்பிலை எடுத்து ஈர உடையுடன் குண்டம் இறங்குவதற்காக நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.

    ஆடிக்குண்டம் விழாவுக்கு சிகரம் வைத்தாற் போல் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று (26-ந் தேதி) காலை நடந்தது.

    நிகழ்ச்சியையொட்டி கோவை பொதுப் பணித் துறை ஸ்ரீஅம்மன் அறக் கட்டளை சார்பில் அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை 3 மணிக்கு பவானி ஆற்றில் இருந்து அம்மன் ஊர்வலம் புறப்பட்டது. ஸ்ரீஅம்மன் அறக்கட்டளை தலைவர் பி.அங்கண்ணன் ,கல்யான சுந்தரம் ஆகியோர் ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.

    விழாவில் வன பத்ரகாளியம்மனுக்கு ஊதா கலர் பட்டுப்புடவை உடுத்தி நாதஸ்வர மேளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றது. பின்னர் காலை 5.30 மணிக்கு குண்டம் இறங்கும் இடத்தை அடைந்தது. தொடர்ந்து காலை 5.45 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி தொடங்கியது.

    கோவில் தலைமை பூசாரி (பொறுப்பு) பரமேஸ்வரன் கற்பூர தட்டு எடுத்து குண்டத்தை வலம் வந்து பூஜை செய்தார். மல்லிகை மலர்ச்செண்டு, எலுமிச்சை கனியை குண்டத்தில் வீசி, கையில் வேல் எடுத்து பயபக்தியுடன் குண்டத்தில் இறங்கி நடந்து வந்தார். அவரை தொடர்ந்து உதவி பூசாரிகள் கோல கூடையுடன் மணிகண்டன், சக்தி கரகத்துடன் செல்வ ராஜ், சிவன் கரகத்துடன் சிவமணி, வெள்ளியங்கிரி ஆனந்தன் ஆகியோர் குண்டத்தில் இறங்கினர்.

    பின்னர் ஆயிரக் கணக்கான ஆண்- பெண் பக்தர்கள் குண்டம் இறங்கினர். மேலும் சில பக்தர்கள் கைக்குழந்தையுடன் குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர்.

    காலை 5.45 மணிக்கு தொடங்கிய குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி காலை 11.30 மணிக்கு முடிவ டைந்தது. குண்டத்தில் சுமார் 15 ஆயிரம் பக்தர்கள் தீ மிதித்தனர். சுமார் 70 ஆயிரம் பக்தர்கள் அம்மன் தரிசனம் செய்தனர்,

    நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுச்சாமி, மேட்டுப் பாளையம் நகரசபை தலைவர் சதீஷ்குமார், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஆனந்த், கருணாநிதி, மண்டல தணிக்கை அலுவலர் பழனிசாமி, ஆர்.டி.ஓ. உதவி யாளர் கிருஷ்ணமூர்த்தி, மருதமலை முருகன் கோவில் துணை ஆணையர் பழனிக்குமார், டாக்டர் எம்.எஸ். மதிவாணன், எம்.எஸ்.குமணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர் பாக்கெட்டுகள், அன்னதானம் வழங்கப்பட்டது.மேலும் இலவச மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் நாகராஜ் தலை மையில் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பவானி ஆற்றில் ரப்பர் படகுடன் தயார் நிலையில் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

    கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரம்யா பாரதி உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அதிவீர பாண்டியன் தலை மையில் பெரிய நாயக்கன் பாளையம் டி.எஸ்.பி. ரவிசங்கர் மேற்பார் வையில் போலீசார், ஊர்க்காவல் படையினர் உள்பட 350-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    விழா ஏற்பாடுகளை கோவை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் இளம்பரிதி மேற்பார்வையில் பரம்பரை அறங்காவலர் வசந்தா, உதவி ஆணையரும் செயல் அலுவலருமான ராமு, மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×