என் மலர்
வழிபாடு
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேரோட்டம்
- தேர் நகரின் முக்கிய வீதிகளில் 3 நாட்கள் சுற்றிவந்து நிலை சேர்கிறது.
- விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பல்வேறு தரப்பினர் அன்னதானம் வழங்கினர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 14 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. இந்த நிலையில் விழாவின் சிகர நிகழச்சியாக 10-ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது.
விழாவில், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன், முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி ஆகியோர் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
இந்த தேர் நகரின் முக்கிய வீதிகளில் 3 நாட்கள் சுற்றிவந்து நிலை சேர்கிறது. இதில் நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மையப்பனை தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பல்வேறு தரப்பினர் அன்னதானம் வழங்கினர். மேலும் விழாவில் அசம்பாவிதங்களை தவிர்க்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் டிரோன் மூலம் கண்காணிப்பு பணி நடந்தது.
முன்னதாக தேரோட்ட விழாவில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் சேகர்பாபு திருச்செங்கோட்டில் அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் அர்த்தநாரீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரிக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது வகுப்பறைகளில் சில மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் என கல்லூரி முதல்வரிடம் கூறினார். இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உடன் இருந்தார்.