என் மலர்
வழிபாடு
பள்ளிகொண்டா உத்திர அரங்கநாதர் கோவிலில் ரத சப்தமி அன்று 7 வீதிகளிலும் சாமி வீதி உலா வர கோரிக்கை
- வைகுண்ட ஏகாதசியின்போதுதான் தேர் ஏழு வீதிகளில் உலா வருகின்றது.
- ரத சப்தமி உற்சவம் ‘அர்த்த பிரம்மோற்சவம்’ என்று அழைக்கப்படும்.
வேலூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற கோவில்களில் உத்திர அரங்கநாதர் கோவிலும் ஒன்று. இந்தக் கோவிலில் நடைபெறும் விழாக்களில் ரத சப்தமியும் ஒன்றாகும். இந்த விழாவின்போது உற்சவர் பல்வேறு வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
இந்த நிலையில் நான்கு மாட வீதிகளில் மட்டும் திருவீதி உலா நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இதற்கு எதிப்பு தெரிவித்து பள்ளிகொண்டா மளிகை தெரு, மண்டபத் தெரு, கொத்தவள் தெரு, பஜனை கோவில் தெரு, பஜார் தெரு, உள்ளிட்ட பகுதி பொதுமக்கள் இந்து அறநிலையத்துறைக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளனர்.
அந்த மனுவில் உத்திர அரங்கநாதர் கோவில் மாடத் தெருக்களாக, மாடத் தெரு, சன்னதி தெரு, கோட்டை தெரு, மளிகை தெரு, மண்டப தெரு, கொத்தவள் தெரு, பஜனை கோவில் தெரு என ஏழு தெருக்களிலும் தேர், சப்பரம் சுற்றி பெரிய பஜார் வழியே சென்று நிலை கொள்ளும். தற்போது பிரம்மோற்சவம் மற்றும் வைகுண்ட ஏகாதசியின்போதுதான் தேர் ஏழு வீதிகளில் உலா வருகின்றது.
இந்த நிலையில் ரத சப்தமி உள்பட மற்ற உற்சவங்களின் போது நான்கு மாட வீதிகளில் மட்டுமே உலா வரும் புதிய உத்தரவை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அனைத்து தெருக்களிலும் வீதி உலா வருவதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நடைமுறைப்படுத்த வேண்டும.
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து கோவில் செயல் அலுவலர் நரசிம்ம மூர்த்தியிடம் கேட்டதற்கு பெருமாள் கோவிலில் நடைபெறும் ரத சப்தமி உற்சவம் 'அர்த்த பிரம்மோற்சவம்' என்று அழைக்கப்படும். அதாவது பிரம்மோற்சவத்தில் பாதி என்று பொருள். பிரம்மோற்சவம் 10 நாளும் பெருமாளை தரிசிக்க இயலாதவர்கள் ரத சப்தமி அன்று ஒரே நாளில் தரிசிக்க பெரியோர்களால் இவ்விழா ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஆகம விதிகளுக்கு மாறாக ஏற்பட்ட தவறு தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. ஆகம வல்லுனர்கள், பள்ளிகொண்டா ஸ்தலத்தர், தீர்த்தக்காரர், அருகிலுள்ள திவ்ய தேசமான சோளிங்கர், காஞ்சீபுரம் அத்திவரதர், திருக்கோவில்களில் ஆலோசனைகள் கேட்டு இந்த ஆண்டு முதல் இனிவரும் காலங்களில் பள்ளி கொண்டா கிராமத்தின் நலன், கோவில் நலன், மற்றும் ஆகம விதிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பள்ளி கொண்டா உத்திர அரங்கநாதர் கோவிலில் ரதசப்தமி உற்சவத்தில் பெருமாள் புறப்பாடு நான்கு மாட வீதிகளில் மட்டும் நடைபெறும் என்று கூறினார்.