என் மலர்
வழிபாடு
சபரிமலையில் இன்று விமரிசையாக நடந்த படிபூஜை
- 19-ந்தேதி வரை படிபூஜை நடைபெறும்.
- 20-ந்தேதி சபரிமலை நடை அடைக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பக்தர்கள் லட்சக்கணக்கில் குவிந்து ஐயப்பனை வழிபட்டனர். 41 நாட்கள் நடந்த மண்டல பூஜை கடந்த மாதம் 27-ந் தேதியுடன் முடிவடைந்ததால் நடை சாத்தப்பட்டது.
அதன்பிறகு மகர விளக்கு பூஜை தொடங்கியது. இதற்காக கோவில் நடை 30-ந் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. நடை திறந்தது முதல் பக்தர்கள் அதிக அளவு வந்து ஐயப்பனை தரிசித்து சென்றனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான மகரவிளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் 14-ந் தேதி மாலை நடைபெற்றது.
இதனை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதன்பிறகு பக்தர்கள் 18-ம் படி வழியாக சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இரவு அரிவராசனம் பாடப்பட்டதும் கோவில் நடை சாத்தப்பட்டது.
சபரிமலையில் இன்று அதிக பொருட்செலவில் நடத்தப்படும் படி பூஜை தொடங்குகிறது. 19-ந் தேதி வரை படிபூஜை நடைபெறும். இதையொட்டி சபரிமலையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படையினரும் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
நாளை மறுநாள் (18-ந் தேதி) சபரிமலையில் சிறப்பு களபாபிஷேகம் நடக்கிறது.மறுநாள் (19-ந் தேதி) மாளிகப்புரத்தம்மன் கோவிலில் குருதி பூஜை நடக்கிறது.அன்றைய தினம் இரவு 9 மணி வரை மட்டுமே பக்தர்கள் சபரிமலையில் அனுமதிக்கப்படுவார்கள். 20-ந்தேதி பூஜை நிறைவடைந்ததும் சபரிமலை நடை அடைக்கப்படுகிறது.