என் மலர்
வழிபாடு
மறவன்குடியிருப்பு புனித தஸ்நேவிஸ் மாதா ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது
- இந்த திருவிழா நாளை தொடங்கி ஆகஸ்டு 7-ந்தேதி வரையும் 10 நாட்கள் நடக்கிறது.
- 6-ந்தேதி இரவு 9 மணிக்கு அன்னையின் தேர் பவனி நடக்கிறது.
நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் உள்ள புனித தஸ்நேவிஸ் மாதா ஆலயத்தில் பங்கு குடும்ப திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 7-ந்தேதி வரையும் 10 நாட்கள் நடக்கிறது.
இதையொட்டி இன்று (வியாழக்கிழமை) முன்னோர் தோட்டம் பரலோக மாதா சிற்றாலயத்தில் நம்பிக்கை ஊட்டிய முன்னோர்களுக்கு நன்றி விழா நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, 6 மணிக்கு கல்லறை மந்திரிப்பு, 6.30 மணிக்கு திருப்பலி நடக்கிறது. இதற்கு பங்குத்தந்தை ஜோசப் அருள் ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.
நாளை காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு செபமாலை, 6.30 மணிக்கு பங்குத்தந்தை ஜோசப் அருள் ஸ்டாலினுக்கு ஊர்மக்கள் வரவேற்பு அளிக்கிறார்கள். இரவு 7 மணிக்கு கொடியேற்றமும், திருப்பலியும் நடக்கிறது. இதற்கு அருட்பணியாளர் மரிய வில்லியம் தலைமை தாங்க, அருட்பணியாளர் காட்வின் சவுந்தர்ராஜ் மறையுரையாற்றுகிறார்.
விழா நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் திருப்பலி, செபமாலை நடைபெறுகிறது. 31-ந்தேதி காலை 9 மணிக்கு பகல் நேர நற்கருணை ஆராதனை, மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீரும், இரவு 7 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழாவும் நடக்கிறது.
5-ந்தேதி காலை 6 மணிக்கு திருப்பலி, திருமுழுக்கு அருளடையாளம், மாலை 6 மணிக்கு செபமாலை, திருப்பலி நடைபெறுகிறது. இதற்கு கோட்டாறு மறை வட்ட முதல்வர் ஆன்டனி சகாய ஆனந்த் தலைமை தாங்க, அருட்பணியாளர் பெஞ்சமின் மறையுரையாற்றுகிறார்.
6-ந்தேதி காலை 6.30 மணிக்கு செபமாலை, 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. இதற்கு அருட்பணியாளர் ஆன்டனி பெர்க்மான்ஸ் தலைமை தாங்கி, அருளுரை வழங்குகிறார். மாலை 6 மணிக்கு செபமாலை, சிறப்பு மாலைப்புகழ் நடக்கிறது. இதற்கு அருட்பணியாளர் பேட்ரிக் சேவியர் தலைமை தாங்க, அருட்பணியாளர் வின்சென்ட் எட்வின் மறையுரையாற்றுகிறார்.
இரவு 9 மணிக்கு அன்னையின் தேர் பவனி நடக்கிறது. 7-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு திருப்பலி, காலை 7 மணிக்கு திருவிழா திருப்பலி நடக்கிறது. இதற்கு குருகுல முதல்வர் பேரருட்பணியாளர் கிலேரியுஸ் தலைமை தாங்கி, அருளுரையாற்றுகிறார். பிற்பகல் 2 மணிக்கு அன்னையின் தேர் பவனி நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீர், திருக்கொடி இறக்கம், இரவு 7 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜோசப் அருள் ஸ்டாலின், ஊர்தலைவர் ஆன்டனி எட்வின், செயலாளர் பால் வின்ஸ்டன், துணை செயலாளர் கிறிஸ்ல்டா, பொருளாளர் ஆரோக்கிய வினோத் மற்றும் பங்கு அருட்பணி பேரவை, பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.