search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தங்க முலாம் பூசப்பட்ட கலசத்தை மீண்டும் பொருத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த காட்சி.
    X
    தங்க முலாம் பூசப்பட்ட கலசத்தை மீண்டும் பொருத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த காட்சி.

    தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தையொட்டி 12 அடி உயர கலசம் பொருத்தும் பணி

    தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தையொட்டி 216 அடி விமான கோபுரத்தில் 12 அடி உயர கலசம் பொருத்தும் பணி நடந்தது. மற்ற சன்னதிகளின் கலசங்கள் இன்று(வெள்ளிக் கிழமை) பொருத்தப்படுகிறது.
    உலக பாரம்பரிய சின்னமாக உள்ள தஞ்சை பெரிய கோவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் துறையின் பராமரிப்பில் இருந்து வருகிறது. இந்த கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் வருகிற 5-ந் தேதி(புதன்கிழமை) நடக்கிறது.

    கும்பாபிஷேகத்தையொட்டி தொல்லியல்துறை, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    கும்பாபிஷேகத்துக்காக கோவில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்கில் யாகசாலை பூஜைக்காக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. யாகசாலை பூஜைகள் நாளை(சனிக்கிழமை) மாலை தொடங்குகிறது. கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜை கடந்த 27-ந்தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.

    இங்குள்ள பெருவுடையார் சன்னதியில் உள்ள 216 அடி விமான கோபுர கலசம் மற்றும் பெரிநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, சண்டீகேஸ்வரர், நடராஜர் உள்ளிட்ட பல்வேறு சன்னதிகளின் கோபுர கலசங்கள் திருப்பணிக்காக கழற்றப் பட்டது.

    பெருவுடையார் சன்னதியில் உள்ள 216 அடி உயரமுள்ள மூலவர் கோபுரத்தில் 12 அடி உயரம், 4½ அடி அகலத்துடன் கூடிய செம்பினால் ஆன கலசம் பொருத்தப்பட்டிருந்தது. இந்த கலசத்தின் தன்மை குறித்து கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் கதிரியக்க பிரிவின் தலைவரும், விஞ்ஞானியுமான வெங்கட்ராமன் தலைமையில் மேனகா உள்ளிட்டவர்கள் அடங்கிய குழுவினரும், இந்திய தொழில்நுட்ப கழகத்தின் உலோகவியல் பேராசிரியர் முருகையன் அமிர் தலிங்கம் தலைமையிலான குழுவினரும் ஆய்வு செய்தனர். பின்னர் நவீன கருவியின் உதவியுடன் கலசத்தின் தன்மை அறியப்பட்டது.

    இதையடுத்து அனைத்து சன்னதிகளின் கலசங்களும் சுத்தப்படுத்தப்பட்டு, தங்கமுலாம் பூசும் பணி நடந்தது. 334 கிராம் எடை தங்கத்தினால் தங்கமுலாம் பூசும் பணி நிறைவடைந்ததையடுத்து மீண்டும் அதிகாரிகள் குழுவினர் வந்து பார்வையிட்டனர்.

    இதையடுத்து விமான கோபுர கலசம் நேற்று மீண்டும் பொருத்தப்பட்டது. முன்னதாக கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள், ஓதுவார்களால் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, ஊழியர்கள் மூலமாக கயிறு கட்டி 12 அடி உயரமுள்ள கலசத்தில் மகாபத்மா, ஆரடா, மகாகுடம், சிறிய ஆரடா, மலர், குமிழ் உள்ளிட்ட 8 பாகங்களும் கோபுரத்திற்கு காலை 10.30 மணிக்கு அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது. மாலை 4 மணிக்கு அனைத்து கலச பாகங்களும் பொருத்தப்பட்டது. இதில் 225 கிலோ வரகு தானியங்கள் கொண்டு நிரப்பப்பட்டது. கலசம் பொருத்தப்பட்ட பிறகு மீண்டும் 7 சிவாச்சாரியார்கள் பூஜை நடத்தினர். பின்னர் ஓதுவார்களால் மந்திரம் சொல்லப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

    இதேபோன்று பெரியநாயகி அம்மன், விநாயகர், சுப்பிரமணியர், வராஹி, சண்டீகேஸ்வரர் சன்னதிகளின் கலசம் இன்று (வெள்ளிக்கிழமை) ெபாருத்தப்படுகிறது.

    இது குறித்து ஸ்பதி செல்வராஜ் கூறுகையில், ‘‘பெரியகோவில் விமான கோபுர கலசத்திற்கு மட்டும் 190 கிராம் தங்கம் பயன்படுத்தி முலாம் பூசப்பட்ட பின்னர் முறையாக பொருத்தப்பட்டது. கலசம் கீழே விழாமல் இருக்க துருப்பிடிக்காத திருகுகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. மற்ற 6 சன்னதி கலசத்திற்கும், 144 கிராம் தங்கம் என 334 கிராம் தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மற்ற சன்னதிகளில் பொருத்தப்பட உள்ள கலசங்களுக்கு 5 மூட்டை வரகு பயன்படுத்த உள்ளோம்.

    இதேபோல் புதிய கொடிமரத்தில் பொருத்தப்பட்டு இருந்த தாமிரத்தகடும் பாலீ‌‌ஷ் செய்யப்பட்டு நாளை(அதாவது இன்று) பிரதி‌‌ஷ்டை செய்யப்பட உள்ளது’’ என்றார்.
    Next Story
    ×