search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தோரணமலை முருகன் கோவில் தைப்பூச திருவிழா 5-ந்தேதி நடக்கிறது
    X

    தோரணமலை முருகன் கோவில் தைப்பூச திருவிழா 5-ந்தேதி நடக்கிறது

    • மலையைச்சுற்றி 64 சுனைகள் இருக்கின்றன.
    • இந்த சுனை நீரால் முருகப்பெருமானுக்கு தினமும் அபிஷேகம் நடக்கிறது.

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ளது தோரணமலை முருகன் கோவில். புகழ் பெற்ற இந்த கோவில் அகத்தியர், தேரையர் சித்தர் வழிபட்ட தலமாகும். 1,500 படிகளுக்கு மேல் மலை மீது முருகப்பெருமான் குகையில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மலையே தோரணம்போல் அமைந்து உள்ளதால் தோரணமலை என்ற பெயர் காரணத்துடன் விளங்குகிறது.

    மலையேறி முருப்பெருமானை தரிசனம் செய்வதற்கு பக்தர்களால் 1,300-க்கும் மேற்பட்ட படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது. மலையைச்சுற்றி 64 சுனைகள் இருக்கின்றன. இந்த சுனை நீரால் முருகப்பெருமானுக்கு தினமும் அபிஷேகம் நடக்கிறது. ஒவ்வொரு தமிழ் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு பூஜைகளும், விவசாயிகள் வாழ்வு முன்னேற சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது. மேலும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் நடைபெற்று வருகிறது.

    இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் வருகிற 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. அன்று காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.அதனைத்தொடர்ந்து கணபதி ஹோமம், பூஜைகள் நடக்கிறது. 8 மணிக்கு வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி திருக்கல்யாணம் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து ஊட்டி திருக்குந்த சப்பை படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனம் நடக்கிறது.

    பகல் 11.45 மணிக்கு விடுதலை போராட்ட தியாகிகள் மற்றும் உயிர்தியாகம் செய்த ராணுவ வீரர்கள் சிலரின் குடும்பத்தினர் கவுரவிக்கப்படுகிறார்கள். மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை நடக்க உள்ளது. மாலை 6 மணிக்கு தோரணமலை முருகன் கோவில் நிர்வாகம் மற்றும் திருச்சி அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பில் 501 சரவண ஜோதி திருவிளக்கு பூஜை நடக்க உள்ளது.

    இரவு 7 மணிக்கு திருமுருகன் உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    தைப்பூச நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் கே.ஏ.செண்பகராமன் செய்து வருகிறார்.

    Next Story
    ×