என் மலர்
வழிபாடு
திருப்பதியில் 36 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
- 3 கிலோ மீட்டர் தூரம் வரை பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கின்றனர்.
- வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸில் அனைத்து அறைகளும் நிரம்பியது.
திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
கோடை விடுமுறையால் 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
நேரடி இலவச தரிசனத்திற்கு செல்லும் வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸில் அனைத்து அறைகளும் நிரம்பியது.
3 கிலோ மீட்டர் தூரம் வரை பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கின்றனர். நேரடி இலவச தரிசனத்தில் 36 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதி மலையில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
மாலை 4 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை சுமார் 5 மணி அளவில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது.
சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்து சாலைகளில் விழுந்தன. அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தினர்.
கிழ் திருப்பதியில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. பலத்த மழையின் காரணமாக தரிசனத்திற்கு வரிசையில் காத்திருந்த பக்தர்கள் கடும் குளிரிலும் நடுங்கியபடி வரிசையில் நின்றிருந்தனர்.
திருப்பதியில் நேற்று 74,583 பேர் தரிசனம் செய்தனர். 40,343 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.57 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.