என் மலர்
வழிபாடு
மார்ச் 3, 4-ந்தேதிகளில் கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழா
- தமிழகத்தில் இருந்து 3,500 பேர் பங்கேற்க அனுமதி.
- இலங்கையில் இருந்து 5 ஆயிரம் பேர் கலந்து கொள்ள அனுமதி.
ராமேசுவரம் :
இந்தியாவுக்கும்-இலங்கைக்கும் இடைப்பட்ட நடுக்கடல் பகுதியில் கச்சத்தீவு அமைந்து இருக்கிறது. இந்த கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம் பிரசித்தி பெற்றதாகும்.
1974-ம் ஆண்டு வரை இந்தியா வசம் இருந்த கச்சத்தீவு, பின்னர் இலங்கைக்கு கொடுக்கப்பட்டது.
கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டாலும் ஆண்டுதோறும் அங்குள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில், இருநாட்டு மக்களும் கலந்துகொள்ளலாம் என, அது சம்பந்தமான ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளது.
ஆண்டுதோறும் கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா பிப்ரவரி மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்திலோ நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான திருவிழா மார்ச் 3 மற்றும் 4-ந்தேதிகளில் நடைபெறுகிறது. விழாவின் முதல் நாளான மார்ச் 3-ந்தேதி மாலையில், ஆலயத்தின் முன்புள்ள கொடிமரத்தில் அந்தோணியாரின் உருவம் பதித்த கொடி ஏற்றப்படுகிறது.
இதைத்தொடர்ந்து ஆலயத்தை சுற்றி 11 இடங்களில் சிலுவைப்பாதை திருப்பலி நடைபெற்று, சிறப்பு பிரார்த்தனை நடைபெறும். இரவில் தேர் பவனி நடைபெற்று முதல் நாள் திருவிழா நிறைவுபெறும்.
2-வது நாளான மார்ச் 4-ந்தேதி காலை 7 மணி அளவில் 2-வது நாள் திருவிழா திருப்பலி பிரார்த்தனை யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் தலைமையில் நடைபெறுகிறது. இதில் இருநாட்டு பங்கு தந்தையர்களும், இருநாட்டு மக்களும் கலந்து கொள்கிறார்கள். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெறும் இந்த திருவிழா திருப்பலிக்கு பின்னர் கொடி இறக்கம் நடைபெற்று திருவிழா நிறைவடைகிறது.
கச்சத்தீவில் இந்த ஆண்டு நடைபெறும் புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஏற்பாடுகள் குறித்து நேற்று இலங்கை யாழ்ப்பாணத்தில் கலெக்டர் சிவபாதசுந்தரம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நெடுந்தீவு பங்குத்தந்தை, கடற்படை அதிகாரிகள் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில், இந்த ஆண்டு கச்சத்தீவு ஆலய திருவிழாவில் தமிழகத்தில் இருந்து 3,500 பேரும் இலங்கையில் இருந்து 5 ஆயிரம் பேரும் கலந்து கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு திருவிழாவில் இந்தியாவில் இருந்து 100-க்கும் குறைவானவர்களும், இலங்கையில் இருந்து 300 பேரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.