என் மலர்
வழிபாடு
திருப்பதி பிரம்மோற்சவ விழா: இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு முன்னுரிமை
- 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் 5-ந்தேதி வரை பிரம்மோற்சவ விழா நடக்கிறது.
- கோவிலில் அனைத்து வகையான சிறப்பு தரிசனங்களும் ரத்து செய்யப்படுகிறது.
- அக்டோபர் மாதம் 1-ந்தேதி கருடசேவை நடக்கிறது.
வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின்போது இலவச தரிசனத்தில் செல்லும் சாதாரணப் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும், என திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதையொட்டி கோவிலில் அனைத்து வகையான சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்படுகிறது. திருமலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மாட வீதிகளில் பிரம்மோற்சவ விழா வாகனச் சேவை நடத்தப்படுகிறது. பிரம்மோற்சவ விழாவில் அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இலவச தரிசனத்தில் செல்லும் சாதாரணப் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வி.ஐ.பி. பிரேக் தரிசனம், வயது முதிர்ந்தவர்களுக்கான தரிசனம், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளின் பெற்றோருக்கான தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
மேலும் ஆர்ஜித சேவைகள் தரிசனம், ரூ.300 கட்டண தரிசனம், ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு காணிக்கை வழங்கும் பக்தர்கள், பிற அறக்கட்டளைகளுக்கு காணிக்கை வழங்கும் பக்தர்களுக்கான தரிசனம் என அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. புரோட்டோகால் வி.ஐ.பி.களுக்கு பிரேக் தரிசனம் மட்டுமே இருக்கும்.
பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய 50 சதவீத அறைகள் உள்ளன. மீதமுள்ள அறைகள் திருமலையில் உள்ள பல்வேறு கவுண்ட்டர்கள் மூலம் பக்தர்களுக்கு நேரில் வழங்கப்படும். அக்டோபர் மாதம் 1-ந்தேதி கருடசேவை நடப்பதால், அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே பக்தர்களின் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு அறக்கட்டளைகளுக்கு காணிக்கை வழங்கும் பக்தர்களுக்கு வருகிற 30-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 2-ந்தேதி வரை ஆன்லைனில் அல்லது நேரில் அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட மாட்டாது. காணிக்கையாளர்கள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
2 ஆண்டுகளுக்கு பிறகு வாகனச் சேவை நடப்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இதனால் திருமலையில் அறைகள் கிடைப்பது அரிது. அதற்கு பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.