என் மலர்
வழிபாடு
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் கருடசேவை மங்களாசாசனம் நிகழ்ச்சி நாளை நடக்கிறது
- பிரம்மோற்சவ விழா ஜூன் 7-ந்தேதி வரை நடக்கிறது.
- 1-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நவதிருப்பதி தலங்களில் 9-வது தலமான ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் கோவிலில் சுவாமி நம்மாழ்வார் வைகாசி திருநட்சத்திரத்தில் அவதரித்ததை முன்னிட்டு ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா 15 நாட்கள் நடைபெறும்.
விழாவின் 5-வது நாள் சுவாமி நம்மாழ்வார் சிறப்பு அலங்காரத்துடன் மங்களா சாசனம் வரவேற்க பூப்பந்தல் மண்டபத்திற்கு எழுந்தருள்வார். அன்று இரவு கருட சேவை நிகழ்ச்சி சிறப்பு வாய்ந்தது. அப்போது நவதிருப்பதி பெருமாளை வரவேற்று மங்களா சாசனம் நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த ஆண்டு சுவாமி நம்மாழ்வார் அவதார விழாவை முன்னிட்டு பிரமோத்சவ விழா 24-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் சுவாமி நம்மாள்வார் அவதார திருவிழா தொடங்கியது. விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி அஜீத், தக்கார் கோவல மணிகண்டன், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருவிழா நாட்களில் தினமும் காலையில் தங்கதோளூக்கினியன் வீதி புறப்பாடும், மாலையில் இந்திர விமானம், புஷ்ப பல்லக்கு, புன்னை மர வாகனம், தங்க திருப்புளி வாகனம் ஆகிய வாகனங்களில் சுவாமி நம்மாழ்வார் சிறப்பு அலங்காரத்திலும் வீதி உலா நடக்கிறது. தொடர்ந்து ஜூன் மாதம் 7-ந் தேதி வரை விழா நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்ச்சியான 5-ம் நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) சுவாமி நம்மாழ்வார் சிறப்பு அலங்காரத்துடன் நவதிருப்பதி பெருமாள்கள் கொடி, குடை, ஆலவட்டம், பதாகைகள், திருச்சங்கு போன்றவைகளுடன் யானைகள் முன்வர ஊர்வலமாக நவ திருப்பதி எம்பெருமான்களை மங்களா சாசனம் வரவேற்க பூப்பந்தல் மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அன்று இரவு 9 மணிக்கு கருட சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான கருடசேவை நிகழ்ச்சியில் நவதிருப்பதி உற்சவரான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் எம்இடர்கடிவான், திருப்புளியங்குடி காய்சின வேந்தன், இரட்டை திருப்பதி அரவிந்தர லோசனர், தேவர் பிரான், பெருங்குளம் மாயக்கூத்தர், தென்திருப்பேரை நிகரில் முகில் வண்ணன், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள், ஆகியோரை வரவேற்று மங்களாசாசனம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நம்மாள்வார் அன்னவாக னத்திலும் மதுரகவி ஆழ்வார் தங்க பல்லக்கிலும் வீதி உலா வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஜூன் மாதம் 1-ந்தேதி (வியாழக்கிழமை) 9-ம் நாள் திருவிழாவில் காலை 8 மணிக்கு நம்மாழ்வார் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளுகிறார். அதை தொடர்ந்து காலை 8.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று மாலை 6 மணிக்கு தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலமும் நடைபெறுகிறது. ஜூன் 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) 10-ம் நாள் திருவிழாவான தீர்த்தவாரி தாமிரபரணி நதியில் காலையில் நடக்கிறது.