என் மலர்
வழிபாடு
மாப்பிள்ளை வீரன் கோவிலில் பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் வினோத திருவிழா
- வாழைப்பழம் வீசும் வினோத திருவிழா நேற்று மாலை நடந்தது.
- வாழைப்பழத்தை பக்தர்கள் பிடித்து உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த தகட்டூரில் மாப்பிள்ளை வீரன் திருமேனி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த மாதம் (மார்ச்) 28-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து, விழா நாட்களில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் வீதிஉலா காட்சி நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் வினோத திருவிழா நேற்று மாலை நடந்தது.
முன்னதாக தகட்டூர் பைரவர் கோவிலில் இருந்து கப்பரை எடுத்து வரப்பட்டது. கப்பரையானது சுமார் 5 கி.மீ. தூரம் கொண்டு வரப்பட்டு கோவிலை வந்தடைந்தது. பின்னர், பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ராதாகிருஷ்ண சாமியார் வீசிய வாழைப்பழங்களை போட்டி போட்டு பிடித்து சாப்பிட்டனர்.
சாமியார் வீசும் இந்த வாழைப்பழத்தை பக்தர்கள் பிடித்து உண்டால் குழந்தை பாக்கியம் கிட்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பின்னர், இரவு சுவாமி வீதிஉலா காட்சி நடைபெற்றது. தொடர்ந்து, இன்று (புதன்கிழமை) காலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக நேற்று காலை முதலே கோவில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிவர்த்தி செய்ய ஆயிரக்கணக்கான உருவபொம்மைகளை வாங்கி வைத்து விளக்கேற்றி வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து, குதிரை எடுத்தல் நிகழ்ச்சியும் நடந்தது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வாய்மேடு போலீசார் செய்திருந்தனர்.