என் மலர்
வழிபாடு
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மருத்துவாசுரன் சம்கார நிகழ்ச்சி
- அகோரமூர்த்தி சாமிக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
- கொன்றை மரத்தடியில் ஐதீக நிகழ்ச்சி நடந்தது.
முன்பு ஒரு காலத்தில் மருத்துவாசுரன் என்பவர் சிவபெருமானை வேண்டி நடுக்கடலில் தவம் இருந்தான். அவனுடைய தவத்துக்கு மெச்சிய சிவபெருமான் அவர் கேட்டபடி தனது சூலாயுதத்தை வழங்கினார். இதனை பெற்ற மருத்துவாசுரன் தேவர்கள் மற்றும் மக்களை துன்புறுத்தினான். இதை பொறுக்க முடியாமல் அவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர்.
இதுபற்றி அறிந்து வர சிவபெருமான், நந்தியை அனுப்பினார். அப்போது நந்தியின் காது, கொம்பை தன்னுடைய சூலாயுதத்தால் அசுரன் முறித்து விட்டான். இதனால் ஏற்பட்ட காயங்களை பார்த்த சிவபெருமான் தனது 5 அகோர முகத்திலிருந்து தீப்பிளம்பாக தோன்றினார். இதனைக் கண்ட அசுரன் பயந்து சிவபெருமானிடம் சரணாகதி அடைந்தான். அவனுடைய வேண்டுகோளை ஏற்று சிவபெருமான், திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் அகோரமூர்த்தியாக தனிச்சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் இந்திர திருவிழாவின்போது மருத்துவாசுரனை வதம் செய்யும் ஐதீக நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி கோவிலில் இந்திர திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று மருத்துவாசுரனை சம்காரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் அகோரமூர்த்தி பக்தர்கள் புடைசூழ தனது சன்னதியில் இருந்து மேளம், தாளம் முழங்க புறப்பட்டார். அப்போது முதல் மரியாதையாக சரபோஜி அக்ரஹாரம் சார்பில் கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் எம்பாவை யோகநாதன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட வேத விற்பனர்கள் வேத கோஷங்கள் முழங்கிட, பட்டு சாத்தி, பன்னீர் தெளித்து வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து உள்ளூர் மக்கள் பழங்கள், மாலை, பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கி வழிபட்டனர். பின்னர் மண்டபத்தில் அகோரமூர்த்தி சாமிக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனையடுத்து கொன்றை மரத்தடியில் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன், விழா குழுவினர், கிராம மக்கள் செய்து இருந்தனர்.