என் மலர்
வழிபாடு
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது
- 19-ந் தேதி கோவில் நடை அடைக்கப்படும்.
- பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு கோவில் நடை 26-ந்தேதி திறக்கப்படும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து ஐயப்பனை தரிசிப்பார்கள். இதுதவிர மாத பூஜை, திருவிழா காலங்களிலும் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவது வழக்கம்.
இந்தநிலையில் பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நேற்று கிடையாது. அதே சமயத்தில் கோவில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றது.
இன்று (புதன்கிழமை) அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. இன்று முதல் 19-ந் தேதி வரை தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெறுகிறது.
மேலும் தந்திரி ராஜீவரு தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகளும் நடைபெறும். 19-ந் தேதி இரவு அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
பின்னர் பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை வருகிற 26-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 27-ந் தேதி காலை 9.45 மணிக்கு திருக்கொடியை ஏற்றி வைத்து 10 நாள் திருவிழாவை தந்திரி கண்டரரு ராஜீவரு தொடங்கி வைக்கிறார். ஏப்ரல் மாதம் 5-ந் தேதி பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெறும்.